Tuesday, October 23, 2012

கடலோர முஸ்லிம் வீட்டுக் கல்யாணம்

ஊரலசி உறவலசி
       உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
       பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
       வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
       அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
       முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
       தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
       ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
       உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
       பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
       நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
       அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
       முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
       நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
       பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
       அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
       பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
       இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
       ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
       மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
       மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
       அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
       புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
       வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
       இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
       மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
       குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
       சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
       செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
       வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
       உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
       கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
       பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
       சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
       மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
       எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
       நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
       சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
       ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
       முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
       தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
       சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
       வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
       முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
       சிரிப்பாளே பெண்ணின்தாய்

2 comments:

  1. நான் ரசித்து படித்தக் கவிதை !

    வாழ்த்துகள் அன்புச்சகோதரர் அன்புடன் புஹாரி அவர்களுக்கு

    இறைவன் நாடினால் ! தொடரட்டும்…

    ReplyDelete
  2. அருமையான கவிதை ஆசையை தூண்டி விட்ட கவிதை

    ஆசை ஆசை கடலோர மரக்கலராயர் கன்னியர்களை கட்டிக்கொள்ள ஆசை
    மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்
    கல்யாணத்தன்றே தந்துடுவார் பெண்ணோடு சொத்தையும்
    மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்ற வேண்டலில்லை
    நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல் 'ஜாமப்' பணியாரமும் கொடுப்பார்
    பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்
    தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்
    அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்
    கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்
    கிடைத்த பணமும் சேமித்த சொத்தும் குதிரைப் பெண்ணை பராமரிக்கவே போயிற்று
    ஆடியோடி நிக்கயிலே ஆசை அடங்கவில்லை
    கடலோரம் போய் கட்டிக் கொள்ள கொள்ளை ஆசை

    மரம்+கலம்+ராயர் - மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்) ன் உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது.
    (இராவுத்தர்=குதிரை ஒட்டி வணிகம் செய்தவர்)

    ReplyDelete