Saturday, July 14, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

தொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா?

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்.

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்.

இது ஹலால் இது ஹராம்
நல்ல கவிதை ஹலால் தவறான கவிதை ஹராம்
நல்ல இசை ஹலால் தவறான இசை ஹராம்

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன்.

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசை மனிதனை அடிமைப்படுத்துகிறது என்கிறார்கள். மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குரான் ஓதுதல் இசை.
பாங்கு சொல்லுதல் இசை.

இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது என்கிறார்கள் சிலர். முதலில் இவர்கள் இசை கூடும் என்று ஏற்றதற்குப் பாராட்டலாம்.

கருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்கள் வாய் இசைக்கான கருவிதான். காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான். இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை. உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.

இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!

இசைக்கு உங்களின் வரைவிலக்கணத்தைத் தாருங்கள் என்று சிலர் கேட்கிறார்கள். இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது.

இசைக்கருவிகள் கூடாது ராகத்தோடு பாடுவது கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த வாத்தியக் கருவிகளும் இல்லாமல், வெறும் மனித வாயை வைத்துக்கொண்டு பல ஓசைகளை எழுப்பி இசையாய்த் தருகிறார்களே அதை எப்படி கொள்வீர்கள்?

எந்த வாத்தியக் கருவியும் இல்லாமல் வெறும் வாயால் இனிய குரலால் ராகத்தோடு “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று பாடினால், அதை ஏற்றுக்கொள்ளுமா இஸ்லாம்?

அதிகாலையில் எழும் ஓசைகளை பல இசைக்கருவிகளைக் கொண்டு பின்னிசையாக அப்படியே அருவிபோலக் கொட்டச்செய்து உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்களே அது இசையா? அதை மறுக்குமா இஸ்லாம்?

இசையைக்கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்? இசை இசைக்கருவிகளில் அவை பயன்படுத்தும் முறையில் ஹலால் ஹராம் நிர்ணயமாகும். இஸ்லாம் அடிப்படையை அழகாகச் சொல்லிவிட்டது இனி அறிவுடையோராய் இருந்து நல்ல இஸ்லாமியராய் இருப்பது இஸ்லாமியனின் கடமையல்லவா?

ஓர் இசை உங்களைக் கெட்ட வழியில் இட்டுச் சென்றால் அது ஹராமான இசை. அது பாடலாக இருந்தால் என்ன? எந்த இசைக்கருவி வழி வந்தால் என்ன? கவிதையாய் இருந்தால் என்ன? கட்டுரையாய் இருந்தால் என்ன? துண்டுப் பிரசுரமாய் இருந்தால் என்ன, சுவரொட்டியாய் இருந்தால் என்ன? நல்லதை எடு கெட்டதை விடு. இதுதான் அடிநாதம். இதைப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை. இதைப் புரிந்துகொள்ளாதவனை இஸ்லாமியன் என்று எப்படித்தான் கூறுவது?

துன்பக்கடலை நீந்தும் போது தோணியாவதுமாகவும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதுமாகவும் இருந்தால், அந்த இசை கூடாதென்று அறிவுடைய மார்க்கம் எப்படிச் சொல்லும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

25 வருடங்களுக்குமுன் நீங்களும் நானும் சவுதி அரேபியாவின் தம்மாமிலிருந்த உங்கள் உறைவிடத்தில் உணவுண்ண அமர்ந்திருந்தபோது ஒரு ஸ்பூனை எடுத்துத் டேபிளில் தட்டிக் காட்டி இதுவும் இசைதான் என்றீர்கள். இன்றும் அதுபோலவே ஓசைக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்று நண்பர் ஒருவர் கிண்டலாய்க் சொன்னார்.

உங்கள் கையில் ஒரு ஸ்பூன் இருக்கிறது. அதை வைத்து டேபிளில் ஒரு தட்டு தட்டுகிறீர்கள். அது ஓசை எழுப்புகிறது. அதையே தொடர்ந்து சில முறை ஓர் ஒழுங்கில் தட்டுகிறீர்கள், இசை வந்துவிடுகிறதே.

இருபத்தைந்து வருடங்கள் கழித்தாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா என்று திருப்பிக் கேட்டேன்.

இளையராஜா ”பருவமே புதிய பாடல் பாடு” என்றோர் அருமையான பாடலை நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற பாலுமகேந்திராவின் படத்திற்கு இட்டிருந்தார். அதில் நாயகி நடையோட்டம் போவாள் அப்போதுதான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும். அவளின் நடையோட்ட ஓசைகளை அப்படியே அருமையான ஒத்திசையாக்கி இருப்பார். அதற்கு அவர் பயன்படுத்திய கருவியை இந்தச் சபையோர் அறிய வேண்டும். அது இளையராஜாவின் ஒரு கையும் ஒரு தொடையும்தான். யாதொரு இசைக்கருவியும் இல்லை.

இளையராஜா இசையில் ஜானகி நிலாக்காய்வதைத் தாங்கமுடியாமல் படு செக்சியாய்க் குரல் எழுப்புவார். அந்தப் பாடலின் இசை நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இசைக்கருவிகளே இல்லாமல் ஜானகியின் குரல்தரும் சேட்டைதான் தாங்கமுடியாது.

குரலா? கருவியா? எது சரி எது கூடாது என்று இப்போது கூறுங்களேன்?

குரலும் அல்ல கருவியும் அல்ல. அந்த இரண்டையும் சரியாகப் பயன்படுத்தினால் அது ஆகுமானது. தவறாகப் பயன்படுத்தினால் அது ஆகாதது. அவ்வளவுதான்!

ஹராமான இசைக்குத்தான் இஸ்லாத்தில் இடமில்லை. அது இசைமட்டுமல்ல எதுவானாலும் ஹராமானதாக அமையப்பெற்றால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சரியாகப் புரிந்துகொண்டீர்களென்றால் இஸ்லாம் எத்தனை அருமையான மார்க்கம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லாம் தட்டிப்பறிக்கும் பூதமாகத்தான் அது தெரியும்.

என் சிறுவயதில், தொட்டதை எல்லாம் குற்றம், குற்றம் என்று சிலர் கடுமையாக இஸ்லாம் பற்றிக் கூறியவற்றைக்கேட்டு என் மெல்லிய மனது வேதனைப்பட்டிருக்கிறது. என் மனம் மார்க்கத்தைவிட்டு விலகிப்போவதும் அதை நான் வலுக்கட்டாயமாக இழுப்பதுமான போராட்டமாக இருந்தது.

ஆனால் சற்றே அமைதியான அறிவினைப் பெற்றதும் நான் புரிந்துகொண்டேன். புரிந்துகொள்ளாதவர்களால் தவறாகப் போதிக்கப்படும் இஸ்லாம் இஸ்லாமே அல்ல. உண்மையான இஸ்லாம் நம் தெளிந்த அறிவில் இஸ்லாமின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் நம் பார்வையில் இருக்கிறது என்று கண்டுகொண்டேன். அதன்பின் வெட்டிப் பேச்சு, வீண் பயங்காட்டல் எல்லாம் என் செவி ஏறாமல் சறுக்கி விழுந்தன, மார்க்கத்தின் நோக்கம் அறியப்பட மார்க்கம் மனதில் சர்ரென்று மேலேறத் தொடங்கிவிட்டது.

என்னால் இயன்றவரை எளிமையாக, பண்போடு என் கருத்துக்களை முன்வைக்கிறேன். இன்சால்லாஹ் சிலருக்குப் போய்ச்சேராவிடினும் பலருக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நெருப்பைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். வீடு எறிந்துவிடும் என்று வீட்டில் நெருப்பின் பயன்பாட்டை மறுப்பது எத்தனை அறிவீனம்?

பயன்படுத்துவோம் எதையும் முறையாக அதுவே இஸ்லாம்.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன். அனைவரும் அறிவு தேடும் அறிவினைப் பெறவேண்டும். தெளிந்த திறந்த நல்லறிவு பெறவேண்டும்.

எந்த ஓர் இசைகருவியின் இசையும் இல்லாமல் ஓர் இஸ்லாமியன் சந்தோசகமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்பதில் தெளிவாக உள்ளோம். கோடிக்கணக்கான என்னைப்போன்றவர்கள் இருக்கிறார்கள். இதுவே இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் ஹதீசை கற்றறிந்த ஒட்டுமொத்த மார்க்க அறிஞர்களின் கருத்து என்றார் ஒருவர்.

எல்லா இசைக்கருவிகளின் இசையையும் கேட்டுக்கொண்டு ஓர் இஸ்லாமியன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியாதா? ஏன் என்று திருப்பிக் கேட்டேன் நான்.

இசைக்கருவிகளின் இசை இல்லாமல் **உங்களால்** சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்று சொல்லுங்கள். அதை மறுக்க நான் மட்டுமல்ல எவரும் முன்வரமாட்டார்கள். ஆனால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிக்காதீர்கள். அது தவறான செயல். அதை ஏற்க எல்லோரும் விரும்பமாட்டார்கள் என்று தெளிவாகச் சொன்னேன்.

இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம். அறிவியல் பூர்வமான வாழ்க்கைக்கு வழிதரும் அன்பு மார்க்கம். ஆனால் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒரு சர்வாதிகாரத்தனமாக சட்டங்கள் என்பதுபோலக் காட்டுகிறார்கள். இதனால் இளையவர்களைச் சிதறடித்து ஓடச் செய்கிறார்கள். மார்க்கத்தை ஒரு சுமையாகக் கருதச் செய்கிறார்கள். மார்க்கத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் மார்க்கத்திற்கு தீங்கு செய்கிறார்கள்.

இஸ்லாமியன் என்பவன் அறிவு தேடும் அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். இது இஸ்லாமியனின் அடிப்படைத் தகுதி. அந்தத் தகுதியை வளர்த்துக்கொள்ளாதவர்கள் அவர்களும் தவறிழைத்து மற்றவர்களையும் தவறிழைக்கச் செய்து மார்க்கத்தின் மேன்மையை உலக அரங்கில் சிதைக்கிறார்கள்.

மனதை மயக்குவது இசைக் கருவிகளின் இசை. அதனால் இசைக்கருவிகள் கூடாது என்றார் இன்னொரு நண்பர்.

ஒருவனின் மனதை மிக மிக அதிகமாக மயக்குவது எது என்று கூறமுடியுமா? அதாவது கவிதையைவிட, இசையைவிட அதிகமாக மயக்குவது எது? அப்படி எது மயக்குகிறதோ அதை அப்படியே இஸ்லாமில் தடை செய்துவிடலாமா?

நாக்கு - உணவில் மயக்கம் உண்டு. ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி - சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண் - காட்சிகளில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு - வாசனையில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல் - தொடு உணர்வில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல
புலன்கள் முழுவதுமாய் அடங்குவது அடக்கமாகும் நாளில்தான்

இந்த ஐம்புலன்களும் ஒருசேர மயங்கும் ஒற்றை விசயம் ஒன்றுண்டு
அதை வள்ளுவன் இப்படிச் சொல்லுவான்

குறள் 1101:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
மேனியால் தீண்டி
என ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது

இந்த ஒண்ணேமுக்கால் அடி குறளை வைரமுத்து தன் திரையிசைப்பாடல் ஒன்றில் இரண்டே சொற்களில் சொனார்: ”ஐம்புலன்களின் அழகியே”

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் குர்-ஆனில் தடுக்கப்படவே இல்லை. குர்-ஆனில் தடுக்கப்படாததை மனிதர்கள் தடுப்பது கூடவே கூடாது.

இசை பற்றிய ஹதீஸ்களில்தான் சில குழப்பங்கள் இருக்கின்றன. அவை ஆழமாகவும் அவற்றின் உறுதித்தன்மையை அறியும் முகமாகவும் அணுகப்படல் வேண்டும். அப்போதுதான் உண்மை தெளிவாகும்.

இசைக்கருவிகளை நபிகள் நாயகம் தடுக்கவில்லை என்பதற்கான ஹதீசுகளைப் பார்ப்போம்.

949. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும்விட்டு விடுங்கள்" என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஈதுல் பித்ர்... அல்லது ஈதுல் அள்ஹா... (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது 'புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), 'ஷைத்தானின் (இசைக்) கருவி" என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்" என்று கூறினார்கள்.

இசையைப் பற்றி இஸ்லாமியர் வேறுபட்ட நிலைகளில் நின்று என்னவெல்லாம் சொல்லுகிறார்கள் என்று காண்போம்.

1. முரட்டுப் பழமைவாதிகளோ ”இசையா சேச்ச்ச்சே.... சுத்தமா ஆவாது.... ஆவாது.... அதுதான் இஸ்லாம்” என்று ஒரே போடாய் இசையின் தலையில் பெருஞ்சுத்தியலை படீரென்று போட்டுவிடுகிறார்கள். இசை இல்லேல்ன்னா செத்தா போயிடுவியன்னு கேள்வி வேறு :)

2. மனுசனோட குரலைக் கொண்டு எதுனாச்சும் பாடுவியலா பாடிக்கோங்க, அதை மட்டும்தான் ஏத்துப்போம். அதுவும் குர்-ஆன் பாங்கு அப்படின்னு இறைவனோட வசனங்களாத்தான் இருக்கணும். அதான் இஸ்லாம். அதைவிட்டுட்டு எதுனாச்சும் இசைக்கருவிகளைக் கையில் எடுத்தியலோ அல்லது பாட்டுகீட்டு பாடுனியலோ ரெண்டு கையையும் ஒடிச்சுப்புடுவோம் நாக்கை இழுத்துவெச்சு அறுத்துப்புடுவோம்.

3. குரலைக் கொண்டு எதுவேணும்னாலும் பாடிக்கோங்க. சதோசமா இருங்க. ஆனால் வாத்தியக் கருவிகளைமட்டும் தொட்டுப்புடாதீங்க. அதுதான் இஸ்லாம் என்போரும் இருக்கிறார்கள். 3. நல்லா பாடுங்க, கூடவே அந்தக் கால அரபு நாட்டுல இருந்த ஒண்ணுரெண்டு இசைக்கருவிகளை வேண்டும்னா பயன்படுத்திக்கொள்ளுங்க. ஆனால் காவாலித்தனமான பாட்டெல்லாம் பாடிக்கிட்டுத் திரியாதிய.

4. இசை இஸ்லாமில் தடுக்கப்படவில்லை. தடுக்கப்படாததை தடுக்கப்பட்டது என்று சொல்வது இறைவனையே மதிக்காததன்மை. அது நமக்கு வேண்டாம். அதுதான் இஸ்லாம்.

5. இசைகூடாதுன்னா அப்படியே விட்டுடுங்களேன் என்று உபதேசம் செஞ்சிட்டு, சினிமா, நாடகம், பாட்டுன்னு அப்படியே ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள் சிலர். அவர்கள் கண்ட இஸ்லாம் அதுதான்.

6. இசையானால் என்ன, கவிதையானால் என்ன அல்லது வேறு கலைகளானால் என்ன, உன்னை முழுவதும் இழந்துவிடாத கட்டுப்பாட்டோடு மகிழ்ச்சியாய் வாழ். உண்ணு, பருகு, ஆனால் வரம்பு மீறினால் இறைவன் உன்னை மன்னிக்கமாட்டான். அவ்வளவுதான் இஸ்லாம். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு!

இன்னும்கூட சில வகைகளைக் கூறலாம். ஆனால் இதுவே போதும். இந்த வகைகள் ஒவ்வொன்றிலும் இங்குள்ளோரும் கூட ஒரு சிலராவது இருப்பர். ஆனால் உலகமொத்தம் என்று எடுத்துக்கொண்டால், நிச்சயம் அத்தனையிலும் ஏராளமானோர் உண்டு. ஏன் இந்த குழம்பிய நிலை? இவற்றிலிருந்து தெளிவுபெற நாம் என்ன செய்யவேண்டும்? யோசித்தீர்களா?

இதுதான் குர்-ஆன்
இதுதான் ஹதீஸ்
இதுதான் இஸ்லாம்

இவற்றில் மனிதர்களுக்கு இடையே நிலவும் கருத்துவேறுபாடுகளின் இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டே வரவேண்டும். அதற்கு திறந்த மனமும் தெளிந்த அறிவும் வளர்க்கப்படவேண்டும்.

வளர்த்தால் என்ன? ஏன் வளர்க்ககூடாது என்று ஓர் அலுச்சாட்டியம் சிலருக்கு? சிலரின் முரட்டுத்தனமான அணுகுமுறைகளாலும், அறிவைத் தேடாத இயல்புகளாலும், இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களாக இருக்கவிடாமல், ஒப்புக்குச் சப்பாணிகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் காலங்காலமாக.

இந்த நூற்றாண்டிலாவது நாம் சிந்திப்போமே ஒருங்கிணைந்து. மதம் வளர்ப்போமே மனிதம் போற்றி. மார்க்கம் என்றால் வாழ்க்கை என்று காட்டுவோமே!

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்!
அவனே ஈமான் உடையவன்.

2 comments:

  1. suuuuuuuuuuuuuuuper aaaaaaaaaaaatharam..... thnx a lot.............

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு

    ReplyDelete