அளவற்ற அருளாளனின் - என்றும்
நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில் - நாளும்
குறைவற்று வாழ்பவனின்
நிறைவான அருள்நாளிது - நெஞ்சம்
நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை - ஏந்திக்
கொண்டாடும் திருநாளிது
மண்ணாளும் செல்வந்தரும் - பசியில்
மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே - தொழுது
உயர்கின்ற நன்நாளிது
இல்லாதார் நிலையறிந்து - நெஞ்சில்
ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க - வறுமை
அழிந்தொழியும் திருநாளிது
சொந்தங்கள் அள்ளியணைத்து - நட்பின்
பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால் - உறவைச்
செப்பனிடும் சுகநாளிது
உள்ளத்தின் மாசுடைத்தும் - தளரும்
உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும் - வலிய
நோன்பில்வரும் பெருநாளிது
நபிகொண்ட பண்பெடுத்து - அந்த
நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ - நம்மைச்
சேர்த்திழுக்கும் பிறைநாளிது
சமத்துவமே ஏந்திநின்று - என்றும்
சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி - எவர்க்கும்
அன்புசிந்தும் பொன்னாளிது
No comments:
Post a Comment