Monday, August 5, 2013

இதுதான் இஸ்லாம்

மக்கா நகர குறைசிகள் இஸ்லாத்தின் எதிர்ப்பு காரணமாக முஸ்லிம்களைப் பெருங்கொடுமைப் படுத்தியபோது அபிசீனியா நாட்டை நேகஸ் என்ற
கிருத்துவ மன்னர் ஆண்டுவந்தார்.

இறைத்தூதர் முகம்மது நபி கேட்டுக் கொண்டதன்படி சில முஸ்லிம்கள் அந்நாட்டுக்குள் அடைகலம் புகுந்தனர்.

இதை அறிந்த குறைசிகள் இஸ்லாத்தைப் பற்றி அபிசீனியா மன்னரிடம் அவதூறுகள் கூறி அடைக்கலம் புகுந்தவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்
கேட்டனர்.

நெறி தவறாத அபிசீனியா மன்னர் முஸ்லிம்களை அழைத்து உங்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் என்றார்.

அன்று அடைக்கலம் தேடி அபிசீனியா வந்தவர்கள் கூறியதுதான்  இஸ்லாத்தின் அடிப்படை.

அவர்களின் தலைவன் ஜஃபர் அபுதாலிபு கூறியது இதுதான்.

இதைவிட ரத்தினச் சுருக்கமாக இஸ்லாத்தைப் பற்றி வேறு யாரும் சொல்லிவிட முடியாது.

பல மூடப்பழக்கங்களை இன்று சில முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களைத் தவறான வழியில் நடத்தும் சில தகாதவர்கள்தாம்.

அவர்களெல்லாம் பொருள், புகழ், அதிகாரம் தேடி தவறானவற்றைப் போதிப்பவர்களை விலக்கி, குர்-ஆனை முழுமையாகப் பொருள் உணர்ந்து வாசித்துத் தெளிவுபெற்றால் இஸ்லாத்திற்கு அதுவே பொற்காலம் ஆகும்.

*

ஓ.... மன்னா!

நாங்கள்
அறியாமையிலும்
ஒழுக்கக் கேட்டிலும்
மூழ்கிக் கிடந்தோம்

சிலைகளை
வணங்கிக் கொண்டும்
செத்தவைகளைப்
புசித்துக் கொண்டும்
வாழ்ந்திருந்தோம்

அட்டூலியங்கள்
அத்தனையையும்
அநாயாசமாய்ச்
செய்துகொண்டிருந்தோம்

உறவின் கயிறுகளை
அறித்தெறிந்தோம்

அயலாரைப்
படாதபாடு படுத்தினோம்

வலிமை கொண்டவர்கள்
வலிமை அற்றவர்களின் மீதேறி
சொகுசாகச் சவாரி செய்தோம்

எங்களில் இருந்து
ஓர் இறைத் தூதரை
இறைவன் எங்களுக்கு
அனுப்பித் தரும்வரை நாங்கள்
இப்படித்தான்
கேடுகெட்டு வாழ்ந்திருந்தோம்

எங்களிடம் அனுப்பட்ட தூதரின்
சத்திய வழி
நேர்மை
கண்ணியம்
பண்பு
தூய்மை
ஆகிய அனைத்தையும்
நாங்கள் நன்கறிவோம்

இறைவன் ஒருவனே என்றும்
அவனையே வணங்குதல் வேண்டும்
என்றும் அவர் கற்பித்தார்

கற்களையும் சிலைகளையும்
வணங்குதல்
வேண்டவே வேண்டாம்
என்றார்

சொல்லில் உண்மை
கொடுத்த வாக்கைக் காத்தல்
நம்பி ஒப்படைக்கப்பட்ட
பிறர் உடைமைக்கு துரோகம் இழையாமை
பெற்றோர் சுற்றத்தாரிடம்
அன்பும் கருணையும் கொண்டு நடத்தல்
குற்றம் புரிவதிலிருந்தும்
ரத்தம் சிந்துவதிலிருந்தும்
முழுவதும் விலகிக்கொள்ளுதல்
என்பனவற்றை
அழுத்தமாக எடுத்துரைத்தார்

தீமை கூடாது
பொய் கூடாது
திருட்டு கூடாது
பெண்களை இழித்தல் கூடாது
பொய்சாட்சி கூடாது
விபச்சாரம் கூடாது
என்றும் உறுதியாகக்
கட்டளை இட்டார்

ஒரே
இறைவனுக்காகவே
எங்கள் வணக்கங்கள் யாவும்
இருத்தல் வேண்டும் என்றும்

தொழுகை
நோன்பு
ஏழைவரி
ஆகியவற்றைக்
கடைபிடிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார்

நாங்கள்
அவரை நம்பினோம்

அவர் இறைவனிடமிருந்து
கொண்டுவந்த கட்டளைகளை
பின்பற்றி நடந்தோம்

ஆனால்
எங்கள் நாட்டவர்
எங்களுக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தனர்

எங்கள் நம்பிக்கையையும்
மார்க்கத்தையும்
நாங்கள் கைவிட வேண்டும் என்று
கடுமையாகத் துன்புறுத்தினர்

சிலை வணக்கத்திற்கும்
அழிவுப் பாதைக்குமே
நாங்கள் திரும்ப வேண்டும் என்று
எங்களைக் கட்டாயப்படுத்தினர்

உங்கள் நாட்டில்
அடைக்கலம் புகுந்துள்ளோம்

உங்கள் நீதியின்மீது
நம்பிக்கை கொண்டுள்ளோம்

எங்களைக்
கொடுமைக்குள்ளாக்கும்
எங்கள் எதிரிகளிடமிருந்து
எங்களைக் காப்பீர்கள் என்று
நம்புகின்றோம்


(ஆதாரம்: இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்)

Friday, July 19, 2013

கருணைதான் இறைவன்

விரோதமல்ல
      விருப்புதான் இஸ்லாம்
காட்டுவெறியல்ல
      கருணைதான் இறைவன்

Monday, January 21, 2013

இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது

இஸ்லாம் மன்னிப்பையே அதிகம் விரும்புகின்றது.

இறைவன் கருணையாளன், அளவற்ற அன்பாளன் என்றே அல்குர்ஆனின் முதல் வசனமே தொடங்குகின்றது.

மாபெரும் கருணையின் வடிவமான அல்லாஹ்வை விசுவாசிக்கும் முஸ்லிம்கள் அந்தப் பண்பையே தமது சமூக அரசியல், சட்ட நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும்.

- இலங்கை முஸ்லிம் அறிஞர் ஏ.பி.எம்.இத்ரீஸ்

Saturday, December 15, 2012

இஸ்லாத்தில் சுதந்திரம்

இணை வைப்பதைத் தவிர
மற்ற எல்லாவற்றிலும்
இஸ்லாத்தில் சுதந்திரம் உண்டு.

வாழச்சொல்வதே இஸ்லாம்,
சாகச் சொல்வதல்ல.

இஸ்லாத்தை
அறிவுடையோரிடமிருந்து
தெரிந்துகொள்ள வேண்டும்
அறிவில்லாதவர்களிடமிருந்து அல்ல.

Saturday, November 24, 2012

பகுதி நேர முஸ்லிம் - அப்துல் ரகுமான்

[சமவுரிமை மாத இதழில் கவிக்கோ அப்துல் ரகுமான்]

சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
‘டக்-ஆஃப்-வார்’
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?

நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்

உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
‘பயங்கரவாதி’ என்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

‘முஸ்லிம்’ என்ற
‘லேபிள்’ மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
‘ஜிஹாத்’ என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை

முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்

மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்ப்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
‘தக்வா’ வை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்

தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்கு மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
‘நஜீஸ்’ ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்

அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா…?

Saturday, November 3, 2012

இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்

இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்!

அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே!

அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!

எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.

அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.

சீனாவுக்குச் சென்றேனும் கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.

இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர்.

அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.

- அறிஞர் அண்ணா

Thursday, November 1, 2012

ஹதீதுகளின் பெயரால் சியாவின் சீர்கேடுகள் - எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி

ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம்,பிரிவு என்று அர்த்தமாகும்.

அலி(ரலி) அவர்களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட்டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத்தினர் “ஷீஅத்து அலி” என அழைக்கப்பட்னர்.

அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும்பலுக்கும் எத்தொடர்ப்புமில்லை என்பதால் நாளடைவில் “ஷீஆ” என்று அழைக்கப்படலானார்கள்.

உண்மையில் “ஷீஅத்து அலி” என்பதை விட “ஷீஅத்து இப்னு ஸபா” என்று அழைப்பதே பொறுத்தமானது.

ஷீஆகூட்டத்தின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு ஸபா ஒரு யூதன்.
இஸ்லாத்தைக் ஏற்றுக் கொண்டதாக நடமாடி முஸ்லிம்களுக்குள் ஊடுறுவினான்.

இஸ்லாத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கும் நோக்கமாக இவன் கையாண்ட பிரச்சாரங்களில் ஒன்று, அலி(ரலி) அவர்களுக்கும் நபிகளாரின் குடும்பத்தினருக்கும் முன்னுரிமை வழங்கி அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்பதேயாகும்.

இவனது பிரச்சாரத்தின் போலித்தன்மையை அலி(ரலி) உட்பட அனைத்து சஹாபாக்களும் நன்கு புரிந்திருந்தனர். எனவே இவனுடைய சூழ்ச்சியில் சஹாபாக்கள் சிக்கிவிடவில்லை.

“மரியாதைக்குரிய சஹாபாக்களான அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் அலி(ரலி)யிடமிருந்து அதிகாரத்தை தட்டிப்பறித்த அநியாயக்காரர்கள், தாங்கள் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டார்கள், அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.” என்று அப்துல்லாஹ் இப்னு சபா பிரச்சாரம் செய்வதை கேள்வியுற்ற அலி (ரலி) அவர்கள் அவனைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவன் பிடித்துவரப்பட்டதும் தாம் செய்த காரியத்தை ஏற்றுக் கொண்டான்.
அப்போது அலி(ரலி) அவனை தீயிலிட்டு கொன்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள்.

இதைக் கேட்ட மக்கள் அமீருல் முஃமினீனே! உங்களது நேசத்தின்பால் அழைப்பு விடுக்கக்கூடிய மனிதனை கொலை செய்யப் போகிறீர்களா? என்று கேட்டார்கள்.

அவனை மதாஇன் எனும் பகுதிக்கு அலி(ரலி) நாடு கடத்தினார்கள்.
இச்சம்பவத்தை அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைத் என்ற அறிஞர் ‘இவாருன் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ் ஷீஅத்தி என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் கிதாபுர் ரவ்லா மினல் காபி பகாம் 2, பக்கம் 246 என்ற நூலிலும் பதிவாகியுள்ளது.)

இதன் பின்பும் இவனது பிரச்சாரம் ஓய்ந்து விடவில்லை.

அலி (ரலி) கொலை செய்யப்பட்டபோது “அலி மரணிக்கவில்லை. அவர் வானத்தின் பால் உயர்த்தப் பட்டுள்ளார் அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையைக் கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர் மேகத்தில் இருக்கிறார். இடி அவரது ஓசை,மின்னல் அவரது பார்வையாகும்.” என அப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான்.

ஷீஆக்களின் இக் கொள்கையை ஸபஈய்யா என அழைக்கப்படுகிறது.. (நூல்: பிரகுன் முஆசிரதுன் தன்ஸிபு இலல் இஸ்லாமி, பாகம் 01, பக்கம் 145, அல்பிரகு பைனல் பிரக் பக்கம் 234)

அலி(ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையை உரிமை கொண்டாடும் கூட்டமும் ஷீஆவில் உருவானது.

இக்கூட்டத்தை நஸீரியா எனப்படும். (இக்கூட்டமும் இன்று சிரியாவில் ஆட்சி செய்கிறது.) இது தவிர ஸைதியா, இமாமியா, இஸ்னா அஷரியா, இஸ்மாயிலியா, பாஹாயியா என பல பிரிவுகள் ஷீஆக்குள் தோற்றம் பெற்றன.

தங்களுடைய அபத்தமான பிரச்சாரங்களை முன்னெடுத்து இஸ்லாத்தின் அடிப்படைகளை ஒன்றன்பின் ஒன்றாக தகர்ப்பதில் தீவிரம் காட்டிய இக்கூட்டம் தங்களுடைய போலித்தன்மை வெளிப்படக்கூடாது என்பதற்காக “அலி(ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் (அஹ்லுல்பைத்) மீதும் நேசத்தை காண்பிப்பது” என்ற முகமூடியை அணிந்து கொண்டு போலி ஹதீஸ் களை உருவாக்கினர்.

அலி(ரலி) அவர்களும் அவர்களது குடும்பமும் விஷேடமான மண்ணால் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்புகள் என்றும் அவர்கள் மனித சமுதாயத்தில் தனித்துவமானவர்கள் என்றும் அலி(ரலி)க்கு வந்த நபித்துவம் முஹம்மத் நபிக்கு ஜிப்ரீல்(அலை) கொடுத்து விட்டுப் போனார் என்றும் வாதிட ஆரம்பித்தனர்.

இதுபற்றி கூறும்போது: “அல்குர்ஆனை(வஹீயை) அலிக்கு கொடுக்குமாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பிவைத்தான். அலியும் முஹம்மதும் தோற்றத்தில் ஒன்றாக இருந்ததனால் அலிக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப் போனார்” என்கிறார்கள். (நூல்: அல்மனீயா வல்அமல். பக்கம். 30)

ஷீஆவின் இக்கொள்கையை குராபிய்யா எனப்படும்.

அலிக்குரிய நபித்துவ உரிமையை முஹம்மத் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.

அல்லாஹ்வும் ஜிப்ரீலும் உரிய முறையில் நியாயம் தீர்க்கவுமில்லை என்றே இன்று வரை ஷீஆக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

எனவே முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனையும் ஹதீஸ்களையும் மொத்தமாக நிராகரித்ததோடு அவர்களுக்கென கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

அத்தோடு நிற்கவில்லை. இறை நம்பிக்கையின் (ஈமானின்) அடிப்படை கோட்பாடுகளையே மாற்றி விட்டு புதிய கலிமாவை கொண்டு வந்தார்கள்.
“இஸ்லாம் ஐந்து விடயங்களின்மீது நிறுவப் பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4.ஹஜ் 5.விலாயத்து அலி. (அலியின் தலைமைத்துவத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்றார்கள். (நூல்: அல்காபி)

நபி(ஸல்) அவர்கள் போதித்த உலக முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்ற கலிமாவுக்கு இது முரணானதாகும்.

“விலாயத்து அலி ஈமானின் அம்சம்” என்று ஒருபோதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்ததில்லை.

அலி(ரலி) பெயரில் ஒரு மதத்தை உருவாக்குவது என்ற நிலையில் இவர்கள் கண்டுபிடித்த கலிமா தான் இது.

இக்கலிமாவின் மூலம் இவர்களைத் தவிர ஏனையவர்கள் காபிர்கள் என்று முடிவுகட்டினார்கள்.

ஸஹாபாக்களை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்தவர்கள், மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அபூதர் அல்கிபாரி (ரலி) ஸல்மா னுல் பாரிஸி (ரலி) ஆகியோரைத் தவிர எல்லா ஸஹாபாக்களும் காபிர்களாகி விட்டனர் என்றார்கள். (நூல்: கிதாபுர் ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245)

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தங்களது உயிர், செல்வம் அத்தனையும் அர்ப்பணித்து சித்திரவதைகள் பலதை சந்தித்து பிறந்து வளர்ந்த மண்ணை விட்டும் வெளியேறி ஹிஜ்ரத்கள் செய்து யுத்தங்களை எதிர்கொண்டு மரணித்த உத்தம ஸஹாபாக்களை-அல்லாஹ்வினாலும் நபி(ஸல்) அவர்களாலும் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட ஸஹாபாக்களை –காபிர்களாக (முர்தத்களாக)வும் நயவஞ்சகர்களாகவும் ஷீஆக்கள் அன்று முதல் இன்றுவரை பேசிவருகின்றனர்.

“ஆட்சி அதிகாரம்” அலி(ரலி)க்குரியது என்று கூறியவர்கள் பிறகு அலிக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்தினருக்கும் ஷீஆ வின் பரம்பரையில் வந்த பன்னிரெண்டு இமாம்களுக்கும் அந்த அதிகாரம் உரியது என்றும் வாதிட்டனர்.

முஹம்மது இப்னு அலி ஹுசைன் இப்னு பாபவைஹி என்கின்ற ஷீஆக்காரர் கூறும்போது “எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (எமது) இமாம்களது தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட நபித்துவத்தை மறுத்தவர் போலாவார்”.

எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பின்னால் வந்த இமாம்களது தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறாரோ அவர் எல்லா நபிமார்களின் நபித்துவத்தையும் ஏற்றுக்கொண்டு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்க மறுத்தவன் போலாவான்” என்றார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதாத் பக்கம் 103)

எவர் அலி (ரலி)யின் தலைமைத்துவத்தையும் அவருக்குப் பின்னால் வந்த (ஷீஆ) இமாம்களின் தலைமைத்துவத்தையும் ஏற்க மறுக்கிறாரோ அவர்கள் நிரந்தர நரகவாதிகள் என்பதை அறிவிப்பதுதான் ஷிர்க், குப்ர் என்ற வார்த்தையின் விளக்கமாகும் என முல்லா முஹம்மது பாகிர் மஜ்லிஸி என்ற ஷீஆக்காரர் குறிப்பிடுகிறார். (நூல்: பிஹாருல் அன்வார் 23ஃ90)

ஷீஆ என்கின்ற கொள்கையை ஏற்காமல் இருக்கும் எல்லா முஸ்லிம்களும் ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இன்றுவரை அனைவரும் காபிர்கள் நரகவாதிகள் என்பது ஷீஆக்களின் உறுதியான கொள்கையாகும்.

ஆனால் முஸ்லிம்களுடன் பேசும் போதும் பழகும் போதும் “ஷீஆவும் சுன்னியும் ஒன்றுதான்” எனக் கூறி தங்கள் கொள்கையின் விபரீதம் மக்கள் புரியா வண்ணம் நடிப்பார்கள்.

இவ்வாறு நடிக்க வேண்டும் என்பதே இவர்களது மதக் கொள்கையாகும். இதனை “தக்கிய் அல்லது துக்யா” எனப்படும். ஷீஆவின் கொடூரம் பற்றி அறியாத அப்பாவி முஸ்லிம்கள் மாட்டிக் கொள்வதோடு அவர்களை “ஷீஆ முஸ்லிம்” என அழைக்கிறார்கள்.

இஸ்லாத்தின அடிப்படைகளை தகர்த்து விட்டு சஹாபாக்களை காபிர்கள் என்ற கொள்கையுடையவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

ஷீஆவின் ஆன்மீகத்தின் குருபீடமாக அலி(ரலி)அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சித்தரித்ததுடன் அவர்களை தனிமனித வழிபாட்டுக்குரியவர்களாகவும் ஆக்கினார்கள்.

தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்களை முன்வைத்தால்தான் சமூக அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக போலி ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.

நானும் இம்ரானுடைய மகன் ஹாருனும் ஸகரியாவின் மகன் யஹ்யாவும் அபூதாலிபின் மகன் அலியும் ஒரே மண்ணிலிருந்து படைக்கப்பட்டோம். (நூல்: அல்பவா இதுல் மஜ்மூஆ பில்அஹா தீஸில் மவ்லூஆ பக்கம்.342)

நானும் அலியும் ஒரே ஒளியிலிருந்து படைக்கப்பட்டு ஆதம் (அலை)படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் அர்ஷின் வலது பக்கத்தில் இருந்தோம். (அல் பவாஇதுல் மஜ்மூஆ பில்அஹாதீஸில் மவ்லூஆ பக்கம்.343)

ஆதம் (அலை)தவறிழைத்தப்போது, யாஅல்லாஹ்! முஹம்மதின் பொருட்டாலும் அலி பாதிமா ஹஸன் ஹூசைன் ஆகியோரின் பொருட்டாலும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்று மன்னிப்பு கேட்டபோது அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான். (நூல்: அல்மவ்லூஆத் லிஇப்னி ஜவ்ஸி)

அஹ்லுல்பைத் எனும் எனது குடும்பம் நூஹ் நபியின் கப்பலைப் போன்றது. யார் அதில் ஏறினாரோ அவர் வெற்றிப் பெற்றார். யார் ஏறவில்லையோ அவர் அழிந்து விட்டார். (நூல்: மின்ஹாஜுல் கராமா பக்கம் 172)

எனக்குப் பின்னால் பன்னிரெண்டு இமாம்கள் இருக்கிறார்கள். அவர்களின் இறுதியானவர் மஹ்தியாவார். அவர்களின் தலைவர் அலி (ரலி)ஆவார். அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்டவராவார். அவர்களுக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்த வராவார். அந்த பன்னிரெண்டு இமாம்களில் ஒருவரைக்கூட நிராகரித்தவர் என்னை நிராகரித்தவராவார். (நூல்: ரிஸாலாதுல் இஃதிகாதத் பக்கம் 103)

பன்னிரெண்டு இமாம்களும் எனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எனது விளக்கத்தை (அறிவை) அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். அவர்கள் எனக்குப் பின்னால் கலீபாக்களாக இருப்பார்கள். அவர்கள் என்னால் வஸீயத்து செய்யப்பட்டவர்களாகவும் எனது பிள்ளைகளாகவும் எனது பரம்பரையைச் சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள். அவர்களுக்கு வழிப்பட்டவர் எனக்கு வழிப்பட்டவராவார். அவர்களுக்கு மாறுசெய்பவர் எனக்கு மாறுசெய்தவராவார். வானம் பூமியின் மீது வீழ்வதை விட்டும் அவர்கள் மூலமாக அல்லாஹ் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் பூமியில் வாழ்வதனால்தான் அல்லாஹ் பூமியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். (நூல்: யவ்முல் இக்லாஸ் பீ லில்லில் காஹிமில் மஹ்தி பக்கம் 45)

சஹாபாக்களை சுவனவாசிகள் என்று ஏற்க முடியாது என மறுத்து போலி ஹதீஸ்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியதனால் ஷீஆக்கள், ராபிழிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

ஹதீஸ்களை உருவாக்குவதில் இவர்களில் மூன்று சாரார் உள்ளனர்.

முதலாவது சாரார்:

நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை (ஹதீஸை) செவியுற்றால் அதனை ஒரு அடிப்படையாக அல்லது முன்னுதாரணமாக “மோடலாக (Model)” வைத்து பல ஹதீஸ்களை உருவாக்குவர். தம் இஷ்டம் போல் ஹதீஸ்களில் கூட்டல் குறைத்தல்களை மேற்கொள்வர்.

இரண்டாவது சாரார்:

ஷீயாக்களின் இமாம்களில் ஒருவரான ஜஃபர் ஸாதிக் பெயரால் ஹதீஸ்களை உருவாக்கி, இந்த ஹதீஸை ஜஃபர் ஸாதிக் அறிவித்தார். அவருக்கு இன்னார் இன்னார் அறிவித்தனர் எனக் கூறி இறுதியில் நபி (ஸல்) அவர்கள்தான் இந்த ஹதீஸைக் கூறினார்கள் என்று கூறுவர். (ஜஃபர் ஸாதிக் பெயரில் முஸ்லிம்களுக்குள் இருக்கும் பக்தியின் காரணமாக அவர் பெயரில் மவ்லீதையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த உண்மையை அறியாத பலர் உள்ளனர்)

மூன்றாம் சாரார்:

தங்கள் புத்திக்குப்பட்ட செய்திகளை யெல்லாம் அவர்கள் விரும்புகின்ற பிரகாரம் கூறி அவைகளையும் ஹதீஸ்கள் என்று அறிமுகப்படுத்துவார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் அல் மவ்லூஆத், பாகம் 1, பக்கம் 338)

போலி ஹதீஸ்களை உருவாக்கும் கேந்திரஸ்தலமாக மத்திய நிலையமாக கூபா நகரம் அமைந்திருந்தது.

ஷீஆக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு நகரமாக அன்றும் இன்றும் இது காட்சியளிக்கிறது.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும்போது, ஈராக் வாசிகளே! ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அதிகமான நபித் தோழர்கள் அங்கு சென்றதுதான் இதற்கான காரணம். நாங்கள் அறிந்த விஷயங்களையே அவர்கள் அறிவித்தார்கள். உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்கள் தான் வந்தார்கள். ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவிக்கிறீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? என்று ஆட்சேபித்தார்கள். (நூல: தாரீகுல் கபீர், பாகம் 1, பக்கம் 69)

போலி ஹதீஸ்களை உருவாக்கும் இவர்களது வேகத்தைப் பற்றி இமாம் சுஹ்ரி (ரஹ்) அவர்கள் விபரிக்கையில் “எங்களிடமிருந்து ஒருசாண் அளவு ஹதீஸ் வெளியானால் அவர்களிடமிருந்து ஒரு முழம் அளவு ஹதீஸ் வெளியாகிறது.” என்று கூறினார்கள். (நூல: இப்னு அஸாகிர்)

அதாவது நாங்கள் ஸஹீஹான ஒரு ஹதீஸை அறிவித்தால் ராபிளாக்கள் அது போன்று பத்து மடங்கு ஹதீஸ்களை உருவாக்கி விடுகிறார்கள் என்று அவர்களது பயங்கரமான போக்கை இமாம் சுஹ்ரி (ரஹ்) எடுத்துக் காட்டுகிறார்கள்.

அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி என்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் வந்து, நாங்கள் மதீனாவில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து கேட்கும் ஹதீஸ்களை ஈராக்கில் ஒரே ஒரு நாளில் கேட்டு விடுகிறோமே இது எப்படி என்று கேட்டார். அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறும்போது “உங்களிடம் உள்ளது போன்று நாணய உற்பத்தி செய்யும் இயந்திரம் எங்களிடம் இல்லை. நீங்கள் இரவில் அச்சடித்து பகலில் செலவுசெய்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். (நூல்: அல்முன்தகா பக்கம்-55)

கள்ள நாணயங்கள் (நோட்டுக்கள்) அச்சடித்து உண்மையான பண நோட்டுக்களுடன் கலந்து பாவனைக்கு விட்டுவிடுவது போல் போலிஹதீஸ்களை உருவாக்கி உண்மையான ஹதீஸ்களுடன் கலந்து விடுவதில் இவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்.

ஹம்மாத் இப்னு ஸலமா(ரஹ்) கூறுகிறார்கள். ராபிளாக்களைச் சார்ந்த ஷைக்கு ஒருவர் என்னிடம் அவர்களது நிலையைப் பற்றி கூறும்போது “நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு விஷயத்தை நல்லதென கருதினால் அந்த விஷயத்தை (செய்தியை நபியவர்கள் கூறிய) ஹதீஸாக உருவாக்கி விடுவோம்” என்றார். (நூல்: மின்ஹா ஜுஸ் ஸுன்னா பாகம்.1 பக்கம்12- தத்ரீபுர்ராவி. பாகம்.1 பக்கம் 285)

தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த அம்சத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்களோ அதனை ஹதீஸ் என்ற பெயரில் உருவாக்கி விடுவதற்கும் தங்கள் பணிக்கு எச்செய்தி தடையாக இருப்பதாக உணர்கிறார்களோ அதனை முறியடித்து விடுவதற்கும் போலி ஹதீஸ்களைப் பயன்படுத்தி விட்டு நபியின்மீது பழியை சுமத்திவிடுவார்கள்.

“ராபிளாக்களிடமிருந்து செய்திகளை பெற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அவைகளை மார்க்கமாக எடுத்துக் கொள்கின்றனர் என இமாம் ஷரீக் இப்னு அப்துல்லாஹ் அல்கானி (ரஹ்) கூறுகிறார்கள். (நூல்: மின்ஹஜுஸ் ஸுன்னா, பாகம் 01, பக்கம் 13)

“ராபிளாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்டபோது அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள். என்றார்கள். (நூல்: மின் ஹாஜுஸ் ஸுன்னா பாகம் 1, பக்கம் 13)

பொய்யின் முழுவடிவமாகச் செயல்பட்ட இவர்களிடமிருந்து வரும் எந்தவொரு செய்தியையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது மற்றவர்களுக்கு அறிவித்துவிடவும் கூடாது என்று அவர்களது முகத்திரையைக் கிழித்துக் காட்டினார்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும்போது: பொய்யைக் கொண்டு சாட்சி சொல்லக் கூடிய மனோ இச்சையைப் பின்பற்றக் கூடிய ராபிளாக்களை விட ஒரு கூட்டத்தை நான் கண்டதில்லை என்றார்கள். (நூல்: இக்திஸாரு உலூமில் ஹதீஸிலி இப்னி கஸீர். பக்கம் 109)

அலி(ரலி) அவர்களின் சிறப்புக்கள் பற்றி ராபிளாக்கள் உருவாக்கிய ஹதீஸ்களை கணக்கிட முடியாது என இமாம் இப்னுல் கையும் (ரஹ்) கூறுகிறார்கள்.

இமாம் அபூயஃலா ரஹ்) கூறும் போது அலி(ரலி) மற்றும் அஹ்லுல்பைத்கள் சிறப்பு பற்றி ராபிளாக்கள் உருவாக்கிய ஹதீஸ் மூன்று இலட்சத்தைச் சாரும் என்கிறார்கள். (நூல்:அல் மினாருல் முனீப் பக்கம்116. அல்வல்உ வில் ஹதீஸின் நபவி, பக்கம்76)

போலி ஹதீஸ்களை முன்வைத்து தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்ற போக்கில் ராபிளாக்கள் களம் இறங்கினாலும் இவர்களின் அபத்தங்களை இமாம்கள் தக்க சமயத்தில் அடையாளம் காட்டினார்கள்.

சஹாபாக்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ராபிளாக்கள் உருவாக்கிய பொய்யான சில ஹதீஸ்களை கவனியுங்கள்.

உமர் (ரலி) சிஹாக் என்ற விபச்சார பெண்ணுக்குப் பிறந்தவர். அப்துல் முத்தலிப் அப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தபோது பிறந்தவர் தான் உமர்!

அபூ பக்கர் (ரலி) ஷைத்தானின் கொம்பு! அபூபக்கரும் உமரும் பொய்யர்கள் அநியாயக்காரர்கள் நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்!) எவர் அவ்விருவரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாரோ அவர் ஜாஹிலியத்தான வழிகேடான மரணத்தையே தழுவினார்.

நிச்சயமாக உஸ்மான் (ரலி) சபிக்கப்பட்ட அசத்தியத்தில் இருந்தவர். எவர் உஸ்மானை ஏற்றுக் கொண்டவராக மரணித்தாரோ அவர் காளைமாட்டை வணங்கியவனை விட மிகப்பெரிய பாவத்தை செய்த அநியாயக்காரனாக மரணித்தவராவார்.

(இச்செய்தி ஷீஆக்களின் அடிப்படை கொள்கைகளை விளக்கும் நூல்களான உஸுலுல் காபி, பிஹாருல் அன்வார், ஹக்குல் யகீன் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதாக அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைதி அவர்கள் “ஹிவாருல் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ்ஷீஅதி எனும் தனது நூலில் விபரிக்கிறார். பக்கம் 42, 43)

சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட இந்த உம்மத்தின் அதி சிறப்புக்குரிய அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோரை ஷீஆக்கள் எந்தளவு கேவலமாக மதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

முஆவியா எனது மிம்பரின் மீது நிற்கக் கண்டால் அவரைக் கொன்று விடுங்கள். (நூல்: ஷரஹ் நஹ்ஜுல் பலாகா பாகம் 01, பக்கம் 135)

யாஅல்லாஹ்! முஆவியாவுக்கும், அம்ரு இப்னுஆஸ் அவர்களுக்கும் பித்னா எனும் ஆடையை அணிவிப்பாயாக! அவர்கள் இருவரையும் நரகத்தில் தள்ளி விடுவாயாக (நூல்: மேற்படி நூல் பாகம் 01, பக்கம் 135)

முஆவியா(ரலி)யையும் அம்ரு இப்னு ஆஸ்(ரலி)யையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக தங்கள் வெறுப்பை வெளிக்காட்டும் முகமாக இப்படியான போலி ஹதீஸ்களை உருவாக்கி அச்சுறுத்தல் விடுத்தனர்.

அலி (ரலி)அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மக்களின் நிலையைக் கண்ட ஷீஆக்கள் அந்த மரியாதையை துரும்பாக பயன்படுத்திக் கொண்டு அலி (ரலி) அவர்களின் சிறப்புக்களைப் போற்றிப் புகழ்ந்து இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி ஹதீஸ்களாகக் கூறி தங்கள் ஷீஆக் கொள்கையை வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு கூறப்பட்ட சில செய்திகளைப் பாருங்கள்:

“யார் ஆதம் (அலை)யின் அறிவையும், நூஹ் (அலை)யின் விளக்கத்தையும், இப்றாஹீம் (அலை)யின் பொறுமையையும், யஹ்யா (அலை)யின் பற்றற்ற தன்மையையும், மூஸா (அலை)யின் தோற்றத்தையும், ஈஸா (அலை)யின் இபாதத்தையும், காண விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் அல்மவ்லூ ஆத் பாகம் 01, பக்கம் 17)

எவர் இப்றாஹீம் நபியின் சகிப்புத் தன்மையைப் பார்க்க விரும்பு கிறாரோ எவர் நூஹ் நபியின் அறிவைப் பார்க்க விரும்புகிறாரோ எவர் யூசுப் நபியின் அழகைப் பார்க்க விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும். (மேற்படி நூல்: பக்கம் 17)

அலி (ரலி) அவர்கள் ஒரு வேலைக்காகப் போய், சூரியன் மறைந்த பின் வந்தார்கள். நபியவர்கள் அலியைப் பார்த்து ‘அலியே! அஸர் தொழுது விட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு அலி (ரலி) இல்லை என்று கூறினார். உடனே நபியவர்கள் யா அல்லாஹ்! அலி உனது தேவைக்காகவும் உனது நபியின் தேவைக்காகவும் போய்வந்தார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆகவே மறைந்த சூரியனை (அஸர் தொழுகைக்காக) நீ மீண்டும் உதிக்கச் செய்வாயாக’ என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சூரியன் உதித்தது. அலி(ரலி) அஸர் தொழுத பின் சூரியன் மறைந்தது. (நூல்: அல் மவ்லூஆத் பாகம் 01, பக்கம் 15)

என்னை மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஒரு மலக்கை கடந்து சென்றேன். அம்மலக்கு வெள்ளியிலான ஒருகட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய ஒரு கால் கிழக்கிலும் மற்றக்கால் மேற்கிலும் விரிந்து இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த ஒரு பலகையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். உலகம் முழுவதும் அவருடைய இரு கண்களுக்கு மத்தியில் இருந்தன. படைப்புக்கள் அனைத்தும் அவருடைய இரு முழங்கால்களுக்கு மத்தியில் இருந்தது. அவருடைய கை மேற்கையும் கிழக்கையும் எட்டக் கூடியதாக நீண்டு இருந்தது.

ஜிப்ரீலே இவர் யார் என்று நான் கேட்டேன். இவர்தான் இஸ்ராயீல்! அவரிடம் சென்று ஸலாம் கூறு என்று ஜிப்ரீல் எனக்குக் கூறினார். நான் அவருக்கு ஸலாம் கூறினேன். அவரும் ஸலாத்திற்கு பதில் கூறி விட்டு உமது சாச்சாவின் மகன் அலி என்ன செய்கிறார் என்று வினவினார். எனது சாச்சாவின் மகன் அலியை நீங்கள் அறிவீர்களா என்று கேட்டேன். நான் எப்படி அவரை அறியாமல் இருப்பேன். உங்களது உயிரையும் உங்கள் சாச்சாவின் மகன் அலியின் உயிரையும் தவிர மற்றப் படைப் பினங்களின் உயிர்களை கைப்பற்றும் பொறுப்பை அல்லாஹ் எனக்கு ஒப்படைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ், உங்கள் இருவரினதும் உயிர்களை அவன் நாட்டப் பிரகாரம் கைப்பற்றுவான் எனக் கூறினார். (நூல: அல்மவ் லூஆத் பாகம் 01, பக்கம் 14,15)

உம்முஸலமாவே!. அலி எனது மாமிசத்தையுடையவர். அவருடைய இரத்தம் எனது இரத்தமாகும். மூஸா நபியிடம் ஹாருன் (அலை)க்குரிய அந்தஸ்து என்னிடத்தில் அலிக்கு உண்டு. அலியுடன் பொறாமைப்பட்டவர் என்னுடன் பொறாமைப்பட்டு நிராகரித்தவராவார். வானங்கள் மற்றும் பூமி படைக்கப் படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சுவனத்தின் வாயிலில் இறைத்தூதரின் சகோதரர் அலி ஆவார் என எழுதப்பட்டிருந்தது.(நூல்: அல்வல்உ வில்ஹதீஸின் நபவி பக்கம்77)

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு மதீனா திரும்பும் வழியில் “கதீர்கம்” எனும் இடத்தில் எல்லா ஸஹாபாக்களையும் ஒன்று கூட்டி அலி (ரலி) அவர்களின் கையைப் பிடித்து கொண்டு இவர் என்னால் வஸீயத்து செய்யப்பட்டவர். எனது சகோதரர். எனக்குப் பிறகு கலீபாவாக வர இருப்பவர். எனவே இவருக்கு கட்டுப்பட்டு வழிப்படுங்கள் எனக் கூறினார்கள். (நூல்: அஸ்ஸுன்னா வ மகானதுஹா பித்தஷ்ரீ இல் இஸ்லாமி பக்கம் 79,80)

நான் அறிவின் தராசு, அலி அதன் இரு தட்டுக்கள், ஹஸன், ஹுஸைன் அத் தராசியின் கயிறுகள். பாதிமா தராசியின் தொடராக இருக்கிறார்.

எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசியின் தூண்கள். அத்தராசியில்தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், வெறுப்பவர்களுடையவும் செயல்கள் அளக்கப்படுகின்றன. அந்த நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் கண்டிக்கப் படமாட்டான்.

அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோரை வெறுப்பது பாவமாகும். அந்த வெறுப்போடு செய்யப்படும் நன்மைகள் பயன்தராது.

நான் கல்வியின் பட்டணம் அலி (ரலி) அதன் வாயில். எவர் அறிவைப் பெற நாடுகிறாரோ அவர் அந்த வாயிலுக்கு வரட்டும். (நூல்: அல் மவ்லூஆத், பக்கம் 350)

அலி (ரலி) மனிதர்களில் சிறந்தவர் என்று எவர் கூற வில்லையோ அவர் காபிராகி விட்டார். (நூல்: அல்மவ்லூஆத், பக்கம் 347)

முஹம்மதே! அலி (ரலி) மனிதர்களில் சிறந்தவர். எவர் அவரை மறுக்கிறாரோ அவர் காபிராகி விட்டார் என ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார். (மேற்படி நூல்: பக்கம் 348)

அலி (ரலி)யை பார்ப்பது வணக்கமாகும். இபாதத்தாகும். (மேற்படி நூல்: பக்கம் 360)

அல்லாஹ் ஆதம் நபியைப் படைப்பதற்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னால் நானும் அலியும் அல்லாஹ்விடத்தில் ஒளியாக இருந்தோம். அல்லாஹ் ஆதமைப் படைத்தபோது அந்த ஒளியை இரு பிரிவாக பிரித்தான். அதில் நான் ஒரு பிரிவாகவும் அலி ஒரு பிரிவாகவும் ஆகினோம். (மேற்படி நூல்: பக்கம் 14,15)

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம். அப்போது ஒரு பறவை அதன் வாயில் பச்சை நிற முத்தை சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் மடியில் போட்டது. அதனை நபியவர்கள் எடுத்து முத்தமிட்டு விட்டு அதனைத் திறந்து பார்த்தார்கள். அதில் பச்சை நிறமுத்து இருந்தது. அதில் லாஇலாஹ இல்லல் லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் அலியின் மூலமாக நபிக்கு உதவியுண்டு என்றும் எழுதப் பட்டிருந்தது. (மேற்படி நூல்: பக்கம்-15)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளியில் இருந்தபோது அலியைப் பார்த்து அல்லாஹ் உனக்கு எனது மகள் பாதிமாவை மணம்முடித்துத் தந்துள்ளான் என்று கூறி இதோ ஜிப்ரீல் எனக்கு இப்போது அறிவித்தார்.

நாற்பதாயிரம் மலக்குகளை சாட்சிகளாக வைத்து பாதிமாவை உனக்கு மணம் முடித்து தருகிறேன். (மண மக்களான) அலி பாதிமா மீது முத்து பவளங்களைச் சொரியுமாறு அல்லாஹ் (சுவர்க்கத்திலுள்ள) மரத்திற்கு கட்டளை யிட்டான். அது அவர்கள் மீது முத்து பவளங்களைச் சொரிந்தது. ஹுருல் ஈன்களும் அலியின் மீது முத்து பவளங்களை சொரிந்தனர் (மேற்படி நூல்: பக்கம் 15,16)

பகட்டான புகழாரத்தை உருவாக்கி போலி ஹதீஸ்களை உண்டாக்கிய ஷீஆவின் இப்போக்கைப்பற்றி இமாம் இப்னு அபீ அதீத் (ரஹ்) அவர்கள் கூறும்போது, “அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக பொய்யின் அடிப்படை, சிறப்புக்களை பற்றி குறிப்பிடும் ஹதீஸ்களாகத்தான் ஷீஆக்களிடமிருந்து வந்தது” என்று கூறுகிறார் கள். (நூல்: நஹ்ஜுல் பலாஹா பாகம் 02. பக்கம் 134)

அலி(ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புக்கள் அடங்கிய (நீண்ட சுருள்) ஏடு ஒன்று இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு(முழம்) அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விட்டார்கள். இச்செய்தியை அறிவிக்கும் இமாம் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் தமது முழங்கையை காண்பித்து இந்தளவு இப்னு அப்பாஸ்(ரலி) அழித்தார்கள் என்றார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)

அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா(ரஹ்) கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒரு மடல் வரையுமாறும் (அதில் குழப்பவாதிகளான ஷீஆக்களின் கருத்துக்கள்) எதுவும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டி கடிதம் எழுதினேன்.(கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் “அவர் நல்ல பிள்ளை. அவருக்காக நான் சில விஷயங்களை நன்கு தேர்ந்தேடுத்து சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்து விடப்போகிறேன்.” என்று கூறிவிட்டு அலி (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புக்களைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அவற்றில் சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு (குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது “இப்படியெல்லாம் அலி(ரலி)அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது வழி தவறியவர்தான் இப்படித் தீர்ப்பளித்திருப்பான்” என்று கூறினார்கள். (நூல்: முகத்திமது முஸ்லிம்)

அலி(ரலி) அவர்கள் அளிக்காத தீரப்புக்கள் சொல்லாத செய்திகள் அவர்களது பெயரால் ஷீஆக்கள் புனைந்து வைத்ததையே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அழித்ததோடு ஷீஆவின் துரோகத்தையும் அடையாளம் காண்பித்தார்கள்.

Sunday, October 28, 2012

மைமி மா என்றொரு முஸ்லிம் பெண்

வியட்நாமில் புத்த மதத்தில் பிறந்த மைமி மா வியட்நாம் போர் காரணமாக நான்கு வயதிலேயே அனாதை ஆக்கப்பட்டார்.

தன் சகோதரியின் மூலம் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு ஆப்பிரிக்கா சென்றார்.

அங்கே 1980களில் பள்ளியில் பயிலும்போது முஸ்லிம் மாணவிகளின் மூலம் இஸ்லாம் மார்க்கம் பற்றி அறியும் வாய்ப்பினைப் பெற்றார்.

அதன் பின்னர், தன் சகோதரியுடன் அமெரிக்காவுக்குச் சென்றபோது, மைமி மா பதின்ம பருவத்தை அடைந்திருந்தார்.

தொடக்கத்தில், முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வான கருத்தைக் கொண்டிருந்த மைமி மா, ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் இருந்தபோது கிடைத்த உண்மையான அனுபவத்தால், முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் வேதமான குர்ஆனைப் பற்றியும் சரியான கருத்தைப் பெற்றார்.

தன் 18ம் வயதில் ‘இண்டியானா போர்டிங் ஸ்கூல்’ என்ற அமெரிக்கப் பள்ளியில் பயிலும்போதுதான் இஸ்லாமிய வேதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினார்.

பெண்ணுரிமை என்பது பிறமதங்களில் பேசப்படுகின்றது ஆனால் அது இஸ்லாத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை அறிந்துகொண்டார். 1988 ஆம் ஆண்டில் இஸ்லாத்தில் இணைந்தார்.

இதனால் அவருடைய சகோதரியாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். எனவே, அமெரிக்க-இஸ்லாமியத் தொடர்பு இயக்கமான CAIR (Council of American-Islamic Relations) அலுவலகத்தை அணுகினார்.

அவர்களின் வழிகட்டலுடன், தானாகவே தனது இஸ்லாமிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, முகம்மது என்ற முஸ்லிம் கணவருடன் அமைதியாக வாழ்ந்துவருகின்றார்.

தற்போது West Palm Beach என்ற Florida மாநிலத்து நகரில் கணவருடன் வசிக்கும் மைமி மா, தலைத் துப்பட்டாவுடன் வெளியில் சென்று வரும்போது, அவரை அமெரிக்கர் என்றோ ஆசியன் என்றோ மக்கள் கருதுவதில்லை. மாறாக, அவரை அரபு நாட்டுப் பெண் என்றுதான் கருதுகின்றனராம்!

தன்னை நோக்கி விடுக்கப்படும் வினாக்களுக்குத் தகுந்த விடைகளைத் தயாராக வைத்துள்ளார் இவர். இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று கூறும் எவருக்கும் தகுந்த வாயாப்புக் கொடுக்கும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.

குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்! எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று? சொத்துரிமை இல்லையா? கல்வி கற்கக் கூடாதா? மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா? தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா? ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா? சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

பெண்ணுரிமையே மைமி மாவின் மாற்றத்திற்குப் பிரதான காரணமாகும்.

நோக்கம் எதுவாயிருந்தாலும், மத மாற்றத்தின் பின் சொந்த-பந்தங்களால் ஒதுக்கப்படுவது உறுதி. அதுதான் மத மாற்றத்தின் மிகப் பெரிய பாதிப்பு என்கிறார் மைமி மா.

“எனினும், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி நான் எடுத்த முடிவுக்கு முன்பாக, உறவு முறைகளால் ஒதுக்கப்பட்ட நிலை எம்மாத்திரம்? அது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை!” என்கிறார்.

“ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு. ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம். இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது.

பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!” என்கிறார் மைமி மா.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிவதும், குறிப்பாக ஏழைகளை மகிழ்விப்பதும், வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடுவதும் இந்த மாதத்தில் மைமி மாவைக் கவர்ந்தவையாகும்.

நன்றி:
http://www.usislam.org/converts/elizabeth.htm
http://adirainirubar.blogspot.in/2012/10/17.html#comment-form

Saturday, October 27, 2012

இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள்

முகம்மது நபி வாழும்போதே குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது எதிரிகளுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீதுகளோ எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்தன. எனவே ஹதீத் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இஸ்லாத்தின் எதிரிகள் இட்டுக் கட்டினார்கள்.

இந்தப் பொய்களை அறிஞர்கள் களையெடுக்கும் முயற்சியில் அன்று இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

இதோ சில இட்டுக்கட்டிய ஹதீதுகள்:

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம்

நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும்.

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும்.

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

உப்பை விட்டுவிடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது.

எந்த ஒரு மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின் தண்ணீர் இருக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும்.

மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.

ரஜப் மாத நோன்பு பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை

ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலதுல் கத்ர் இரவுக்கான தொழுகை குறிப்பிட்ட பகல்

குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

முகம்மது என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களைத் தடவுதல்

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மத குருமார்கள்

மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும்

போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான்.

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள்

என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று

உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள்

வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர்

போன்றவராவார்.

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.

மன்னர்களுக்குத் தண்டனை இல்லை மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.

அலீயைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்

துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் வேண்டுதல் கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது..

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை.

மறைந்த சூரியன் அலீ அவர்களுக்காக மீண்டும் உதித்தது.

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார்.

உண்ணும் போது பேசக் கூடாது.

நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.

வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.

இவைபோலவே இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளை நீக்க முயன்ற அன்றைய நாள் அறிஞர்களின் கவனத்திலிருந்து விடுபட்ட ஹதீதுகள் இன்று நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்

பெண்களின் தொழுகை வரிசைகளில் கெட்டது முதாலவது வரிசையாகும்

சுவனத்திலிருந்து இறங்கி வந்தபோது, தம் முன்னோரான நபி மூஸா அவர்களை இடையில் சந்திக்க, அன்னார்,"முகம்மதே! உம் இறைவனிடமிருந்து பெற்றுவந்த அன்பளிப்பு யாது?" என்று கேட்டார். "ஐம்பது வேளைத் தொழுகை" என முகம்மதவர்கள் சொல்ல, அதற்கு மூஸா,"இதை உம் சமுதாயத்தினர் செய்ய ஆற்றல் பெற மாட்டார்" எனக் கூற, இறைவனிடம் மீண்டும் சென்ற நபிக்கு, ஐந்தைந்தாகக் குறைத்துப் பின்னர் ஐந்தாக வழங்கினான். 

ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி


ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

நால்வகை ஹதீதுகள்

ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்று முகம்மத் நபி கூறினார் என்பது திர்மிதீயில் உள்ள முதலாவது ஹதீத்.

1. நபிகள் நாயகத்திடமிருந்து நேரடியாக இதைக் கேட்டவர் இப்னு உமர் என்ற நபித்தோழர்.
2. இப்னு உமரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் முஸ்அப் பின் ஸஃது.
3. முஸ்அப் பின் ஸஃதுவிடமிருந்து கேட்டவர் ஸிமாக்.
4. ஸிமாக் என்பாரிடமிருந்து கேட்டவர்கள் இருவர். 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா
5.1. இஸ்ராயீலிடமிருந்து கேட்டவர் வகீவு
5.2. அபூ அவானாவிடமிருந்து கேட்டவர் குதைபா
6.1. வகீவுவிடமிருந்து கேட்டவர் ஹன்னாத்
6.2. குதைபாவிடமிருந்து கேட்டவர் திர்மிதீ
7. ஹன்னாத்திடமிருந்து கேட்டவர் திர்மிதீ

இந்த அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடர் ஒரு ஹதீதை ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்க அவசியமானது.

இந்தச் சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் அனைவரும்

1. நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2. உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. நேர்மையில் சந்தேகமற்றவர்களாக இருக்க வேண்டும்
4. அவர்களுக்கு அறிவிப்பவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இவற்றில் தேரினால்தான் அதை ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் ஆகும்.

அத்துடன் மிக முக்கியமாக ஹதீதின் கருத்துகள் குர்-ஆனுக்கு முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

அப்படி இல்லாமல். ஹதீதின் தரம் தெரியாமலா அந்த ஹதீத் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர், இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நான்கு லட்சம் ஹதீதுகளை இமாம் புகாரி திரட்டினார். ஆனால் அவற்றுள் நான்காயிரத்துக்கும் சற்று அதிகமான ஹதிதுகளை மட்டுமே ஏற்கப்பட்டன.

அதாவது ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்படியானால் எந்த அளவுக்குத் தீயவர்கள் ஹதீதுகளில் கலப்படம் செய்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.

இமாம் புகாரியைப் பொருத்தவரை தான் தொகுத்தவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை ஆதாரப் பூர்வமானவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை என்ற கருத்தையே கொண்டிருந்தார்.

தவறான ஹதீதை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விசயம் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

அதுபோலவே, ஆதாரப்பூர்வமானவை என்று அறிவிக்கப்பட்ட ஹதீதுகள் கால ஓட்டத்தில் நம்பகத்தன்மை இல்லாதவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

அதற்கான முக்கிய அளவுகோள் குர்-ஆனோடு ஒப்பிட்டு அதன் கருத்துக்களை நோக்குவதுதான்.

குர்-ஆனோடு எந்த வகையில் முரண்பட்டாலும் அவற்றை மறுதளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமை.

 குர்-ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீதுகள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீதுகள் விடயத்தில் மெளனம் காத்து விட வேண்டும். 

ஹதீதுகள் முக்கியம் என்று குர்-ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

முஸ்லிமும் சாதிப்பெயரும்

அறியாமையுடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற பெயரின் காரணமாக எவரையும் ஓரங்கட்டி வைக்கும் அளவுக்கு எனது இறைவன் என்னை முற்போக்காளன் ஆக்கிவிடவில்லை. 

அன்புடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற சாதிப் பெயர்கள் நாம் வாழும் நிலப்பகுதியின் காரணமாக செய்யும் தொழிலைக் கொண்டு உருவானது.

மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.

இப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதியைப் பிரித்தார்கள் பிராமணர்கள்.

தொழில் அடிப்படையில் உருவான பெயர்களை அதனால் நாம் மறுதளிக்கவேண்டும்.

உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை.

சுன்னாவும் ஹதீதுகளும்

சுன்னா என்ற அரபிச் சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள்.

ஆரம்ப காலத்தில் முகம்மது நபியின் வாழ்க்கைமுறை குர்-ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள்.

தங்களின் சொந்தக் கருத்துக்களை முகம்மது நபி அவர்கள் கூறியவை என்றார்கள் அதாவது சுன்னா என்று கூறினார்கள்.

ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீதுகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஆதாரம் உள்ள ஹதீதுகளுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீத்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

அன்றைய காலத்தில் நபி அவர்களைப் பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்களுக்கு சொன்னவர்கள் யார் யார் என்று அத்தனை பேர்களையும் சொல்லி முடித்தால்தான் அதை உண்மையான ஹதீத் என ஏற்பார்கள்.

இப்படி அறிவிக்கும் இந்த செய்திகளையும் வடிகட்டினார்கள். சில ஹதீதுகளை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை ஏற்பார்கள்.

இவர்களில் யாராது ஒருவர்

-பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா?

-ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்கூடியவர்களா?

-தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்கூடியவர்களா?

-மறதியினால் மாற்றிச் சொல்லக் கூடியவர்களா?

இப்படி பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.

ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா என்பதைக் கண்டுபிடிப்பது என்பது உண்மையில் இயலுமான காரியமாக இல்லை.

காலமெல்லாம் பொய் சொல்லாமல் ஏதோ ஒரு சமயத்தில் பொய் சொல்பவர்கள் உண்டு. சந்தர்ப்ப சூழலால் பொய் சொல்பவர்கள் உண்டு.

கட்டாயத்தால் பொய் சொல்பவர்கள் உண்டு.

நன்மையை விளைவிக்கும் என்று அவரே ஓர் முடிவினை எடுத்துப் பொய் சொல்பவரும் உண்டு.

எனவே இறைவனைத் தவிர வேறு எவராலும் ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது இயலுமான காரியமாக இல்லை.

ஆகவே To the best of our knowledge (நாங்கள் அறிந்தவரை) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதன் அடிப்படையில் இருக்கும் தகவல்களைக் கொண்டு அவர்கள் அறிந்தவரை நியாயமான முறையில் முடிவெடுத்தார்கள்.

ஒரு செய்தியைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்ல வேண்டும் என்றால் அந்தச் செய்தியின் வார்த்தைகளும் எழுத்துக்களும் மாற்றாமல் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மையான ஹதீதுகள் செவிவழிச் செய்தியாகவே வந்திருக்கின்றன.

அதுவும் 200 ஆண்டுகளுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அதுவும் படிப்பறிவே இல்லாத பெரும்பான்மையினரிடமிருந்து. இதில் மனிதப் பிழை நிகழ ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

அறிவிப்பாளர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்றாலும், அவர்கள் நல்லவர்களே என்றாலும் பொய்யே சொல்லாதவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என்றாலும் ஒரு செய்தியை பத்துப் பன்னிரண்டு தலைமுறைகளுக்குக் கடத்தும் போது அதில் ஒரு வார்த்தை மாறினாலும் பொருள் மாறும் நிலை இருந்தது.

ஆகவே இதையும் அவர்கள் அறிந்தவரை நியாயமான முறைவில் முடிவெடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.

Friday, October 26, 2012

ஆறு ஹதீத் நூல்களுக்கு முன்னும் பின்னும் எத்தனை நூல்கள்?

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய ஆறு ஹதீத் நூல்களும் தொகுக்கப்பட்டன.

இவற்றுக்கு முன்னும் இதே காலகட்டத்திலும், வேறு பல ஹதீத் நூல்கள் "முஸன்னஃப்" என்றும் "முஸ்னது" என்றும் தொகுக்கப்பட்டன .

முஸன்னப் என்றால் தலைப்புகளின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை. முஸ்னத் என்றால் அறிவிப்பாளர்களின் வரிசைப்படி தொகுக்கப்பட்டவை.

ஹதீதுகள் வேவ்வேறு நபித்தோழர்கள், தாபியீன்கள் மூலம் கிடைத்தன. தாபியீன்கள் என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.

இன்றைய ஆறு ஹதீத் நூல்களுக்கு 100 வருடங்கள் முந்தைய வேறு பல ஹதீத் நூல்களில் முக்கியமான சிலவற்றின் பெயர்கள்:

1. மாலிக் - 92-179ஹி - மதீனா
2. ஷாபியீ - 150-204ஹி - மக்கா
3. அகமது - 164-241ஹி - ஈராக்
4. தவ்ரீ - 097-161ஹி - ஈரான்
5. அவ்சயீ - xxx-157ஹி - ஈராக்
6. இப்னு முபாரக் - xxx-181ஹி - ஈரான்
7. முகமதுபின் சலமா - xxx-167ஹி - ஈராக்
8. இப்னு உஜன்னா - 107-198ஹி - ஈரான்
9. இப்னு முஅம்மர் - xxx-191ஹி - ஏமன்

இமாம்களான ஹனபி, மாலிக், ஷாபியீ, ஹம்பலி போன்றோரில் ஹனபி எழுதிய ஹதீத் அல்லது மார்க்கச் சட்ட நூல்களில் இன்று எதுவும் தற்சமயம் காணப்படவில்லை என்றும் தற்சமயம் ஹனபி மத்ஹபு பெயரில் வரும் நூல்கள் அபூஹனீபா (ஹனபி) அவர்களால் எழுதப்பட்டவையல்ல என்றும், அவருக்குப் பின் வந்தவர்கள் தொகுத்தளித்ததாகும் என்றும், இந்நூல்களுக்கும் அபூஹனீபா அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது சொந்தக் கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது என எண்ணி ஹனபி பெயரில் அறங்கேற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாய் பல ஹதீத் நூல்கள் உருவாகி பலவகையில் வேறுபாடுகளை உடைய இஸ்லாமியச் சட்டங்கள் மக்களிடையே அரங்கேறிக்கொண்டிருந்தன.

இவற்றுள் எது உண்மையில் முகம்மது நபி அவர்கள் சொன்னது அல்லது செய்தது என்றும் முகம்மது நபி அவர்கள் சொல்லாதது செய்யாதது என்றும் எவரும் அறியாதவர்களாய்க் குழம்பி இருந்தனர்.

இதனால் இம்மாதிரியான ஹதீதுகளைத் தொகுத்து அவற்றுள் சரியானவற்றை எடுத்துக்கொண்டு பிழையானவற்றை நீக்கவேண்டிய தேவை உருவானது.

சுன்னா வழி முஸ்லிம்கள் மட்டும் இச்சேவையில் ஈடுபட்டு அவர்களின் அறிவிற்கும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் அவர்களின் ஐயங்களுக்குப் பொருந்தவும் ஹதீதுகளை நீக்கியும் அங்கீகரித்தும் இன்றைய ஹதீது ஆறு நூல்களை உருவாக்கினர்.

ஹதீதுகள் அரபு மொழியிலேயே இருந்தன. முதன் முதலில் சஹீகுல் புகாரி என்ற நூல்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது.

இது முகம்மது நபி இறந்து சுமார் 1400 வருடங்கள் கழித்து 1959ல்தான் நிகழ்ந்தது.

இஸ்லாத்தின் அடிப்படை என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை என்ன?

அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவதா அல்லது பூட்டிக்கொள்வதா?

எது உண்மையான நபிவழி?

பெண்களை இழிவு படுத்துவதா? பெண்களின் மேன்மையை உயர்த்திப் பிடிப்பதா?

எது இறைவனின் உபதேசம்?

பெண்ணை அடிமைப்படுத்தி வாழ்வதா அல்லது அவள் மேன்மைக்கும் மதிப்புக் கொடுப்பதா?

இஸ்லாத்தை அடிப்படைவாதிகளின் கூடாரம் என்றும் தீவிரவாதிகளின் தொழிற்சாலை என்றும் நிறுவுவதற்காக உலகில் பல தீய சக்திகள் முயல்கின்றன. அவர்களுக்கு வெற்றிதேடித்தருவதா உண்மையான ஈமான்?

பெண்களையும் வாழவிடுங்கள் என்றால் அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?

ஏன் இந்தனை ஆணாத்திக்கத்தனம் இந்த நாகரிக காலத்திலும்?

ஆனால் ஒன்று, இன்று முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிவருகிறார்கள்.

அவர்களே அவர்களுக்கான இடத்தை அடையும்போது ஆணாதிக்கம் செயலிழந்து போகும்.

உண்மையான புரட்சியின் மறுபெயராக எழுந்த இஸ்லாத்தை வளர்ப்போம், வளர்வோம்!

பெண்களை இஸ்லாம் அடங்காப்பிடாரிகளாய் ஆகுங்கள் என்று ஊக்குவிக்கவில்லை.

அடிமைகளாகிப் போங்கள் என்றும் பரிந்துரைக்கவில்லை.

குர்-ஆனில் பெண்களைத் தாழ்த்தும் ஒரு வசனம் உண்டா?

Wednesday, October 24, 2012

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.

ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.

மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்

அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்

இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்

இதேபோல் எல்லா வகையான தீமைகளையும் எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும்தான் ஜிஹாத் எனப்படும்.

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டும் அல்ல மனதை நல்வழியில் ஈடுபடுத்தும் விடா முயற்சியும் ஜிகாத் ஆகும்.

இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, இஸ்லாத்தின் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது, அவ்வழியில் நேரிடும் கஷ்டங்களைவும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு மனதைப் பழக்குவது ஆகிய அனைத்தும் ஜிஹாத் ஆகும்.

 

இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள்?

ஐயத்தில் முஸ்லிம்:
இறைகாதலில் திளைத்து, இறைவனின் ஜ்யோதியில் மனம் ஒன்றி ஆன்மாவை சரணடையும் அத்வைத கோட்பாடுகளை கொண்ட முற்போக்கு முள்ளங்கி அச்சாரில் ஊறிப்போன புரட்சிகர இஸ்லாமியிக் கருத்தோட்டத்தில் இருப்பவர்கள் சிலரை சமீப காலத்தில் சந்திக்க நேர்ந்தது.

அன்புடன் முஸ்லிம்:
இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது என்று அழுத்தமாக நம்புபவன் நான். முஸ்லிம் எல்லோரும் ஒன்றுதான். பிரிவுகளே கிடையாது.

முஸ்லிம்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் கணக்கிட்டால், சிலருக்கு 1% கோளாறு இருக்கும் சிலருக்கு 99% கோளாறு இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆதாமின் மக்கள் பிழை செய்பவர்களே!

நல்ல பகுதிகளைப் பார்த்து நட்பு கொள்வதை நான் விரும்புகிறேன்.

அதனால் நல்ல பகுதிகள் மேலும் மேலும் வளர்ந்து பிழையானவை முட்களைப் போல உதிர்ந்துபோகும்.

அதற்கான அடிப்படை, எவரையும் இறைவனின் அன்போடும் இறைவனின் கருணையோடும் கையாள்வதே.

Tuesday, October 23, 2012

ஹதீது தொகுப்புகள் ஆறு

நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ஹதீதுகளைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர்.

அந்த ஹதீதுகள் அவர்களால் முடிந்தவரை மனப்பாடம் செய்யப்பட்டு சில செவி வழிச் செய்திகளாகவும், சில எழுதி வைத்தப் பிரதிகளாகவும் உருவாகின.

முகம்மது நபி இறந்த 200 ஆண்டுகள் தொடங்கி 300 ஆண்டுகள்வரை இஸ்லாத்தில் இணைந்த அரபி அல்லாதவர்கள் ஹதீதுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.
 
இக்காலக்கட்டத்தில் ஏராளமான ஹதீது தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் மட்டுமே ”உண்மையான ஆறு ஹதீது நூல்களின் தொகுப்பு” எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றன.

நூல் 1:   சஹீஹுல் புகாரி 
ஹிஜ்ரி 194 - 256 ல் வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த புகாரி என்பவரால் தொகுக்கப்பட்டது. நான்கு லட்சம் ஹதீதுகளை இவர் தொகுத்தார். அவற்றுள் சுமார் நாலாயிரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நூல் 2: ஷஹீஹ் முஸ்லிம் 
ஹிஜ்ரி 206 - 261 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 3: ஸூனன் நஸயீ 
ஹிஜ்ரி 214 - 303 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஸயீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 4: ஸூனன் அபூதாவூத் 
ஹிஜ்ரி 202 - 275 ல் வாழ்ந்த இராக்கைச் சேர்ந்த அபூதாவூத் என்ப்வரால் தொகுக்கப்பட்டது

நூல் 5: ஸூனன் திர்மிதீ 
ஹிஜ்ரி 209 - 279 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திர்மிதீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 6: ஸூனன் இப்னுமாஜா
ஹிஜ்ரி 202 - 273 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த இப்னுமாஜ்ஜா என்பவரால் தொகுக்கப்பட்டது.

கலீபா அபூபக்கர் ஆட்சிக்காலத்தில் தானும் ஓர் இறைத் தூதர் என்று பொய்யாக அறிவித்த முசைலமாவை அழிக்க நடந்த போரில் குர்-ஆனை மனப்பாடம் செய்து வைத்திருந்த எழுபத்தைந்துக்கும்மேற்பட்ட நபித்தோழர்கள் உயிரிழந்தார்கள்.

இதனால் நபித்தோழர் உமர் கலீபா அபூபக்கரை குர்-ஆனைத் தொகுத்துவிடும்படி கட்டாயப்படுத்தினார்.

முகம்மது நபி அப்படியோர் செயலைச் செய்யவில்லையே செய்யும்படியும் கூறவில்லையே என்று கலங்கிய கலீபா அபூபக்கர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் நபித்தோழர் உமர், கலீபா அபூபக்கரிடம் ஹதீதுகளைத் தொகுக்கும்படி கேட்டுக்கொள்ளவும் இல்லை அவரின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கவும் இல்லை.

கலீபா உமர் அவர்கள் தனக்கு ஹதீதுகளைத் தொகுக்கும் விருப்பம் இல்லை என்று அவரின் ஆட்சிக் காலத்தில் கூறியதோடு ஹதீதுகளைத் தொகுக்கக்கூடாது என்று உத்தரவும் இட்டதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் ஹதீதுகளை குர்-ஆனோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக முகம்மது நபி அவர்கள் ஹதீதுகளைத் தொகுப்பதைத் தடுத்தார்கள் என்றும் இந்த முடிவைத்தான் கலீபா உமர் பின்பற்றினார் என்றும் கூறப்படுகிறது.

கடலோர முஸ்லிம் வீட்டுக் கல்யாணம்

ஊரலசி உறவலசி
       உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
       பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
       வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
       அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
       முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
       தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
       ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
       உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
       பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
       நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
       அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
       முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
       நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
       பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
       அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
       பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
       இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
       ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
       மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
       மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
       அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
       புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
       வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
       இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
       மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
       குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
       சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
       செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
       வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
       உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
       கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
       பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
       சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
       மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
       எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
       நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
       சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
       ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
       முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
       தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
       சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
       வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
       முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
       சிரிப்பாளே பெண்ணின்தாய்