Saturday, September 29, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 009

பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார்

பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும் இழந்தார்

வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிபையும்
சிறு வயதிலேயே இழந்தார்

இறுதியாக பெரிய தந்தை அபுத்தாலிபிடம்தான் 
முகம்மது நபி வளர்ந்து வந்தார்

சிறுவனாக இருந்த போது ஆடு மேய்த்தார்

வளர்ந்தபின் வணிகம் செய்தார்

இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான
கணவரை இழந்த கதீஜாவை மணந்தார்

Friday, September 28, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 008

உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கினைப் பெற்ற 100 சிறந்தவர்களை மைக்கேல் ஹெச் ஹார்ட் என்பவர் தொகுத்தார்.

அதில் அவர் தேர்வு செய்த முதலாமவர் முகம்மது நபி அவர்கள்தான்.

நியூட்டனுக்கு  இரண்டாம் இடம்.

ஜீசசுக்கு மூன்றாம் இடம்.

புத்தருக்கு நான்காம் இடம்.

மார்க்கத்திலும் சமத்துவத்திலும் வெற்றிகளுக்கெல்லாம் வெற்றியை எட்டிப் பிடித்த வெற்றியாளர் முகம்மது நபி என்பது அவரின் கருத்து.

சிறந்த சமுதாயச் சீர்திருத்தவாதி, அரசியல் தூதுவர், நல்ல வணிகர், தத்துவஞானி, பேச்சாளர், சட்டம் இயற்றுபவர், ராணுவத் தலைவர், மனிதாபிமானி, கொடையாளி என்று முகம்மது நபியை அடையாளம் காண்கிறார் மைக்கேல் ஹார்ட்.

மைக்கேல் ஹார்ட் ஒரு கிருத்தவராக இருந்தபோதும் வேற்றுமத இறைதூதரான முகம்மது நபிக்கு முதலிடம் கொடுத்த நேர்மையைப் பாராட்டத்தான் வேண்டும்.

Thursday, September 27, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 007

ஓர் அகதியைப்போல மக்காவைவிட்டு மதினா வந்த முகம்மது நபியின் மதினா ஆட்சி வெகு சிறப்பாக நடந்துவந்தது.

பொன்மீதும் பொருள் மீதும் ஆசைப் பட்டிருந்தால் அன்று மிக எளிதாக அவற்றைத் திரட்டி இருக்க முடியும்.

அவர் பொருள் திரட்டவில்லை இறைவனின் அருள்தான் திரட்டினார்

மாட மாளிகையில் வாழவில்லை மண் குடிசையில்தான் வாழ்ந்தார்

விளக்குகளும் இல்லா அக்குடிசையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இரண்டு சிறிய போர்வைகளே அவரின் ஒட்டு மொத்த ஆடைகள்.

அவர் மட்டுமல்ல அவர் குடும்பத்தினரும் வயிறார உண்டதில்லை.

பல காலம் அடுப்பு விடுப்பில் இருக்க பேரிச்சம் பழம் மட்டுமே உணவாக இருக்கும்.

தன் இரும்புக் கவசத்தை உணவுப் பொருட்களுக்காக அடமானம் வைத்து மீட்க முடியாமலேயே மரணித்தார்.

சின்னச் சின்னச் செய்திகள் 006

முகம்மது நபியின் முதல் மனைவியான கதீஜா ஒரு செல்வந்தர்.

அவரை மணந்த முகம்மது நபிக்கு செல்வச் செழிப்பில் குறைவிருக்கவில்லை.

மேலும் தன் வியாபாரத்தைப் பெறுக்கி தன் நாற்பதாவது வயதில் ஊரிலேயே பெரும் செல்வந்தராக ஆகிவிட்டார்.

அப்போதுதான் தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அறிவித்தார்.

இதனால் அவர் பிறந்த ஊரையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஓர் அகதியைப்போல் மதினாவுக்குக் குடிபெயர வேண்டியதாயிற்று.

தான் இறைத் தூதர் என்று கூறுவதை விட்டுவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் தான் பிறந்த ஊரிலேயே செல்வச் செழிப்போடும் எதிர்ப்புகளே இல்லாத நிம்மதியோடும் சுகவாசியாக அவர் வாழ்ந்திருக்கலாம்.

சின்னச் சின்னச் செய்திகள் 005

முகம்மது நபி மணந்த ஒரே கன்னிப்பெண் ஆயிசா மட்டுமே.

தன் திருமண வாழ்வின் இளமையான முதல் 25 ஆண்டுகள் அதாவது 25 முதல் 50 வயது வரை ஒரே ஒரு பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்

அந்தப் பெண்ணும் முகம்மது நபியைவிட 15 வயது மூத்தவர்.

தன் இறுதி 10 ஆண்டுகளில் அவர் 12 பெண்களை மணந்தார்.

அரசியல் காரணமாகவே அவர் தன் பிற்காலத்தில் பல பெண்களை மணந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

Wednesday, September 26, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 004

இறை முத்திரை

ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குக் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் தபால் நிலையம் ஒரு முத்திரையைக் குத்தும். அந்த முத்திரை முக்கியமானது. அது இல்லாவிட்டால் கடிதம் போய்ச்சேராது.

ஒரு மன்னர் இன்னொரு மன்னருக்குக் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் ராஜ முத்திரை குத்தப்படும். மதிப்பால் உயர்ந்த அந்த முத்திரை இல்லாவிட்டால் இன்னொரு மன்னரால் அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,

இறைத்தூதர் முகம்மது அவர்கள் மன்னர்களுக்குக் கடிதங்கள் அனுப்புவார். அந்தக் கடிதங்களில் இறைத்தூதரின் முத்திரை குத்தப்படும். இது ராஜ முத்திரைகளைவிட பல மடங்கு உயர்வானது.

ஆனால் இறைவன் ஒரு முத்திரை வைத்திருக்கிறான். அது எதுவென்று தெரியுமா உங்களுக்கு?

உலகில் எத்தனையோ நபிகள் வந்திருந்தபோதும் முத்திரை நபி என்று இறைவன் தன் வசனத்தில் கூறுவது முகம்மது நபியைத்தான்.

முத்திரை குத்தப்படாத எதுவும் அங்கீகரிக்கப்பட்டதாக ஆவதில்லை. குர்-ஆன் மக்களுக்காக முகம்மது நபி என்ற முத்திரையைக் குத்தி வந்த இறைவனின் செய்திகள்

Tuesday, September 25, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 003

ஓர் நாள் முகம்மது நபி இருட்டில் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் கடந்து சில நபித் தோழர்கள் சென்றனர்.

அவர்களை நிறுத்தி ‘நான் என் மனைவியுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்று முகம்மது நபி கூறினார்.

தன்னைப் பற்றி மக்கள் ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றாலும் முகம்மது நபி தன்மீது சந்தேகத்தின் நிழல்கூட படாமல் வாழ்ந்தார்.

யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இதுபோன்ற செயல்களில்கூட முகம்மது நபி இப்படி நடந்து கொண்டார் என்றால் பொதுக் காரியங்களில் எவ்வளவு நேர்மையுடன் நடந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.

இதனால் தான் உலகம் அவரை மாமனிதர் முகம்மது நபி என்று அழைக்கிறது.

Monday, September 24, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 002

அல்-அமீன் என்று
முகம்மது நபி அழைக்கப்பட்டார்.

அல்-அமீன் என்றால் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்
என்று பொருள்

கல்விக்கூடமோ கலைக்கூடமோ அல்லது
அரசவையோ தந்த பட்டமல்ல இது.

நபியாக உயர்ந்தபின் தரப்பட்டதும் அல்ல.

சிறு வயதிலேயே பிறந்து வளர்ந்த சொந்த ஊர்
மக்களாலேயே தரப்பட்ட பட்டம்தான்
அல்-அமீன்

ஏனெனில், பொய் களவு ஏமாற்றுதல் போன்ற
யாதொரு தீய பழக்கமும் இல்லாதவராகவே
அவர் பிறந்தார் வளர்ந்தார் வாழ்ந்தார்

Friday, September 21, 2012

அடிப்படைவாதம் செயலிழந்து போகும்

உலகக் கல்வியில் அறிவு பெருகும் போதும், மார்க்கக் கல்வியில் தெளிவு பெறும்போதும், இன்று சிற்சில உள்ளங்களில் தேங்கிக்கிடக்கும்
அடிப்படைவாதமும் செயலிழந்து போகும். அந்த இருள் விலக்கும் ஒளியில் இஸ்லாம் இணையற்றுப் பிரகாசிக்கும்
 

Thursday, September 20, 2012

நபி பெருமானாரின் நகல்கள் நாங்கள்

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய படம் இன்று ஏழு பில்லியன் மக்களின் ஆவலைத் தூண்டுகிறது.

எந்த ஒரு கெட்ட செயலில் இருந்தும் ஓர் நல்லதைச் செய்துவிடமுடியும் என்பார்கள் ஞானிகள்.
 
நாசமாய்ப் போனவர்கள், ஆனால் அவர்கள் ஓர் அரிய வாய்ப்பினை முஸ்லிம்களுக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள்.

முகம்மது நபி அவர்களைத் தகாத முறையில் கற்பனை செய்து காட்டி கிட்டத்தட்ட ஒரு மஞ்சள் படம் எடுத்து சமூக தளங்கள் வழியே வெளியிட்டார்கள்.

முஸ்லிம்கள்  அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்துவிட்டார்கள்!
 
இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகத்தின் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்திருந்தார்கள் உலக அரசியல் பொல்லாத கில்லாடிகள்.
 
நபி பெருமானாரின் அளவற்ற சகிப்புத் தன்மையை முன் நிறுத்தி, இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த அவப்பெயரை அப்படியே துடைத்து எறிந்திருக்கலாம்.
 
நாங்களெல்லாம் நபி பெருமானாரின் நகல்கள் என்று நிரூபித்திருக்கலாம்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஒன்றுகூடி பேசி இருந்தால், சிறந்த அறிஞர்களைக்  கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், அந்த அறிஞர்களின் குரல்களுக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை விட்டொழித்து உடன்பட்டிருந்தால், நாம் இதைச் சாதித்திருக்க முடியும்.

இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை! இணையலாம்.

இப்போதும் காலம் முடிந்து போய்விடவில்லை. ஒற்றைக் குரலாய் உயரலாம்.

இப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை, நான் உசத்தி நீ உசத்தி என்பதை விட்டு அற்புதமான நபிகளின் ஈமான் வழியில் அப்படியே அவப்பெயரை சுத்தமாய் மாற்றி எடுக்கலாம்.

உலக இஸ்லாமிய சமூகங்களின் பொருப்பாளர்கள் முன் வரவேண்டும்.

உலக இஸ்லாமியர்கள் சீரிய சிந்தனையால் ஒன்றுபட வேண்டும்.

இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதையே விரும்புவதாக உலகத்துக்கே அழுத்தமாக அறிவிக்க வேண்டும்

ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் முன்னேற்ற வாழ்வில் இணைவதற்கு ஒன்றுபடாவிட்டாலும், நபி பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக போராடுவதற்காகவாவது ஸுன்னா, ஷியா மட்டுமின்றி அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.

எந்த ஒரு கெட்டதிலும் ஓர் நல்லது நிகழும்தான், உண்மை!

இதையே பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையை உறுதிசெய்ய முன் வருவார்களா இஸ்லாமியச் சமூகப் பொருப்பாளர்கள்? இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உயர்த்திப் பிடிப்பார்களா?

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய படம் இன்று ஏழு பில்லியன் மக்களின் ஆவலைத் தூண்டுகிறது.


அரபி மொழியில் இட்டதும் ஆர்ப்பட்டமென்றால், ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அமைதியை நாடும் இஸ்லாத்தின் அடிப்படைகளை நடைமுறைப் படுத்த அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் கற்றுத்தர வேண்டும்.

இதில் முக்கியமான விசயம் யாதெனில், உலக முஸ்லிம்களைக் கொதிப்படையச் செய்யவேண்டும் என்பதே படம் எடுத்தவர்களின் நோக்கம்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்கிக் காட்ட வேண்டும் என்பதே இவர்களைப் போன்றவர்களின் பேராசை.

உலக முஸ்லிம்களில் சிறந்த சிந்தனாவாதிகளும் இருப்பர். சாதாரணமானவர்களும் இருப்பர்.

மனவீரம் கொண்ட அழுத்தமானவர்கள் இருப்பர் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு அடிதடியில் இறங்குபவர்களும் இருப்பர்.

உலக வாழ்க்கை நடைமுறையில் இந்தப் படம் போல எத்தனையோ செயல்கள் நடக்கும்.

அவற்றுக்கெல்லாம் அறிவின் வழி தீர்வு வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கலவரம் செய்யும் நிலை கூடாது

அப்படியானால், உலக அளவில் முஸ்லிம்களுக்கென்று ஓர் சிந்தனை வட்ட அமைப்பு வேண்டும்.

அந்த அமைப்பு அதிகாரம் காட்டுவதற்கானதாய் இருக்கக் கூடாது.

அரசியல் செய்வதற்கானதாய் இருக்கக் கூடாது.

ஆலோசனைக் குழுவாக இருக்க வேண்டும்.

உலகின் பல திசைகளிலும் உள்ள சிறந்த அறிஞர்கள் பலரையும் கூட்டி  அறிவுசார்ந்த அமைப்பு உருவாக வேண்டும்.

அவர்கள் 365 நாட்களும், இஸ்லாத்தின் நன்மை கருதி இன்றைய வாழ்வின் சிக்கல்களுக்கு முன்னேற்ற வழியில் தீர்வுகள் சொல்லவேண்டும்.

ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து சிறந்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதில் ஒருமித்த கருத்து வேண்டும். அதற்காக அனைவரும் இணக்கமான வழியில் பாடுபடவேண்டும்

இப்போது இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்பவர்கள், மூலைக்கு ஒருவராய் இருந்துகொண்டு ஒருவர் சரி என்பதும் இன்னொருவர் தவறு என்பதுமாய்த்தான் இன்றைய வாழ்க்கைச் சிக்கலுக்குக் கருத்துக்கள் தருகிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள்.

ஒரு அறிஞர் தவணையில் வீடு வாங்குவது ஹராம் என்கிறார். இன்னொரு அறிஞர் இல்லை அது ஹலால் என்கிறார்.

இந்த நிலையில் மக்கள் என்ன செய்வார்கள்?

அடப் போங்கடா என்று வாழ்க்கை அழைத்துச் செல்லும் அவர்கள் வழியில் செல்வார்கள் சிலர்.

அப்படியே முடங்கிப் போய் உட்கார்ந்துவிடுவார்கள் சிலர்.

நஷ்டம் யாருக்கு?

நாம் ஒன்றைச் சொல்லும்போது இந்த சமுதாயம் வளருமா அல்லது  தேயுமா என்றுகூட சிந்திக்காமல் இஸ்லாமிற்கு மாற்றமாக தங்களின் குறை அறிவுடன் அறிவுரை சொல்பவர்களை என்ன செய்வது?

முதலில் அவர்களுக்குத்தானே அறிவுரை தேவை?

ஆகவே இப்படியாய் உலகின் பல மூலைகளிலும் நிறைய தேவைகள் இருப்பதால், சிறந்த அறிஞர்களின் கூட்டுத் தீர்வு அமைப்பு என்பதுபோல சிறந்த அறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒன்று சேர்த்து ஒரு குழு உருவாக்க வேண்டும்.

அவர்களின் பரிந்துரைகளிள் இந்த உணர்ச்சிவசப்படும் சகோதரர்கள் வழி நடத்தப்பட்டால், இஸ்லாமியர்களுக்குப் பொய்யாய் முத்திரை குத்தி வைத்திருக்கிறார்களே “தீவிரவாதிகள்” என்று அது முதலில் ஒழியும்.

முகம்மது நபிகள் யார் என்பதை கோடி பல கோடி வீடியோக்களால் அதே உங்கள்திரை (YouTube) யில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்குவது முக்கியமான போராட்ட முறைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்கிறவர்களுக்கு முஸ்லிம்கள் அமைதியே உருவானவர்கள் என்பதைக் காட்டும் வகையில் நம் அறிவிப்புகளும், கண்டனங்களும் இருக்க வேண்டும்.

முகம்மது நபிகள் பற்றிய உண்மைக் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என்று முகம்மது நபிகளை அறியாதவர்களுக்கு அறியத் தரும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு

போராட்டம் என்றால் என்ன என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும்.
உங்கள்திரை YouTube முழுவதையும் நபி பெருமானாரின் சிறப்புகளைப் பேசி நிறப்புவதை விட வலிமையான ஒரு போராட்டம் இருக்க முடியுமா?
உங்கள்திரை மட்டுமா இருக்கிறது, முகநூல் உண்டு, டிவிட்டர் உண்டு, இன்னும் பல வழிகள் உண்டு.
நபிபெருமானாரின் மீது உங்களுக்குள்ள அன்பை அங்கே காட்டுங்கள்.
கொடிபிடித்துக் கோசம் போடுவது அந்தக் காலம். இன்று இணையம்தான் எல்லாம்.
இணையம் மூலமாகத்தான் எகிப்தில் அரசியல் மாற்றம் வந்தது.
அந்த அற்புத ஊடகத்தை விட்டுவிட்டு எங்கே போய் எதைச் சாதிக்கப் போகிறோம்? 
கோசம் போடுவதால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.
இணையத்தில் நபிபெருமானாரின், இஸ்லாத்தின் சிறப்புகளை பரப்பும் வீடுயோக்கள் ஆடியோக்கள் என்ற ஆயுதங்களை எடுங்கள்.
அன்று கத்தி பேசியது போதும், பிறகு கத்திப் பேசியதும் போதும். இனி புத்தி பேசட்டுமே!

இந்த உலக முஸ்லிம்கள் அனைவரும் அடிப்படைவாதத்தைக் கைவிட்டு உலகக் கல்வியிலும் ஆன்மிகக் கல்வியிலும் உயர்ந்துவிட்டால் ஒவ்வொருவரும் சிறந்த மார்க்க அறிஞராகிவிடுவர். பிறகு அறிவுரைக்கென்று எவரின் தேவையும் இருக்காது. இதையே இறைவன் விரும்புகிறான். குர்-ஆன் ஒன்றே போதுமென்கிறான்.

உலகின் பல மூலைகளிலும் அமைதியான முறையில் எதிர்ப்புகள் காட்டப்படும்போது சில இடங்களில் மட்டும் வன்முறை எழுந்ததைச் சற்று உற்றுக் கவனித்தால் அங்கே என்ன குறை என்பது தெளிவாகும். அந்தக் குறையைக் களைந்தால்தானே இஸ்லாத்தின் உண்மை முகம் உலகுக்குத் தெரியும்?

கடல் என்றால் அதில் எந்தப் படகும் ஓடும் உங்கள் படகை அழகாக ஓட்டுங்கள்.

உங்கள்திரை (YouTube) போன்ற சமூகக் கருவிகளை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துதலே அறிவுடைமை.

சமூக வலைத்தளங்கள் எல்லோருக்கும் பொதுவாகவே சட்டங்களை இயற்றி அதுபோலவே பயணப்படுகின்றன.

அவர்கள் ஏதும் பாரபட்சம் காட்டுவதில்லை.

அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.

எந்த நாடு அந்த வீடியோவைத் தடுக்கக் கோரியதோ அந்த நாடுகளுக்கு அந்த வீடியோ சமூக தளங்களால் தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்த படத்தைத் தடை செய்யக் கூறி மக்கள் நிச்சயம் குரல் எழுப்ப வேண்டும்.
ஆனால் சமூக இணைய தளங்களே வேண்டாம் என்று கூறுவது அறிவு வழி சிந்தனையல்ல.

இஸ்லாம் மார்க்க்த்தால் ஆதாயம் தேடாத, இஸ்லாம் மார்க்கத்தை அரசியல் ஆக்காத நல்லவர்கள்தாம் உண்மையான இஸ்லாமியர்கள்.

உண்மையான இஸ்லாமியர்களிருந்துதான் உண்மையான இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக முடியும்.

அப்படியான உண்மையான இஸ்லாமிய அறிஞர்கள்தாம் இஸ்லாமியர்களின் நல் வாழ்க்கைக்கு வழிசொல்பவர்களாய் இருப்பார்கள்.

நாம் அறிவற்ற உணர்ச்சிமிகு வழிகளைக் கைவிட்டு நபிகள் அன்பு அமைதி சாந்தம் சமாதானம் பொறுமை ஆகியவைகளைப் போற்றிய பெருமானாரின் நகல்களாய் ஆவோமாக, ஆமீன். 

ஜமாத்தில் பங்கெடுக்க பெண்களுக்கு அனுமதி இல்லை

ஜமாத் என்றால் இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்குத் தீர்வு தரும் பஞ்சாயத்து போன்றதொரு அமைப்பு.

இதில் பங்கெடுக்க பெண்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் முகம்மது நபி காலத்தில் ஜமாத்தில் பெண்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம் பெண்களுக்கு அளித்த உரிமைகளை இன்றைய அடிப்படை வாதிகள் வழங்க மறுக்கிறார்கள்.

இதனால் ”தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் முன்னேற்றக் கழகம்” போன்ற முற்போக்கு பெண்கள் இயக்கத்தினர், பெண்களுக்கென்று தனியே பள்ளிவாசல்களைக் கட்ட முயற்சிக்கின்றார்கள்.

பெண்கள் பங்கெடுக்காததால் விவாகரத்து வழக்குகளில் ஜமாத்தின் முடிவுகள் பெண்களுக்குத் தீமையாக அமைகின்றன என்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக, மதுரையில் கே கே நகர் பள்ளிவாசலில் ஜமாத்தின் உறுப்பினராக 59 வயதான, அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான்ஜிம் பரகத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டியது.

Wednesday, September 19, 2012

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டிய படம்



ஏழு பேர் பார்த்ததோடு
எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய படம்
இன்று ஏழு பில்லியன் மக்களின்
ஆவலைத் தூண்டுகிறது

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புகிறான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்கிறான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்து விடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 14 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

நிச்சயமாக இஸ்லாம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. நல்ல ஒழுக்கத்தையும் கட்டுப்பாடையுமே அது வலியுறுத்துகிறது.

சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். அப்படியானால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.

படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.

பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.

அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.

மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

இப்போதெ‌ல்லாம் அர‌பு நாடுக‌ளிலும் ஆண்க‌ளைவிட‌ பெண்க‌ளே அதிக‌மாக‌க் க‌ல்வியில் ஆர்வ‌ம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்க‌ள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.

முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.

பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.

முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.

முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது.

பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.

ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.

முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.

வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.

படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.

மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளில் பெண் கல்வியின் அவசியத்தைத் தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.

இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் மிக உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.

இஸ்லாமிய அறிஞர் யார்?

இஸ்லாமிய அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் முன்னேற்ற வழிகளைச் சொல்லித் தருபவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு சில இஸ்லாமிய அறிஞர்கள் முன்னேற்றப் பாதையையே கருத்தில் கொள்ளாமல் தங்களின் அரைகுறை ஞானத்தைக் கொண்டு நல்லவற்றைத் தடுத்து இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

தங்களின் அரைகுறை அறிவோட்டத்தால் இவர்கள் இறைவனுக்கும் நபி பெருமானாருக்கும் தவறான பிம்பங்களை உலகத்தார் மத்தியில் கற்பிக்கிறார்கள்.

அது உலக இஸ்லாமிய சமூகத்திற்கு பெரும் தீங்காக அமைகிறது.

இஸ்லாமிய குடும்பங்களை முன்னேறவிடாமல் சில இஸ்லாமிய அறிஞர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவும் அறிவின் குறைபாடு காரணமாகவும் தவறான புரிதல்களின் காரணமாகவும் தடுக்கிறார்கள்.

அனைத்தும் அறிந்தவன் இறைவன் ஒருவனே என்பதை மறந்துவிடுகிறார்கள்.

குர்-ஆன் கூறும் அடிப்படைகளைக் கொண்டு பார்க்க வேண்டியவற்றைத் தவறாக, அதே சம்பவம் அப்படியே இருக்கிறதா இதே பெயரில் இப்படியே இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.

அப்படி அனைத்திற்கும் இருக்கப் போவதில்லை. இதை அனைவரும் அறிவோம்.

அப்படி அனைத்திற்கும் வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் சம்பவத்துக்குச் சம்பவம் இருக்காது என்பதால், இவர்கள் அதையே காரணமாகக் கூறி அவற்றைத் தடுப்பதால், இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கே பொருத்தமானது என்று இவர்களே தவறான வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

ஒரு கேள்விக்கு விளக்கம் கூறும்போது, சொல்லுக்குச் சொல் வார்த்தைக்கு வார்த்தை சம்பவத்துக்குச் சம்பவம் என்பதைத் தேடித்தருவதற்கு தேடு இயந்திரங்கள் இணையத்தில் பெருகிக்கிடக்கின்ற இந்தக் காலத்தில்.

வாசித்ததை வாசித்த மாதிரியே எடுத்து பதிலாகக் கூறுவது கிளிப்பிள்ளைகள் செய்கின்ற வேலை. அதைச் செய்ய அறிஞர்கள் தேவையே இல்லை.

அறிஞர்கள் என்றால், இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப சிக்கலான இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி இஸ்லாமியர்களின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல தீர்வுகளைத் தருபவர்கள்தாம்.

கணினி என்ற ஒன்றே இல்லாத காலத்தில் கணினியின் பயன்பாடு பற்றியும் இணையத்தின் செயல்பாடு பற்றியும் எழும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது?

குர்-ஆனின் அடிப்படையை ஆழமாக உள்வாங்கி உணர்ந்து பதில்கூற விழையாமல் அது எப்படி முடியும்?

செல்போன் வேண்டுமா வேண்டாமா அதன் பயன்பாடுகளின் சிக்கல்கள் என்பதைப் பற்றியெல்லாம் கூறுவதென்றால் எப்படி?

விமானம் ராக்கெட் போன்ற புதிய ஊர்திகளின் பயணத்தைப் பற்றி எல்லாம் கூறுவதென்றால் எப்படி?

இரவே இல்லாத ஊர்களில் நோன்பு நோற்பதைப் பற்றிக் கூறுவதென்றால் எப்படி?

இவை போன்ற லட்சம் பல லட்சம் கேள்விகள் இருக்கின்றன வளரும் உலகில் இன்னமும் பெருகிய வண்ணமே இருக்கும்

இவற்றுக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது எதைக்கொண்டு தீர்வு காண்பது?

குர்-ஆனின் அடிப்படையை உள்வாங்கிக்கொண்டால் போதும் தீர்வு தானே வந்துவிடும்.

அதை விட்டுவிட்டு 1400 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் பொருத்தம் தேடுவது என்பது யானையைக் குருடர்கள் தடவித் தடவிப் பார்த்து முறம் என்றும் தூண் என்றும் சுவர் என்றும் கூறுவதைப் போல் ஆகாதா?

சற்றே இஸ்லாமிய அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். விழிகளை விரித்து இறைவனைக் காணவேண்டும். இறைத் தூதரைக் காணவேண்டும். குர்-ஆனின் அடிப்படையைக் காணவேண்டும். இறைத்தூதர் வாழ்க்கையின் நோக்கங்களைக் காணவேண்டும். இஸ்லாம் என்றால் என்னவென்ற அடிப்படைத் தத்துவங்களைக் காணவேண்டும்.

இஸ்லாமை அறிந்துகொள்வதிலும் பகிர்ந்துகொள்வதிலும் முனைப்பாய் இருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்கள் தெளிந்த அறிவு கொண்ட பார்க்கும் பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த ஏகத்துவக் கொள்கையில் தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்.

உலக வாழ்க்கைப் பயணத்தில் ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும் தீர்வு காண்பதும் தவறானதல்ல வரவேற்கப்பட வேண்டியது.

ஆயினும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும் இஸ்லாத்தின் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத அக்கறையும் கவனமும் எப்போதும் எல்லோருக்கும் இருத்தல் கடமையாக வேண்டும்

இறைவன் நமக்கு அறிவினைக் கொடுத்துள்ளான். இறைவனின் படைப்புகளிலேயே உயர்ந்த படைப்பு மனிதன்தான் என்று அவன் கூறுகிறான். அவனது நம்பிக்கை மனிதன் மீது எத்தனை உயர்வானதாக இருக்கிறது என்று பெருமை கொள்ளுதல் வேண்டும். அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாம் அறிவுடையவர்களாக அவன் தந்த அறிவைனைப் பயன்படுத்துதல் வேண்டும்.

இறைவன் குர்-ஆனை எளிமையாகக் கொடுத்திருக்கிறான். நல்லவை கெட்டவைகளை குர்-ஆனின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு அணுகவேண்டிய வழிகளைக் கொடுத்திருக்கிறான்.

எந்த வகையிலும் ஒரு முஸ்லிம் கல்வி, செல்வம், மனவீரம், நிம்மதி, அருள் போன்ற உயர்வானவற்றைப் பெறுவதை மத அறிஞர்கள் தடுத்து இஸ்லாமிய சமூகத்தைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது.

இதுவே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களின் முன்னும் வைக்கப்படும் முக்கியமான வேண்டுகோள்.

இவ்வேளையில் சிறந்த சிந்தனையைக் கொண்டு சிறந்த தீர்வுகளை அமைதியான வழியில் எடுத்து இஸ்லாமிய சமூகத்தின் முன் வைக்கும் சில அருமையான இஸ்லாமிய அறிஞர்களுக்கு இறைவனின் அன்பும் அமைதியும் நிறைவான அருளாகட்டும். உலக மக்களின் நன்றிகள் படிகளாகட்டும்.

இஸ்லாத்தைச் சரியாக எடுத்துக் கூறுவது எப்படி?

தவறாகப் புரிந்துகொள்ளும் உலகுக்கு
இஸ்லாத்தைச் சரியாக எடுத்துக் கூறுவது எப்படி?

இஸ்லாத்தின் பண்புகளாகவே
முஸ்லிம்கள் ஆவது ஒன்றுதான் அதற்கான ஒரே வழி

அன்பு அமைதி கருணை ஈகை அறிவு ஆகிய
இஸ்லாத்தின் அடிப்படைக் குணங்களோடு
உலகத்தாரோடு உறவாடவேண்டும்

மென்மையான இஸ்லாத்தின் மேன்மைகளையும்
உண்மையான இஸ்லாத்தின் உயர்வுகளையும்
வாழ்ந்து காட்ட வேண்டும்

ஏகத்துவக் கொள்கையில் தடம்புரளாத எல்லோரும் இஸ்லாமியர்கள்தாம் பிரிவுகள் கிடையாது

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை

அந்த ஏகத்துவக் கொள்கையில்
தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்

உலக வாழ்க்கைப் பயணத்தில்
ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும்
தீர்வு காண்பதும் தவறானதல்ல

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும்
இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத
அக்கறையும் கவனமும் எப்போதும் இருப்பது
எல்லோருக்கும் கடமையாக வேண்டும்

Tuesday, September 18, 2012

நம்பிக்கையே காமதேனு - பாரதியார்

பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது.

நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது.

சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை.

குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்

Monday, September 17, 2012

குர்-ஆன் ஹதீத் வேறுபாடுகள்

குர-ஆன்
முகம்மது நபி வழியே இறங்கிய இறை வசனங்கள்

ஹதீத்
முகம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகள் உபதேசங்கள்


குர்-ஆன்
எல்லா காலத்துக்கும் ஏற்புடையவை என சில வசனங்கள், நபி வாழ்ந்த காலத்துக்கு என்று சில வசனங்கள், நபிக்கு முன் வாழ்ந்தவர்களின் வரலாறு என்று சில வசனங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

ஹதீத்
முகம்மது நபி சொன்னதாக பத்துத் தலைமுறைகளாக செவி வழியாகவும் ஏடுகள் வழியாகவும் சொல்லப்பட்டு முகம்மது நபி இறந்து இருநூறு வருடங்கள் கழித்து தவறானவற்றை நீக்கி அன்றைய நாள் சுன்னத் ஜமாத் ஆய்வுக் குழுவினருக்கு ஏற்புடையவற்றை மட்டும் தொகுத்த குறிப்புகள்

குர்-ஆன்
பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானவை

ஹதீத்
பெரும்பாலும் நபி வாழ்ந்த காலகட்டத்திற்குப் நபி வாழ்ந்த இடத்திற்கும் பொருத்தமானவை

Saturday, September 15, 2012

முகம் மறைத்த முஸ்லிம் பெண்ணும் வாலிபனும்




தானாகவே செத்தவைகளையும்
இரத்தத்தையும்
பன்றியின் மாமிசத்தையும்
அல்லாஹ் அல்லாத கடவுளுக்குப்
படையல் செய்யப்பட்டவைகளையும்
உங்களுக்கு அல்லாஹ்
ஹராமாக ஆக்கியிருக்கிறான்

ஆனால்
தானே விரும்பாமலும்
வரம்பு மீறாமலும்
அவசியம் காரணமாக
எவரேனும் கட்டாயப்படுத்தப்பட்டால்
இவற்றை உண்பது குற்றமில்லை

அல்லாஹ் கருணைமிக்கோனும்
மன்னிப்பவனுமாக இருக்கின்றான்

குர்-ஆன் 2:173

Friday, September 14, 2012

சில கதைகளும் சில கேள்விகளும் 002

ஓர் நகரம் புதிதாக உருவாக்கப்பட்டது. அது இன்றைய பெரு நகரங்களின் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருந்தது. அங்கே 500,000 குடும்பங்கள் வேலை நிமித்தமாகக் குடிபெயர்ந்தார்கள். அதில் 300,000 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்கள். 200,000 குடும்பங்கள் முஸ்லிம் அல்லாத வேற்று மதத்தினர். அவர்கள் அனைவரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள்.

முஸ்லிம் அல்லாத குடும்பங்கள், தங்களின் வருமானத்தைக் கொண்டு தவணை முறையில் 200,000 டாலர் பெருமதியுள்ள வீடுகளை வாங்கிக்கொண்டர்.

300,000 முஸ்லிம் குடும்பங்கள், அந்த நகரத்தின் இஸ்லாமிய அறிஞர் கூறினார் என்று தவணை முறையில் வீடு வாங்குவதைக் கைவிட்டனர். வாடகைக்கு வீடு எடுத்து நிம்மதியாக வாழத்தொடங்கினர்.  தவணை முறையில் வீடு வாங்கினால் ஹராம் என்று அந்த இஸ்லாம் அறிஞர் போதித்தார்.

தவணை முறையில் வீடு வாங்கினால் அது ஹராம் இல்லை என்று உலகில் உள்ள இஸ்லாமிய அறிஞர்களுள் பலர் கூறினார்கள். ஆனால் சந்தேகம் காரணமாகவும் பயம் காரணமாகவும் 300,000 முஸ்லிம் குடும்பங்களும் அவர்கள் சொல்வதைக் கேட்காமல் தங்களுடன் இருக்கும் சொந்த ஊர் இஸ்லாமிய அறிஞர் கூறியதை மட்டுமே கேட்டுக்கொண்டார்கள்.

25 ஆண்டுகள் இப்படியாய்க் கழிந்தன.

முஸ்லிம் அல்லாதவர்கள் வாங்கிய 200,000 டாலர் வீடுகள், 25 வருடங்கள் கழிந்ததால் ஒரு மில்லியன் டாலர் வீடுகளாய் ஆயின. அவர்களின் பிள்ளைகளை உயர் கல்விக்காக உயர்ந்த பல்கலைக் கழகங்களில் சேர்த்தார்கள். அந்த நகரத்தையே விலைக்கு வாங்கும் வல்லமையைப் பெற்றார்கள். கல்வியிலும் செல்வத்திலும் உயர்ந்த இடத்தை இந்த 25 ஆண்டுகளில் அவர்கள் அடைந்திருந்தார்கள்

ஆனால் 300,000 முஸ்லிம் குடும்பங்கள் 25 வருடங்களுக்கு முன் வரும்போது எப்படி இருந்தார்களோ அதே போலவே இருந்தார்கள். சொந்தமாக வீடு இல்லை. பிள்ளைகளை  உயர் கல்வியில் சேர்க்க போதுமான பணம் இல்லை.

இதனால் முஸ்லிம் அல்லாதவர்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது, முஸ்லிம் குடும்பம் செல்வத்தாலும் கல்வியாலும் மிகவும் தங்கியவர்களாய் இருந்தார்கள்.

மேலும், முஸ்லிம்களில் சில குடும்பத் தலைவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் குடும்பம் வருமானம் இல்லாமலும் சொத்துக்கள் இல்லாமலும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.



இனி சில கேள்விகள்:

1. தவணை முறையில் வீடு வாங்குவது  ஹராம் என்று

           இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளை சரியாக
           அலசிப் பார்க்காமல் இஸ்லாமிய அறிஞர் சொன்னது சரியா?
  
2. ஏதோ ஓர் இஸ்லாமிய அறிஞர் சொன்னார் என்பதற்காக

           அலசி ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுத்த 
           குடும்பத் தலைவர்கள் செய்தது சரியா?

3. 1400 ஆண்டுகள் கடந்தும் முறையான தெளிவான
           இஸ்லாமிய வாழ்க்கை முறைகளைச் சொல்லித் தராமல்
           தவறான கருத்துக்களை முன் வைக்கும் உலமாக்கள்
           இமாம்கள் செயல்கள் சரியா?

4. இஸ்லாமியர்களைக் கல்வியிலும் செல்வத்திலும்

           உயர்ந்த நிலையை அடையக்கூடாது என்று
           அவசியம் கருதி ஒவ்வொன்றுக்கும் விலக்கு தரும் 
           படைத்த இறைவன் தடுப்பானா?

5. பொருளாதாரத்திலும் கல்வியிலும் குடும்பத் தலைவர்கள்
            பின் தங்கியவர்களாய் ஆகும்போது உலக இஸ்லாமிய சமூகத்தின்
            நிலை தாழ்வானதாக ஆவதால், உலகை எதிர்த்து நிற்கும் சக்தி
            குறைவதை இஸ்லாமியர்களை முன்னேற்ற நினைக்கும்
            இஸ்லாம் விரும்புமா?

6. முகம்மது நபி அவர்கள் இருளில் கிடந்த மக்களை
           முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள்
           உலக அரங்கில் வலிமையுடையவர்களாய் ஆக்கினார்கள்
           அவரின் கண் மறைவுக்குப் பின் இப்படி இஸ்லாமியர்கள்
           பின் தங்கிய சமூகமாய் ஆவதைப் அவர் இதயம் பொறுக்குமா?

7.  இவற்றுக்கெல்லாம் விடையாக உங்கள் மனதில் தோன்றும்
           எண்ணம் எது?

8.  குர்ஆன் மற்றும் ஹதீசுகளை வாசிக்காமல் வாசித்ததை
           ஆய்ந்து நோக்காமல் யாரோ சொல்வதைக் கேட்டே
           நடப்பவர்களால் சரியான இஸ்லாமிய வழியில்
           செல்ல முடியுமா?
           






சில கதைகளும் சில கேள்விகளும் 001


கதை 1
ஒருவர் உங்களிடம் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்று உதவி கேட்டு வருகிறார். உங்களிடம் உங்கள் வீட்டைத் தவிர வேறு வீடு இல்லை. ஆனால் அவருக்கு உதவ நீங்கள் முன் வருகிறீர்கள். அவருக்கு 200,000 டாலர்களை ஐந்து வருடங்களுக்குக் கடனாகக் கொடுத்து வீடுவாங்கி பயன் படுத்திக்கொள்ளச் சொல்கிறீர்கள். அவர் தன் பெயரில் 200,000 டாலருக்கு ஒரு வீடு வாங்கி அதில் தங்கிக் கொள்கிறார். அதுபோன்ற ஒரு வீட்டில் தங்கினால் வாடகையாகத் தரவேண்டிய 2000 டாலர்களை மாதா மாதம் சேமித்து வைக்கிறார். ஐந்து வருடங்கள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு 500,000 டாலர்களாக உயர்ந்துவிடுகிறது.

வாடகை தொகையைச் சேமித்ததால் 120,000 டாலர்கள் கிடைக்கிறது. இப்போது அந்த வீட்டை விற்கிறார். 300,000 டாலர்கள் லாபம் கிடைக்கிறது. ஆக மொத்தம் 420,000 டாலர்கள் இவருக்கு லாபமாகக் கிடைக்கிறது.

கதை 2
இதே போலவே இன்னொருவர் உங்களிடம் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்று கேட்டு வருகிறார். நீங்கள் உங்களிடம் உள்ள 200,000 டாலர்களைக் கொடுத்து ஒரு வீடு வாங்கி அவரை அதில் தங்க வைக்கிறீர்கள். அதற்காக அவர் மாதம் 2000 டாலர்கள் வாடகையாகத் தருகிறார். ஐந்து வருடங்கள் கழித்து அவர் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விடுகிறார். இந்த வீடு உங்களுக்குத் தேவை இல்லை என்பதால் விற்கிறீர்கள். 500,000 டாலர்கள் கிடைக்கின்றன.

வாடகை 120,000 டாலர்கள் சேர்த்து உங்களுக்கு 420,000 டாலர்கள் லாபம் கிடைக்கிறது.

இனி சில கேள்விகள்:

1. இந்த இரண்டு வழிகளில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?

2. கதை ஒன்றில் எந்த உழைப்பும் இல்லாமல் எந்த செலவும் செய்யாமல் பெற்ற 420,000 டாலர்களை உதவிபெற்றவர் உதவி செய்தவருக்குக் கொடுத்தால், உதவி செய்தவர் பெற்றுக்கொள்ள வேண்டுமா கூடாதா? ஏன்?

வளைகுடா நாடுகள் மட்டும் ஏன் இப்படி?

ஷரியா சட்டத்தை பின்பற்றாத மலேசியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் Islamic Republic of Malaysia , Islamic Republic of Pakistan  என பிரகடனப் படுத்திக் கொள்ளும்போது , வளைகுட நாடுகள் ஏன் இன்னும் தங்களை

Kingdom of Saudi Arabia
Sultanate of Oman
United Arab Emirates
Amir of Qatar
Kingdom of Bahrain /Kuwait


என அழைத்துக் கொள்கிறது

- சடையன் சாபு

சின்னச் சின்னச் செய்திகள் 001



முகம்மது நபி அவர்கள் ஆறாம் நூற்றாண்டில்
மக்காவில் பிறந்தார்.

ஏழாம் நூற்றாண்டில் மதினாவில் இறந்தார்.

570 ஏப்ரல் 26 பிறந்த நாள்
632 ஜூன் 8 திங்கள் கிழமை இறந்த நாள்

609 டிசம்பர் 22 குர் ஆன் இறங்கத் தொடங்கிய தேதி
622 மக்காவைவிட்டு மதினா சென்ற ஆண்டு

595 கதீஜாவுடன் திருமணம்
619 கதீஜா மரணம்

612 ஆயிஷா பிறப்பு
621 ஆயிஷா திருமணம்
678 ஆயிஷா இறப்பு

மேலே உள்ள தேதிகளும் வருடங்களும்
மிகவும் துல்லியமானவை என்று கூற இயலாது
ஆனால் துல்லியமானவற்றுக்கு மிகவும்
நெருக்கமானவை என்று உறுதியாகக் கூறலாம்.

ஆங்கிலம் சைத்தானின் மொழி

ஆங்கிலம் சைத்தானின் மொழி என்று அதைப் பயிலவிடாமல் பலப்பல ஆண்டுகள் இருட்சிறையில் முஸ்லிம்களை வைத்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் அடிப்படைவாதிகள்.

குர்ஆனை மனப்பாடம் செய்து ஓதினால் மட்டும் போதும் ஆயிரம் கோடி நன்மைகள்; குர்-ஆனை விளங்கிக்கொள்ளத் தேவையில்லை என்று குர்ஆனை அருளிய இறைவனின் வார்த்தைகளுக்கே எதிரான கருத்தை அமல் படுத்தியவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் அடிப்படைவாதிகள்.

இஸ்லாமை அறிந்துகொண்டால்தான் இஸ்லாமியர்கள் வளர்வார்கள். இஸ்லாமியர்கள் வளர்ந்தால்தான் இஸ்லாம் வளரும். இதற்கு முட்டுக்கட்டைகளாய் இருக்கும் அடிப்படைவாதிகள் ஒழிந்தால்தான் இஸ்லாம் சுபிட்சமடையும்.

சாதாரண மக்களாகிய உங்களுக்கு விளங்காது

குர்ஆன், ஹதீஸ் என்று வரும்போது பதவிகளுக்கும் பணத்துக்கும் ஆசைப்படும் சிலர், அவற்றை மக்கள் மத்தியில் விளக்குவதற்குப் பதிலாக, அவை சாதாரண மக்களாகிய உங்களுக்கு விளங்காது அவ்வாறு விளங்கிக்கொள்ள நீங்கள் முயன்றால் வழிகேட்டில் நுளைந்து விடுவீர்கள் என்ற அச்சத்தை ஊட்டி அந்த மக்களையே தவறான திசைகளில் தூண்டி விடுகிறார்கள்.

யாரெல்லாம் குர்ஆன், ஹதீசுகளை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கிறார்களோ அவர்களைப் புறக்கணித்து, அடித்துத் துரத்தி விடுமாறும், அவர்களுக்கு எந்த விதத்தில் என்றாலும் பரவாயில்லை, எப்படியாவது நோவினைக் கொடுத்து, சமூகத்தில் அவர்களை மானபங்கப்படுத்தி இழிவாக்கும்படி செய்கிறார்கள். இவைகள் இதுவரை நடந்த, இன்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்கள்.

துருக்கியில் இருந்து செய்யத் நஸ்ரத்தீன்

அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்

மேலும் இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்

இது தவறான பார்வை. இஸ்லாமியர் தங்கள் நன்மதிப்பை தக்க வைத்துக்கொள்ள ஏற்கனவே இஸ்லாமை தழுவியுள்ள நாடுகள் ஒன்றிணைந்தாலே போதும்.

உலகில் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இதில் பாகிஸ்தான், இந்தோனிசியா, மலேசியா இந்தியாவில் மட்டுமே 100 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் உள்ளனர்.

இவர்கள் அன்பால் உலகையே ஆளலாம். அதிகாரத்தால் ஆளத் தேவையில்லை.

அமெரிக்காவையோ இதர தேசங்களையோ ஆள வேண்டும் என்ற தேவையும் இல்லை.

நன்றி: நமக்குள் இஸ்லாம்

Thursday, September 13, 2012

குர்ஆன் ஏன் அரபு மொழியில் இறக்கப்பட்டது



குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டதற்கான
காரணங்கள் இரண்டு

ஒன்று:
குர்ஆன் எவரின் வழியாக இறக்கப்படுகிறதோ
அவருக்கு அது புரியவேண்டும்

இரண்டு:
குர்ஆன் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்






இதில் இரண்டாவது காரணம் தவறு என்று சிலர்
வாதிடுகின்றனர்.

குர்-ஆன் உலக மக்கள் அனைவருக்குமாய்
இறக்கப்பட்டது. அரபு மக்களுக்கு மட்டும்
இறக்கப்பட்டதல்ல என்பதே அவர்களின்
வாதம்.

அவர்கள் கூறுவதும் சரி. கட்டுரை கூறுவதும் சரி.
அது எப்படி என்று காண்போம்.

கட்டுரையில் இந்த இரண்டாவது காரணத்தை
எழுதுவதற்குக் காரணமாக இருந்தது
குர்-ஆனின் வசனங்கள்தாம்.

குர்-ஆன் 14:4
ஒவ்வொரு தூதரையும்
அவருடைய சமூகத்தாருக்கு
அவர் விளக்கிக் கூறுவதற்காக
அவர்களுடைய மொழியிலேயே
(போதிக்கும் படி)
நாம் அனுப்பிவைத்தோம்;

இந்தக் குர்-ஆன் வசனம் நேரடியாகவே சொல்வது
என்ன?

”தூதருடைய சமூகத்தாருக்கு விளக்கிக் கூறுவதற்காக....”

எது தூதருடைய சமூகம்?

மெக்கா மெதினாவில் வாழ்ந்த அரபி மொழி மட்டுமே
அறிந்தவர்கள்

ஒரு தூதரை இறைவன் தேர்வு செய்யும்போது,
அந்த தூதுவர் சார்ந்த சமூகத்தையும் அவனே
தேர்வு செய்கிறான்.

தெளிவாகச் சொல்வதென்றால், இறைவன் முதலில்
தேர்வு செய்வது சமூகத்தைத்தான். பிறகுதான்
அதற்கான தூதுவரை அந்த சமூகத்திலிருந்தே
இறைவன் தேர்வு செய்கிறான்.

எப்படி எனில்....

எந்தச் சமூகம் சீரழிவில் இருக்கிறதோ எந்தச்
சமூகத்திற்கு இறைவனின் வேதங்கள் உடனடித்
தேவையில் இருக்கிறதோ எந்த சமூகத்திற்கு
இறைவனின் உபதேசங்கள் மிகவும் அவசியத்தில்
இருக்கிறதோ அந்தச் சமூகத்திற்குத்தான்
இறைத்தூதரை இறைவன் நியமிக்கிறான்.

அப்படியான ஒரு சமூகத்தின் நிலையைக் கண்டு
அதைச் சீர் திருத்த இறைவனால் அருளப்பட்ட வேதம்
உலகம் முழுவதும் ஏற்று நடப்பதற்கானதுதான்

இறைவனின் முன் உலக மக்கள் அனைவரும் சமம்
என்பதால், குர்-ஆன் உலக சமூகத்தார் அனைவருக்கும்
ஏற்ற ஒன்று என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

”குர்ஆன் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்” என்று கட்டுரை
குறிப்பிடுவது உலக மக்களுக்கு இது
அருளப்படவில்லை என்று சொல்வதற்காக அல்ல.

மாறாக, மிகவும் பின் தங்கிய, மூடநம்பிக்கைகள்
அடர்ந்த ஒரு சமூகத்திற்காக, அதன் அன்றைய கால
கட்டத்திற்காக இறைவன் தன் தூதரை அவர் பேசிய
மொழியில் அவரின் சமூகத்தின் மொழியில் அனுப்பி
வைத்ததைக் கூறுவதற்காகத்தான்.

முகம்மது நபிக்குத் தெரிந்தது அரபி மொழி மட்டும்தான்.
குர்-ஆனின் வசனங்கள் முகம்மது நபியை அழைத்து
நபியே நீர் கூறும் என்று பல வசனங்களில் சொல்கிறது.

ஏனேனில் முகம்மது நபியின் சமூகத்தினர் அரபி
மொழியை அறிந்தவர்கள். அவர்களுக்குத்தான்
முகம்மது நபியால் நேரடியாக குர்-ஆனுக்கான
விளக்கம் கொடுக்க முடியும்.

வேற்று மொழிக்காரர்களுக்கு அவரால் தானே விளக்கம்
கொடுக்க இயலாது. அரபி மொழி தெரிந்த வேறொருவரின்
துணை கொண்டுதான் கொடுக்க முடியும். அப்படியாய்
முகம்மது நபிக்கு இறைவனால் எந்த வசனமும்
இறக்கப்படவில்லை.

குர்-ஆனின் வசனங்கள் நேரடியாக மக்கா மதினா
மக்களுக்குக் கூறும் என்பதாகத்தான் இருக்கிறது.

மக்கா மதினா மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
இறைவன் குர்-ஆனை அரபியில் இறக்கினான் என்பதற்கு
ஆதாரமாக மேலும் சில குர்-ஆன் வசனங்கள் உண்டு.

43:2. விளக்கமான
இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக
இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக
நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்

இந்த குர்-ஆன் வரிகளில் ஏன் குர்-ஆன் அரபி மொழியில்
அருளப்பட்டிருக்கிறது என்பதை இறைவன் மிகத் தெளிவாகவே
கூறுகிறான் அல்லவா?

குர்-ஆனில் அன்றைய மக்கா மதினா வாசிகளை நோக்கி
இறைவன் கூறும் வசனங்கள் அதிகம்.

உதாரணத்திற்கு ஒன்று:

43:31. மேலும்
அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த குர்ஆன்
இவ்விரண்டு ஊர்களிலுள்ள
பெரிய மனிதர் மீது
இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”

இவ்விரண்டு ஊர்கள் என்றால் எந்த ஊர்கள்
என்று நான் விளக்கம் தர வேண்டியதில்லை என்று
நம்புகின்றேன்.

இதுபோல நிறைய வசனங்கள் குர்-ஆனில் உண்டு.

நான் சொல்லவரும் செய்தியை வேறுவிதமாக
ஓர் உதாரணத்துடன் சொல்வதானால் இப்படிச்
சொல்லலாம்.

ஓர் வகுப்பறை சீர்குலைந்து கிடக்கிறது. எந்த
மாணவனும் சரியாகப் படிப்பதில்லை. நல்ல
ஒழுக்கமும் கிடையாது என்று அந்த வகுப்பில்
நிகழும் கேடுகளின் பட்டியல் மிகவும் நீளம்.

உலகக் கல்வித் தலைமைச் செயலகம்
ஒரு சிறப்பு ஆசிரியரை நியமித்து அந்த வகுப்பை
தன் பரிந்துரைகளின்படி கவனிக்கச் சொல்கிறது

அந்த வகுப்புக்கு ஆசிரியர் வருகிறார். அவர் அந்த
மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். எதைச்
செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று
கல்வித் தலைமைச் செயலகம் மூலம் தகவல்கள்
பெற்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இதெல்லாம் தமிழிலேயே நடக்கிறது. ஏனெனில்
அது அந்தக் காலத் தமிழ்ப்பள்ளிக்கூடம்.

அங்கே ஆசிரியருக்கும் தமிழ் மட்டும்தான் தெரியும்
மாணவர்களுக்கும் தமிழ் மட்டும்தான் தெரியும்.

ஆனால் அங்கே அந்த ஆசிரியரின் மூலம்
கல்வித் தலைமைச் செயலகம் அந்த வகுப்பு
மாணவர்களுக்குச் சொன்னவை யாவும்
உலகம் முழுவதும் உள்ள கல்விக் கூடங்கள்
அனைத்திற்குமான சட்டதிட்டங்கள்.

இனி கல்வித் தலைமைச் செயலகம் எது
ஆசிரியர் யார் மாணவர்கள் யார் என்று நான்
சொல்லத் தேவையில்லை என்று நம்புகின்றேன்.

ஆயினும், குர்ஆன் அரபியர்களுக்காக மட்டுமே
இறக்கப்பட்டது என்று இக்கட்டுரை கூறுவதாக
நினைப்பவர்களுக்காக ஒரு சிறு மாறுதலை
கீழே உள்ளதுபோல் செய்யலாம்

குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டதற்கான
காரணங்கள் இரண்டு

ஒன்று:
குர்ஆன் எவரின் வழியாக இறக்கப்படுகிறதோ
அவருக்கு அது புரியவேண்டும்

இரண்டு:
குர்ஆன் இறங்கும் காலகட்டத்தில் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்


The Message பார்க்க வேண்டிய படம்

The Message

1977ல் வெளியான ஆங்கிலப் படம். இஸ்லாமிய நம்பிக்கையின் பிறப்பை வெகு அழகாகச் சித்தரித்த அருமையான காவியம். முகம்மது நபியின் புனிதக் கதை. ஏழாம் நூற்றாண்டில் 300க்கும் மேற்பட்ட சிலைகளை மெக்காவின் காபாவிலிருந்து அகற்றி இறைவன் ஒருவனே என்று முழங்கிய ஆன்மிகப் புரட்சியின் வரலாறு. மெக்காவின் மூட நம்பிக்கைகளுக்கும் அரசியல் கொடுமைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி இட்டு மனிதத்தை அசத்தியர்களிடமிருந்து விடுதலை செய்த மகா சரித்திரம்.

இந்தப் படத்தில் முகம்மது நபி அவர்கள் வருகிறார். ஆனால் அவரை நாம் காண முடியாது. அலி அவர்கள் வருகிறார். ஆனால் நாம் அவரைக் காண முடியாது. இப்படியாய் இயன்றவரை சர்ச்சைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எடுத்த முன்னணிப்படம்.



Sunday, September 9, 2012

Salaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி



அது ஓர் இனிய அனுபவம். சிங்கப்பூரிலிருந்து முபீன் என்பவர் கே எம் அமீர் என்ற என் நண்பர் மூலம் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்.

ஓர் இஸ்லாமிய பாடல் எழுத விருப்பமா என்று கேட்டிருந்தார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

நான் எழுதிய முதல் இஸ்லாமியப் பாடல்.

இசையாக்கம்:         முபீன் சஆதத்
பாடல் வரிகள்:       அன்புடன் புகாரி
பாடகர்:                       எர்பானுல்லாஹ்
குழுக்குரல்:              முஹமது அலி, ரஷித், அஜிஸ், அன்சாரி,
                                      அப்துல்லாஹ், பராஸ், பைசல், மஹ்புஸ் & சலாம்
முகப்போவியம்:    நசிருதீன் மாலிக்

 
சிங்கப்பூர் மேடையில்...
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF7wU1eQPPE



முகநூல் வழியே....
https://www.facebook.com/video/video.php?v=10150367174030133



ஆடியோ மட்டும் கேட்க....
http://soundcloud.com/salaam-express/takbir



சலாம் எக்ஸ்பிரஸ் பாடல்கள் கேட்க....
http://soundcloud.com/salaam-express



சிங்கப்பூர் மின்னல் FM  ஜமால் அப்துல் ஹமீத் அவர்கள் சலாம் எக்ஸ்பிரசின் முபீன் & ஃபைசல் இருவரையும் நேர்காணல் காண்கிறார்:




 

Wednesday, September 5, 2012

முஸ்லிம்கள் தவணை (Mortgage) முறையில் வீடு வாங்கலாமா?

 

உமர் அல்-காத்ரி அயர்லாந்தில் வாழும் ஓர் இஸ்லாமிய அறிஞர். இஸ்லாமிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர். http://en.wikipedia.org/wiki/Umar_Al-Qadri

மார்ட்கேஜ் பெற்று வீடு வாங்குவது பற்றி விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார்.

அவசியம் கருதி மார்ட்கேஜில் வீடு வாங்குவது ஹலால் என்பதுதான் இவர் போன்ற பல இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து.

http://www.youtube.com/watch?v=ZEWvhOphY8Q

Monday, September 3, 2012

அது ஒரு நூல்

அது
ஒரு நூல்

அந்த
அற்புத நூல்
உன் கைகளில்

உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு

ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு

வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை

நீ புத்திமான்
ஆனால்
அந்த நூலுக்கும்
உன் புத்திக்கும்
விளங்கி எட்டுவதில்
வெகு தூரம்

பாட நூலை நீ வாசிப்பது
கற்பதற்காக

ஆனால்
உன் அந்த நூலை
நீ வாசிப்பது
வாசிப்பதற்காக மட்டும்

வாசித்தால் போதும்
சொர்க்கம் வசப்படுமென்று
தவறாக உன் மூளையைத்
தட்டிக்கொடுத்த
தப்பான அறிவிலிகளை
மன்னிக்கமாட்டான் அவன்

காலம் எழுப்பிவிட
உன் கல்விக்கண்
விழித்துவிட
இன்னுமா வேண்டும்
உனக்கு அந்த இருட்சிறை

எந்த ஒரு
மொழியினைக் கற்பதும்
விளங்கவும் பேசவும்
எழுதவும்தான்

ஆனால்
அந்த நூலின்
மொழியைப் பயில்வது மட்டும்
வாசிக்க மட்டும்தானா... ஏன்

அறிவுச் சுடர் எரியும்
உன் கல்வி வாழ்வின் தலைப்பணி
அந்த நூலை ஆய்ந்தறிவதாய் அல்லவா
அமைந்திருத்தல் வேண்டும்

அவன்
சொல்லும்
சொலைப் புரியாமல்
அவன்
சொல்லைச்
சொல்லி ஆவதென்ன

அவன்முன் பணிந்து
அவன் காதில் நீ
ஓதுகிறாய்

உன் நெஞ்சினின்று
பொருளோடு புறப்படாத
ஒரு சொல்
எத்தனை அழகானதாயினும்
அவன் செவியைச்
சேருமா

அவனை
அறிவதற்காகவே
அருளப்பட்ட அந்த நூல்
இதோ
இன்னமும்
உன் கைகளில்தான்

Sunday, September 2, 2012

நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

 

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!


நிகழ்ச்சி இரண்டு:

அதே சவுதி அரேபியா. அதே அலுவலகம். இப்போது ஒரு ஹைதராபாத் அப்துல் கதீர்.

அப்துல் கதீர் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான். அவன் இந்தியனா பாகிஸ்தானியா அல்லது பங்களாதேசியா என்று தெரிந்துகொள்ள நீ எந்த நாடு என்று கேட்டோம்.

”ஹைதராபாத்” என்றான்.

”ஓ இந்தியாவா” என்று கேட்டோம்.

”இல்லை. ஹைதராபாத்” என்றான்.

”ஹைதராபாத் இந்தியாவில்தானே இருக்கிறது? உன் நாடு எது என்று கேட்டால் இந்தியா என்றுதானே சொல்லவேண்டும். உன் ஊர் எது என்று கேட்டால்தானே ஹைதராபாத் என்று சொல்லவேண்டும்” என்று கேட்டோம்.

”இல்லை. என் நாடு ஹைதராபாத்” என்றான்.

அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிப் போய்விட்டோம்.

(நிஜாம் ஹைதராபத்தை தனி நாடாகக் கேட்டார். ஹைதராபாத் இந்தையாவுடன் இணைந்ததை அப்துல் கதீர் இன்றுவரை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. இனியும் ஏற்க மாட்டான்)


நிகழ்ச்சி மூன்று:

அதே அப்துல் கதீர். அதே நிறுவனம். அதே சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.

ஹுதா டிவி - தவணை (மார்ட்கேஜ்) ஹராம் இல்லை

ஹுதா டிவி பற்றி சிலர் அல்லது பலர் அறிந்திருக்கலாம்.

உலகக் கல்வி அறிவும் இஸ்லாமிய மார்க்க ஞானமும் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் கொண்டு இதன் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய நவீன சூழலில், பல முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்க வழியில் செல்லும்போது சில சிக்கல்களையும் பல சந்தேகங்களையும் சந்திக்கிறார்கள். அவற்றுக்கான விடை தெரியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவவும், குர்ஆன் வசனங்களின் சரியான மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் பெறவும் அரபு மொழியைக் கற்றுக்கொள்ளவும் ஹுதா டிவி நிகழ்ச்சிகளைத் தருகிறது.
http://www.huda.tv/about-huda-tv

*

மார்ட்கேஜ் என்பது வட்டி கொடுப்பது என்பதால் அது ஹராம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இதன் உண்மை நிலை என்ன?

அதை விரிவாகவும் விளக்கமாகவும் ஹூதா டிவியில் கூறுகிறார் சேக் ஆசிம் அல்ஹகீம்.

யார் இந்த சேக் ஆசிம் அல்ஹகீம்?

இஸ்லாம் மார்க்கத்தை ஆங்கிலம் வழியாக உலகெங்கும் பரப்புவதில் முதன்மையான சவுதி அரேபியர்களில் இவரும் ஒருவர்.

ஜெத்தாவில் மொழியியல் பட்டப்படிப்பும், மக்காவில் இஸ்லாமிய மார்க்க உயர் கல்வியும் படித்தவர். 

இவர் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஊடகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகைச் சொற்பொழிவுகளை பள்ளிவாசல்களிலும் தருகிறார்.
http://www.huda.tv/huda-tv-programs/huda-stars/355-shaikh-assim-l-alhakeem

*

இஸ்லாம் மார்க்கத்தில் மார்ட்கேஜின் நிலை பற்றி அறிந்துகொள்ள நான் பல ஆய்வுகளை மேற்கொண்டேன். பெருன்பான்மையான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மார்கேஜ் ஹராம் அல்ல என்றே கூறுகின்றனர்.

நுணுக்கமாகப் பார்த்தால், வாடகை கொடுப்பதுதான் உண்மையிலேயே வட்டி. அதுதான் ஹராமானதாக ஆகிவிடும் என்ற கருத்தும் இருக்கிறது. அதை இன்னொரு பதிவில் நாம் விரிவாகக் காணலாம் இன்சால்லா!

இப்போது ஹுதா டிவியில் சேக் ஆசிம் அல்ஹகீம் என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்:

http://www.youtube.com/watch?v=fkfm0dJV3ks&feature=related

*

ஆகவே நண்பர்களே, மார்ட்கேஜ் ஹராம் என்று தவறாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியர்களின் வளர்ச்சியை உலக அரங்கில் கீழ்நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.

மார்ட்கேஜ் ஹராம் என்று நினைத்தால் வாடகை கொடுப்பதும் ஹராம் என்றும் ஆகிவிடும்.

பணத்தைக் கொண்டு பணத்தை லாபமாகப் பெற்றால் அது வட்டி. ஹராம் ஆகும்.

பொருளைக் கொண்டு பெறும் எதுவும் வணிகமாக ஆகுமே தவிர வட்டி ஆகாது. அது ஹலால்.