Wednesday, July 25, 2012

இஸ்லாத்தில் கவிதை - நாகூர் ரூமி

மனிதனையும் படைத்து
அவனுக்கு திருக்குர்னையும் அருளி
அதில் “கவிஞர்கள்” ( சூரத்துஸ் ஷ¤அரா) என்று
ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து
கவிஞர்களை கண்ணியப் படுத்திய
பிரபஞ்ச மகா கவியாகிய
இறைவனுக்கே புகழனைத்தும்.


இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஒரு கம்பன், காளிதாசன், மெளலானா ரூமி, உமர் கய்யாம், ஹகீம் சனாய், அல்லாமா இக்பால், காலிப், தாகூர் என்று சொல்ல முடியாவிட்டாலும் நம்மில் பலர் இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

அதில் பலர் நாடறியப் பட்டவர்களாக, ஏன் உலக அளவில் அறியப்பட்டவர்களாகக்கூட இருக்கின்றனர். அறியப்பட வேண்டிய பலர் அறியப்படாமல் கிடப்பதும் வேறு சிலர் தேவைக்கு அதிகமான புகழையும் விமர்சனத்தையும்கூட சம்பாதித்துக் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் கவிதை என்றாலே இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஒன்று என்று ஒரு கருத்து இருப்பதை பலருடன் பேசியதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

கவிதைகள் என்று சொல்லப்படுபவைகளை அவ்வப்போது எழுதுகின்ற பழக்கம் கொண்டவனாக நானும் இருப்பதால் எனக்கு அது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. உண்மையிலே இஸ்லாம் கவிதைகளை தரிக்கவில்லையா? தரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் எதிர்க்காமலாவது இருக்கிறதா என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.

திருக்குர்-ஆனும் ஹதீதும் கவிதைகளை எதிர்ப்பதாக சொல்லப்பட்ட தகவல்கள் என்னை பயமுறுத்தின. எனவே நான் அது பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளப் புறப்பட்டேன். என் பயணத்தில் நான் கண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

திருக்குர்ஆனும் ஹதீதுகளும் கவிதைகளை எதிர்க்கின்றனவா? முதலில் இந்தக் கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திருக்குர்னிலே கவிஞர்கள் என்ற 26வது அத்தியாயத்தின் வசனங்கள் 224 முதல் 226 வரை கவிஞர்களுக்கு எதிராகப் பேசுகின்றன :

224 : கவிஞர்கள் – அவர்களை வழி கெட்டவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.


225 : நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் ( மனம்போன போக்கில்) திரிகிறார்கள் என்பதை நீர் பார்க்கவில்லையா?


226 : இன்னும் நிச்சயமாக அவர்கள் (சொல்வன்மையினால்) தாங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) கூறுகின்றனர்.


மேற்காணும் மூன்று வசனங்களும் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் எதிரானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்பதை எழுதாத விதியாகக் கொண்ட கவிதைகளுக்குத்தான் இது பொருந்தும்.

எனென்றால் இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டபோது என்னைப்போலவே பயந்தும் குழம்பியும் போன மக்காவின் தலை சிறந்த முஸ்லிம் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, க’அப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் கியோர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டனர்.

பெருமானர், அவர்களைத் தேற்றி இவ்வசனங்கள் அவர்களைப் போன்ற உன்னதமான கவிஞர்களுக்குப் பொருந்தாது என்றும் பொய்யை அழகாகப் புனைந்து கூறுபவர்களையும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தவர்களையும்தான் இவ்வசனங்கள் சாடுகின்றன என்றும் நல்ல கவிஞர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும் சொல்லி அடுத்த வசனத்தையும் ஆதாரம் காட்டி ஆறுதல் சொல்கின்றனர் :

227 : ஆனால் ஈமான் கொண்டு நற்காரியங்களைச் செய்து, அல்லாஹ்வை அதிகமாக நினைந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழிவாங்கினார்களே அத்தகையோர்களைத் தவிர ( மற்றவர்கள் குற்றவாளிகள் ).

எனவே இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கவிதைக்கு எதிரான ஹதீதுகளையும் அணுகவேண்டும். அதோடு, பெருமானர் ஒரு தீர்க்க தரிசியே அன்றி ஒரு கவிஞரல்ல என்ற வசனத்தையும் (சூரா ஹக் 69:41) ஒரு கவிஞன் என்பவன் தீர்க்கதரிசியைப் போல இறையருள் பாலிக்கப்பட்டவன் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிற்க, கவிதைக்கு தரவாக இஸ்லாமிய வரலாற்றில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கப் புகுந்தால் அங்கே வியப்பூட்டும் தாரங்களும் நிகழ்வுகளும் கொட்டிக்கிடக்கின்றன !

யார் மகா கவி?

ஒரு முறை நான் என் பள்ளிக்கூட தமிழாசிரியரிடம் மகாகவி என்றால் யார்? ஏன் கம்பன் பாரதியார் இவர்களை மட்டும் மகாகவி என்று சொல்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.

மகாகவி என்று சொல்லப்பட்டவர்கள் யோசித்து கவிதை எழுதிக்- கொண்டிருக்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கவிதை கொட்டியது. அருவிபோல பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் நாமாக இருந்தால் ஓடிப்போய் தூக்குவோம். ஆனால் பாரதி அதுமட்டும் செய்ய மாட்டான். ” ஓடி விளையாடு பாப்பா” என்று உடனே பாட்டும் பாடிவிடுவான்.

வீட்டுக்கு சமைக்க கஷ்டப்பட்டு வாங்கி வரும் அரிசியை காக்கைக்கும் குருவிகளுக்கும் போட்டுவிட்டு உடனே “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடுவான்.

அதனால்தான் அவன் மகாகவி என்றார். அந்த விளக்கம் எனக்கு சரியானதாகவே பட்டது.

உண்மைதான். ஒரு கவிதை எழுத நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?!

இஸ்லாமிய வரலாற்றின் மகாகவிகள் இஸ்லாத்தில் கவிதையின் இடத்தைப் பார்க்கப் புகுவோமானால் அதன் வரலாற்றில் நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அங்கே மகா கவிகள் மலிந்து கிடந்தார்கள் என்பது !

ஆம், என் ஆசிரியர் மாகாகவிக்கு சொன்ன வரையறையை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் சொல்ல முடிகிறது !

ஒரு சின்ன உதாரணம் குஸா குலத்தைச் சேர்ந்த இப்னு சலீம் என்பவர் பெருமானாரிடம் வருகிறார். தமது குலத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் சொல்லிக்காட்டி பெருமானாரின் பாதுகாப்பைத் தேடுவதே அவரது நோக்கம்.

பெருமானாரை அவர்களது பள்ளிவாசலில் சந்திக்கும் அவர் மனதை உருக்கும் விதமாக தங்களது நிலையை விளக்கி ஒரு கவிதை பாடுகிறார் !

எனக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது. துயர உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு மனிதன் இருக்கும்போது அவனால் அழவோ புலம்பவோ மெளனமாக இருக்கவோதான் முடியும் என்று நான் அறிவேன்.

ஆனால் வரலாற்றில் இங்கே, கல்வியறிவு இல்லாத ஒரு மனிதன் அந்த மாதிரியான கட்டத்தில் கவிதை பாடியுள்ளான் ! கவிதை புனையக்கூட இல்லை ! அப்படியென்றால் என் தமிழாசிரியரின் வரையறைப்படி அரேபியர் அனைவருமே மகாகவிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை !

அரேபிய நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த அன்றாட அற்புதங்களில் இதுவும் ஒன்று ! ஒரு வகையில் அரேபிய நாட்டின் வரலாறு கவிதையின் வரலாறாகவே உள்ளது.

வீரர்களை விட கவிஞர்களுக்கே மக்கள் அதிக மதிப்பு கொடுத்தனர். அரேபியர்களின் கலாச்சாரத்தில் இருந்து கவிதை பிரிக்க முடியாத ஒரு அடிப்படையான கூறாக உள்ளது. கவிதை அந்த காட்டரபிகளின் கூடப் பிறந்தது. அதன் காரணம் அரபி மொழியின் கவிதைத் தன்மையா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது இப்போது நமது ஆராய்ச்சிக்கு உரிய விஷயமல்ல.

பொய்யான கவிதைகளைச் சாடும்போதுகூட இறைவன், “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்..” என்று ஒரு அழகான கவிதையை அல்லவா சொல்கிறான் !

கவிதையை அரேபியர்கள் “அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்” (ஸிஹ்ர் ஹலால்) என்றே வர்ணித்தனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தலை சிறந்த ஊடகமாக கவிதையை அரபிகள் கண்டனர்.

கவிஞன் என்பவன் ஜின் அல்லது ஷைத்தானால் தூண்டப்பட்டே எழுதுகிறான் என்று அவர்கள் நம்பினர். ஒரு முழுமையான மனிதனுக்குரிய அடையாளமாக மூன்று விஷயங்கள் இஸ்லாத்தின் வரலாற்று ரீதியான வருகைக்கு முந்திய அறியாமைக் காலத்தில் அறியப்பட்டன.

அவை: கவிதை, அம்பெய்தல், குதிரை ஏற்றம் ஆகியவையே என்று அரேபியர்களின் வரலாறு என்ற நூலில் (The History of the Arabs) அதன் ஆசிரியர் ·பிலிப் கே ஹிட்டி கூறுகிறார்.

அரேபிய இலக்கியமே கஸீதா என்று பொதுவாக அறியப்பட்ட, அழைக்கப்பட்ட கவிதையிலிருந்து ஊற்றெடுத்துப் பிறந்ததுதான். அரபிகளின் கலாச்சார சொத்தாக இருந்தது கவிதை. கவிஞர்கள் தங்கள் புகழையும் கீர்த்தியையும் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஆண்டு தோறும் துல்காயிதா மாதத்தில் கூடும் உக்காஸ் என்று சொல்லப்பட்ட சந்தையைப் பயன் படுத்திக்கொண்டனர்.

அப்போது நடைபெறும் கவிப்- போட்டிகளில் ஒவ்வொரு குலத்தின் கவிஞரும் தமது வீரம் ஈகை, மற்றும் மூதாதையர்கள் பற்றி பெருமையாகவும் விபரமாகவும் கூறுவர்.

போர்க்களத்தில்கூட வீரர்களின் வாட்களின் கூர்மைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக கவிஞர்களின் நாக்கு இருக்கவில்லை. அந்தக்கால அரபிகள் மனிதர்களின் அறிவை அவர்களின் கவிதையை வைத்தே அளந்தனர். தனது சமுதாயத்தின் வரலாற்று சிரியனாகவும் விஞ்ஞானியாகவும் அவர்கள் கவிஞனையே கண்டனர். அரேபியா “கவிஞர்களின் தேச” மாகவே இருந்தது.

ஆறு வகையான கவிஞர்கள்

வரலாற்று அறிஞர்கள் அரேபிய கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்து கவிஞர்கள். ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.

2. அல்முஹ்ஜரமூன்.

அறியாமைக் காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத் தழுவிய கவிஞர்கள். லபீத், போன்றவர்கள். இவர்களைப் பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.

இஸ்லாத்துக்கு வந்தபெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள். ஜரீர், ·ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.

முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள். பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.

மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள். அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முத’ஆஹிரூன்.

ஐந்துக்குப் பிறகு வரும் எல்லாக் கவிஞர்களும்.

மூன்று நான்கு ஐந்தாவது பிரிவில் உள்ளவர்களை முறையே சஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தப’அத் தாபியீன்கள் காலத்தோடு பொருத்திப் பார்க்க இயலும்.

முஅல்லகாத் என்பது என்ன?

அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை க’அபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயர். அதுவும் சாதாரணமாக அல்ல. தங்கத்தில் எழுதி ! இப்படி எழுதி தொங்கவிடப்பட்ட தங்கக் கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஏழு பேருடைய கவிதைகள் இந்த அந்தஸ்தைப் பெற்றன.

மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பிரிவில் முதல் இரண்டு பிரிவில் உள்ள கவிஞர்கள்தான் அவர்கள். அதில் லபீத் மட்டும் இஸ்லாத்தில் இணைகின்ற பாக்கியம் பெற்றார்.

அவருடைய இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடிய அசத்தியமே என்ற பொருள்படும் அலா குல்ல ஷையின் மா ஹலல்லாஹ¤ பாதில என்ற கஸீதா க’அபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டது மட்டுமல்ல அது பின்னால் பெருமானாரிடம் “உண்மையைச் சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் சம்பாதித்துக் கொண்டது.

கவிதையின் வலிமை இஸ்லாம் மெல்ல பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் எதிரிகள் வன்முறையிலும் வாள், அம்புகளைக் கொண்டு மட்டும் எதிர்க்கவில்லை. கவிதைகளைக் கொண்டும் கடுமையாக எதிர்த்தார்கள்.

மதினாவில் அவ்ஸ் கோத்திரத்தாரில் பெருமானாரை எதிர்ப்பவர்களில் ஒருவரான மர்வான் என்பவருக்கு அஸ்மா என்ற ஒரு மகள் இருந்தாள். அவள் கவிதைகள் புனைவதில் கெட்டிக்காரி. அன்சாரிகள் அறிவு கெட்டு அந்நியர் ஒருவரின் பேச்சில் மயங்கி தங்கள் மக்களை பத்ரு போரில் காவு கொடுத்து விட்டார்கள் என்ற பொருள்படும் கவிதை பாடினாள்.

அந்த கவிதையை மக்கள் பலரும் பாடக்கேட்ட ஒரு முஸ்லிம் ஆத்திரமடைந்து அஸ்மாவைக் கொலையே செய்துவிட்டார் !

ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகளையும் கவிஞர்களையும் பெருமானார் வெறுத்ததற்கு இதுவே முக்கியமான காரணம்.

” கவிதையால் நிரம்பிய வயிறைவிட கெட்டுப்போன உணவால் நிரம்பிய வயிறே பரவாயில்லை.” என்று பெருமானார் சொன்னதையெல்லாம் எதிர்ப்பான காலகட்டத்தின் ஒளியில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

க’அப் இப்னு ஜுஹைர் என்ற கவிஞரைக் கண்டவுடன் கொல்லும்படி பெருமானார் உத்தரவிட்டிருந்தார்கள் என்றால் கவிதை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வல்லதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது போதுமானது.

பின்னாளில் இதே ஜுஹைர்தான் பானத் சுத் என்ற புகழ் பெற்ற புகழ்ப்பாடலான முதல் புர்தாஷரீ·பை பெருமானார்மீது பாடி அவர்களின் போர்வையையும் பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதினாவின் க’அப் இப்னு அஷ்ர·ப் என்ற புகழ் பெற்ற கவிஞன் மக்கா சென்று பாடிய முஸ்லிம் விரோத கவிதைகளுக்கு எதிராக எதிர்ப்பாட்டு புனையுமாறு பெருமானார் ஹஸ்ஸானுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு முறை மதினாவில் பெருமானாருக்கும் பனூ தமீம் கூட்டத்தாருக்கும் நாவன்மை, கவித்திறமை இவைகளில் போட்டி நடந்தது. பனூ தமீம் சார்பாக அல் ஜிப்ரிகான் இப்ன் பத்ரு என்பவர் தம் பாட்டுத்திறமையைக் காட்டினார். பெருமானார் சொன்னதன் பேரில், ஹஸ்ஸான் முஸ்லிம்கள் சார்பாக எதிர்ப்பாட்டுக்கள் பாடி பதிலளித்து வென்றார்.

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் !

அவருடைய கவிதைகளுக்கு ரூஹ¤ல் அமீன் ஜிப்ரீல் (அலை)அவர்களைக் கொண்டு உதவி புரியுமாறு பெருமானார் இறைவனிடம் துஆ செய்துள்ளார்கள் !

இந்த மாதிரியான காலகட்டங்களில்தான் ” கவிதை நல்லதெனில் நல்லது கெட்டதெனில் கெட்டது” என்றும் ” சில கவிதைகளில் ஞானம் உள்ளது” என்றெல்லாம் பெருமானார் சொல்லியுள்ளார்கள்.

போர்க்களங்களில் கவிதை

கவிதை போர்க்குணம் கொண்டதாக இருப்பதாலோ என்னவோ இஸ்லாமிய வரலாற்றில் பல போர்க்களங்களோடு அது தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக போர்க்களங்களில் வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக வட்டப்பறையடித்து பாடல்கள் பாடும் பெண்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாயிருந்தது.

பத்ரு யுத்தத்திற்காக அபூஜஹ்ல் திரட்டிக் கொண்டு வந்த படையினருக்கு உற்சாகமூட்ட இத்தகைய பெண்கள் சிலரும் உடன் கிளம்பினர். உஹதுப் போரில் அபூசு·ப்யானின் மனைவி ஹிந்தாவின் தலைமையில் வந்திருந்த பெண்கள் தம்பூர் என்ற இசைக்கருவி இசைத்து, வட்டப்பறை முழக்கி டிப்பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டினர்.

அகழ்ப்போரில் அகழ் தோண்டும்போது களைப்பு மறக்க முஸ்லிம்கள் இறைவனின் புகழ்பாடி அருள்வேண்டும் பண்களை இசைத்தவர்களாய் அனைவரும் பணியைத் தொடங்கினர். கைபர் சண்டையின் போது படையினருக்கு உற்சாகமூட்டும் போர்ப்பரணி ஒன்றை புனையுமாறு மிர் இப்னு அல்கமா என்பவரை பெருமானார் பணித்தார்கள்.

ஹ¤னைன் போரில் கிடைத்த பங்குப் பொருள்களில் திருப்தியுறாத அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்ற கவிஞர் பெருமானார் மீது குறைப்பட்டு ஒரு கஸீதா பாடினார். அவர் நாக்கைத் துண்டிக்குமாறு பெருமானார் உத்தரவிட, அதன் உட்பொருளை உணர்ந்த அலியார் அவர்கள் அவருக்கு மேலும் 60 ஒட்டகங்களை கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். நூறு ஒட்டகங்கள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பத்ருப் போருக்குப் பிந்தைய மக்காவின் இரவுகள் யாவும் மர்ஸிய்யா (எனப் பட்ட இரங்கற்பா) க்களால் நிரம்பியிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

பெருமானாரின் கவிதை ஒரு யுத்தத்தில் காயம் பட்ட தன் கால் விரலைப் பார்த்து பெருமானார்

ஹல் அன் தி இல்லா இஸ்ப’உன் தமீத்தி
வ ·பீ சபீலில்லாஹி மா லகீத்தி


ரத்தம் வரும் நீயோ ஒரு விரல்தான் ஆனால்
இது அல்லாஹ்வுக்காக நீ கொடுத்த குரல்தான்

(தோராயமான தமிழாக்கம் எனது )  என்று பாடினார்கள்.

இந்த வரிகள் சல்மா இப்னு அம்ரல் அன்சாரியின் கவிதை என்பதாக புகாரி ஷரீ·பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் Dictionary of Islam தொகுத்த தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் யாருடைய கவிதை என்று சொல்லாமலே விட்டுவிட்டார்.

படிப்பவர்களுக்கு அது பெருமானாரே புனைந்த கவிதை போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. எனினும் கவிதை புனைவது பெருமானாரின் ஆளுமைக்கு ஏற்புடையதல்ல என்பதை திருக்குர்’ஆனிலிருந்தும் ஹதீதுகளிலிருந்தும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நூல்களில் எழுதியவர்களின் அறியாமை அல்லது உள்நோக்கம் இவற்றை நாம் உணர்ந்து கொள்ளாமல் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

ஏன், பெருமானார் ஒரு கவிஞராக இருந்தால் என்ன கேவலமா என்று கேட்கக்கூடாது. காரணம் ஒரு தீர்க்க தரிசியின் அந்தஸ்தும் இலக்கும் மிக உயர்ந்தது. அந்த இலக்கை அடைய கவிஞர்களின் திறமையையும் உண்மையையும் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர அவர்களே கவிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

இறை விருப்பப்படி. பெருமானார் குடும்பத்தாரின் கவிதைகள் பெருமானாருக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்களிடம் குறைஷிகள் வந்து பெருமானாரைப் பற்றி முறையீடு செய்து எச்சரித்துவிட்டுச் சென்றபோது, அபூதாலிப் அவர்கள் ஹரம் ஷரீ·பின் சிறப்பு, வம்ச மேன்மை, பெருமானாரின் சத்தியம், சற்குணம் இவை பற்றி கவிதை பாடுகிறார்கள் !

கவிதையின் முடிவில் ” நாம் ஈமான் கொள்ளவில்லை எனினும் உயிர் மூச்சுள்ளவரை அவரை தரிப்போம்” என்று கவிதையை முடிக்கின்றார்கள்! ”

எங்கள் மனைவி மக்களை மறந்து, முஹம்மதுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம் “ என்பது அவர்களின் இன்னொரு கஸீதா !

அபூபக்கர் சித்தீக் அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது, கவிதை இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய அன்னை ஆயிஷா அவர்கள் ஒரு ஈரடிப்பாடலை தம் தந்தையாரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைக் கேட்டு கண் திறந்த அபூபக்கர் அவர்கள் ” இவ்வளவு புகழ்ச்சி பெருமானாருக்கு மட்டுமே உரியது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

இருள் சூழ்ந்த இரவிலும் ஒளி விளக்கைப் போல மின்னுகிறது அண்ணலாரின் நெற்றி என்ற பொருள்படும் கஸீதாவை பெருமானாரின் மறைவுக்குப் பிறகு பாடியுள்ளார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்.

இந்த ரீதியில் அன்னை ச·பிய்யாவும் கவிதைகள் புனைந்துள்ளனர். ச·பிய்யா என்ற பெயருடைய பெருமானாரின் அத்தை ஒருவரும் மர்ஸிய்யா பாடல்களை எழுதியுள்ளார்கள். “இந்த உலகமே இருளடைந்து விட்டது” என்று தொடங்கும் இரங்கற்பாவை உமர்(ரலி) அவர்களும் உதுமான்(ரலி) அவர்களும் பாடியுள்ளனர். ”

அழு என் கண்களே” என்று தொடங்கும் கவிதையை ஹம்ஸா, அபூபக்கர், அப்பாஸ் போன்றோர் பாடியுள்ளனர். ”

துன்பத்தின் அளவுக்கு கண்ணீர் வருமானால் மேகத்தின் மழையை அது மிஞ்சிவிடும்” என்பதாக அலி அவர்கள் கவிதை பாடினர்.

” மிம்பக்தி மெளதில் முஸ்த·பா” என்று தொடங்கும் ஈரடிப்பாடலையும் அலியார் இயற்றியுள்ளனர்.

அஹ்மதுவின் கல்லறையின் நறுமணம் நுகர்வோருக்கு வேறு மணம் தேவையில்லை இவ்வாழ்வில் என்றும் பகலெல்லாம் இரவாகிவிடும் ( முஹம்மதுவைப் பிரிந்த என் ) வேதனைகளை பகல்மீது பொழிந்தால் என்றும் அன்னை ·பாத்திமா அவர்கள் பெருமானார் மீது கவிதை பாடியுள்ளார்கள்.

இவையெல்லாம் பெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின் சொல்லப்பட்ட இரங்கற் பாக்கள்.

துன்பத்தின் உச்சியிலும் வேதனைகளின் விளிம்பில் கூட அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக இன்னுயிரை விட்ட தியாகியாவார்கள். அவர்கள் உயிர் பிரிந்து கொண்டிருந்த சமயம் கடைசிவரை கவிதைகள் பாடிக்கொண்டே இருந்தார்கள்!

குபைப் இப்னு அதீ (ரலி) என்று ஒரு நபித்தோழர். இஸ்லாத்திற்காக எதிரிகளால் தூக்கில் போடப்பட்ட முதல் முஸ்லிம். தன் இறுதிசையாக தொழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அனுமதித்தவுடன் ஒளுச்செய்துவிட்டு சுருக்கமாக தொழுகையை முடித்துக்கொண்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு, ” நான் வெகு நேரம் தொழ விரும்பினாலும், மரணத்திற்கு பயந்து இறுதி நபியின் தோழர் வெகு நேரம் தொழுதார் என்று குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா” என்றார்களாம்.

இவர்களும் உயிர் பிரியும் தருவாயில் கவிதை பாடிக்கொண்டிருந்தார்கள் !


அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் யஸீதுக்குப் பிறகு கலீ·பாவாக இருந்தவர்கள். அபூபக்கர் சித்தீக் அவர்களின் பேரர் ஜுபைரின் மகன். ஹஜ்ஜாஜோடு ஹரம் ஷரீ·பில் நடந்த சண்டையின் போது அவர்கள் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தபோது கவிதை பாடினார்கள் !

மு’வியா(ரலி) அவர்கள் கலீ·பாவாக இருந்த காலத்தில் உடம்புக்கு முடியாமல் இருந்தபோது கண்ணுக்கு சுர்மாவும் எண்ணெயும் இட்டுக் கொண்டு ரோக்கியமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தில்தான் மக்களைச் சந்திப்பார்களாம்.

அப்போது அந்த சூழ்நிலை பற்றி கவிதை பாடுவார்களாம்! அதோடு அவர்களின் உடலைக் கழுவிக்கொள்ள உதவி செய்யும் தன் மகள்களைப் பற்றியும் கவிதை பாடுவார்களாம் !

ஹஸ்ரத் அலி(ரலி) அவர்கள் தாம் கொலை செய்யப்படுவோம் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தார்கள். பள்ளி வாசலுக்குச் செல்வதற்காக கஷ்டப்பட்டு எழுந்தபோது மரணம் பற்றியும் அதை துணிச்சலாக சந்திப்பதைப் பற்றியும் கஸீதா பாடினார்கள் !

இமாம் ஷா·பி’ஈ அவர்களை சித்ரவதை செய்தபோது, லுன் நபிய்யி தரிய்யத்தி, வ ஹ¤ம் இலய்ய வஸீலத்தீ எனது சேமிப்பெல்லாம் அருமை நபியின் வழித்தோன்றல்கள்தான் என்னும் பொருள்படும் கவிதையினைப் பாடினார்கள் !

இமாம் நஸீமி (ரஹ்) அவர்களை தலை கீழாகத் தொங்கவிடப்பட்டு அவர்கள் தோலை உரித்துக் கொன்றனர் பாவிகள். அப்போது ஏகத்துவ ஞானம் பற்றிய 500 பாடல்களைப் பாடி அவர்கள் உயிர் துறந்தார்கள் !

சூ·பி அபூபக்கர் ஷிப்லி அவர்கள் ” நீ வாழும் வீட்டில் ஒளியேற்ற மெழுகுவர்த்தி தேவையில்லை” என்று கவிதை பாடிக்கொண்டே உயிரை விட்டார்கள் !


இமாம் ஜா·பர் சாதிக் (ரலி), முஹ்யித்தீன் அப்துல் காதிரி ஜெய்லானி (ரலி), ராபியதுல் பஸரியா போன்ற அனேக இறை நேசர்கள் கஸீதாக்களில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது கவிஞர்கள் அல்லாதவர்கள் !

முடிவுரை

இஸ்லாமிய வரலாறு கவிதைகளால் நிரம்பியுள்ளது. கவிஞர்கள் புகழும் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர்களாக அரசர்களைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த உமர் இப்னு அபீ ராபியா என்ற காதல் கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்ற கவிஞருக்கு 70 அடிமைகள் இருந்தனராம் ! சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பொய்யாகிப் போனது !

அரேபிய இஸ்லாமிய வரலாற்றில் அநேகம் பேர் கவிதைகள் பாட முடிந்தவர்களாகவோ, அதாவது மகாகவிகளாகவோ, அல்லது குறைந்த பட்சம் கவிதைகளை கேட்பதில், உற்சாகப் படுத்துவதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருந்துள்ளனர்.

கொடுங்கோலன் என்ற பெயரை வாங்கிக்கொண்டுவிட்ட யஸீது கூட கவிதைகள் இயற்றுவதில் சிறந்து விளங்கினார் ! பல லட்சம் பேரை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பதுபோல ! ஆனாலும் உண்மை !

பெருமானரின் காலத்தை கவிதைகளுக்கும் பொற்காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிலே எஞ்சிய பொற்துகள்கள் உலகமுடிவு நாள் வரை பல திசைகளில் இருந்தும் பல மொழிகளிலும் நம்பிக்கையின் மற்றும் மனிதாபிமானத்தின் கடைசி பருக்கை இருக்கும் வரை மின்னிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்கும் பிரபஞ்ச மகா கவியாகிய எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக !

இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.

இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.

இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.

உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

அன்புதான் இஸ்லாம்.
கருணைதான் இறைவன்.

பல இடங்களில் அவன் அழுத்தமாகக் கூறுவது யாதெனில் அவன் மனிதர்களை சிரமங்களுக்கு உட்படுத்துவதே இல்லை என்பதைத்தான்.

நன்மை தீமை அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறானே தவிர மனிதர்களை அவன் சிரமங்களுக்கு உள்ளாக்குவதே இல்லை.

இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185) என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான்.

மெக்காவில் நோன்பு நோற்கும் காலம் என்பது 11 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரங்கள்தாம். நோன்பு என்பது மக்கா மதினா நகர வாசிகளைக் கொண்டுதான் வரையறுக்கப்பட்டது. அதைத்தான் உலக மக்கள் யாவரும் பின்பற்றுகிறோம்.

அப்படி பின் பற்றும்போது வரும் ஏற்ற இறக்கங்களை இறைவனின் வழியில் நாம் சரிசெய்துகொள்வதும் நமக்குக் கடமையாகும்.

ஒரு நாளில் அதிகப்படியாக 14 மணி நேரம் நோன்பு நோற்பது என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிரமம் தராததாக அமையும்.

கடுமையான வெயில் காலங்களில் குழந்தைகள் தாகம் காரணமாக சுருண்டு விழுந்துவிடும் நிலையை இறைவன் ஒருக்காலும் தரமாட்டான். ஏனெனில் அவன் கருணையுடையவன், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்.

நோன்பின் நோக்கம் அறியாமல் நோன்பு வைப்பதால் நன்மையைவிட தீமையே விளையும்.

நோன்பின் நோக்கங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என்று மூன்றினைக் கொள்ளலாம்.

1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,
2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,
3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.

நோன்பு நாட்களில் நோன்பு திறந்தபின்னும் நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம், ஒரு பேரீச்சம் பழத்தையும் ஒரு குவளை தயிரையும் கொண்டு நோன்பு திறந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.

நோன்பு திறக்க நம் ஊரில் வாங்கிக் குவிக்கும் உணவுவகைகள் ஏராளம். மற்ற மாதங்களில் உண்பதைவிட ரமதான் மாதத்தில்தான் நாம் அதிகம் உண்கிறோம்.

நோன்பின் நோக்கத்திற்கு இது மாறாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகல் முழுவதும் உறங்கியும் இரவெல்லாம் விழித்திருந்தும் சிலர் நோன்பை சமாளிக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் உறங்குவது தவறில்லைதான். ஆனால் இப்படி இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக்கொண்டு பசியை உணராதிருப்பது சரியா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் நிறைவேறாமல் கடமையே என்று நோன்பு நோற்பது கூடுமா என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்.
அன்புதான் இஸ்லாம் கருணைதான் இறைவன்.

Saturday, July 14, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா?

தொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா?

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்.

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்.

இது ஹலால் இது ஹராம்
நல்ல கவிதை ஹலால் தவறான கவிதை ஹராம்
நல்ல இசை ஹலால் தவறான இசை ஹராம்

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன்.

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசை மனிதனை அடிமைப்படுத்துகிறது என்கிறார்கள். மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குரான் ஓதுதல் இசை.
பாங்கு சொல்லுதல் இசை.

இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது என்கிறார்கள் சிலர். முதலில் இவர்கள் இசை கூடும் என்று ஏற்றதற்குப் பாராட்டலாம்.

கருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்கள் வாய் இசைக்கான கருவிதான். காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான். இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை. உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.

இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!

இசைக்கு உங்களின் வரைவிலக்கணத்தைத் தாருங்கள் என்று சிலர் கேட்கிறார்கள். இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது.

இசைக்கருவிகள் கூடாது ராகத்தோடு பாடுவது கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த வாத்தியக் கருவிகளும் இல்லாமல், வெறும் மனித வாயை வைத்துக்கொண்டு பல ஓசைகளை எழுப்பி இசையாய்த் தருகிறார்களே அதை எப்படி கொள்வீர்கள்?

எந்த வாத்தியக் கருவியும் இல்லாமல் வெறும் வாயால் இனிய குரலால் ராகத்தோடு “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று பாடினால், அதை ஏற்றுக்கொள்ளுமா இஸ்லாம்?

அதிகாலையில் எழும் ஓசைகளை பல இசைக்கருவிகளைக் கொண்டு பின்னிசையாக அப்படியே அருவிபோலக் கொட்டச்செய்து உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்களே அது இசையா? அதை மறுக்குமா இஸ்லாம்?

இசையைக்கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்? இசை இசைக்கருவிகளில் அவை பயன்படுத்தும் முறையில் ஹலால் ஹராம் நிர்ணயமாகும். இஸ்லாம் அடிப்படையை அழகாகச் சொல்லிவிட்டது இனி அறிவுடையோராய் இருந்து நல்ல இஸ்லாமியராய் இருப்பது இஸ்லாமியனின் கடமையல்லவா?

ஓர் இசை உங்களைக் கெட்ட வழியில் இட்டுச் சென்றால் அது ஹராமான இசை. அது பாடலாக இருந்தால் என்ன? எந்த இசைக்கருவி வழி வந்தால் என்ன? கவிதையாய் இருந்தால் என்ன? கட்டுரையாய் இருந்தால் என்ன? துண்டுப் பிரசுரமாய் இருந்தால் என்ன, சுவரொட்டியாய் இருந்தால் என்ன? நல்லதை எடு கெட்டதை விடு. இதுதான் அடிநாதம். இதைப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை. இதைப் புரிந்துகொள்ளாதவனை இஸ்லாமியன் என்று எப்படித்தான் கூறுவது?

துன்பக்கடலை நீந்தும் போது தோணியாவதுமாகவும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதுமாகவும் இருந்தால், அந்த இசை கூடாதென்று அறிவுடைய மார்க்கம் எப்படிச் சொல்லும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

25 வருடங்களுக்குமுன் நீங்களும் நானும் சவுதி அரேபியாவின் தம்மாமிலிருந்த உங்கள் உறைவிடத்தில் உணவுண்ண அமர்ந்திருந்தபோது ஒரு ஸ்பூனை எடுத்துத் டேபிளில் தட்டிக் காட்டி இதுவும் இசைதான் என்றீர்கள். இன்றும் அதுபோலவே ஓசைக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்று நண்பர் ஒருவர் கிண்டலாய்க் சொன்னார்.

உங்கள் கையில் ஒரு ஸ்பூன் இருக்கிறது. அதை வைத்து டேபிளில் ஒரு தட்டு தட்டுகிறீர்கள். அது ஓசை எழுப்புகிறது. அதையே தொடர்ந்து சில முறை ஓர் ஒழுங்கில் தட்டுகிறீர்கள், இசை வந்துவிடுகிறதே.

இருபத்தைந்து வருடங்கள் கழித்தாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா என்று திருப்பிக் கேட்டேன்.

இளையராஜா ”பருவமே புதிய பாடல் பாடு” என்றோர் அருமையான பாடலை நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற பாலுமகேந்திராவின் படத்திற்கு இட்டிருந்தார். அதில் நாயகி நடையோட்டம் போவாள் அப்போதுதான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும். அவளின் நடையோட்ட ஓசைகளை அப்படியே அருமையான ஒத்திசையாக்கி இருப்பார். அதற்கு அவர் பயன்படுத்திய கருவியை இந்தச் சபையோர் அறிய வேண்டும். அது இளையராஜாவின் ஒரு கையும் ஒரு தொடையும்தான். யாதொரு இசைக்கருவியும் இல்லை.

இளையராஜா இசையில் ஜானகி நிலாக்காய்வதைத் தாங்கமுடியாமல் படு செக்சியாய்க் குரல் எழுப்புவார். அந்தப் பாடலின் இசை நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இசைக்கருவிகளே இல்லாமல் ஜானகியின் குரல்தரும் சேட்டைதான் தாங்கமுடியாது.

குரலா? கருவியா? எது சரி எது கூடாது என்று இப்போது கூறுங்களேன்?

குரலும் அல்ல கருவியும் அல்ல. அந்த இரண்டையும் சரியாகப் பயன்படுத்தினால் அது ஆகுமானது. தவறாகப் பயன்படுத்தினால் அது ஆகாதது. அவ்வளவுதான்!

ஹராமான இசைக்குத்தான் இஸ்லாத்தில் இடமில்லை. அது இசைமட்டுமல்ல எதுவானாலும் ஹராமானதாக அமையப்பெற்றால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சரியாகப் புரிந்துகொண்டீர்களென்றால் இஸ்லாம் எத்தனை அருமையான மார்க்கம் என்பது விளங்கும். இல்லாவிட்டால் தொட்டதற்கெல்லாம் தட்டிப்பறிக்கும் பூதமாகத்தான் அது தெரியும்.

என் சிறுவயதில், தொட்டதை எல்லாம் குற்றம், குற்றம் என்று சிலர் கடுமையாக இஸ்லாம் பற்றிக் கூறியவற்றைக்கேட்டு என் மெல்லிய மனது வேதனைப்பட்டிருக்கிறது. என் மனம் மார்க்கத்தைவிட்டு விலகிப்போவதும் அதை நான் வலுக்கட்டாயமாக இழுப்பதுமான போராட்டமாக இருந்தது.

ஆனால் சற்றே அமைதியான அறிவினைப் பெற்றதும் நான் புரிந்துகொண்டேன். புரிந்துகொள்ளாதவர்களால் தவறாகப் போதிக்கப்படும் இஸ்லாம் இஸ்லாமே அல்ல. உண்மையான இஸ்லாம் நம் தெளிந்த அறிவில் இஸ்லாமின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் நம் பார்வையில் இருக்கிறது என்று கண்டுகொண்டேன். அதன்பின் வெட்டிப் பேச்சு, வீண் பயங்காட்டல் எல்லாம் என் செவி ஏறாமல் சறுக்கி விழுந்தன, மார்க்கத்தின் நோக்கம் அறியப்பட மார்க்கம் மனதில் சர்ரென்று மேலேறத் தொடங்கிவிட்டது.

என்னால் இயன்றவரை எளிமையாக, பண்போடு என் கருத்துக்களை முன்வைக்கிறேன். இன்சால்லாஹ் சிலருக்குப் போய்ச்சேராவிடினும் பலருக்குப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நெருப்பைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம் வீட்டையும் கொளுத்தலாம். வீடு எறிந்துவிடும் என்று வீட்டில் நெருப்பின் பயன்பாட்டை மறுப்பது எத்தனை அறிவீனம்?

பயன்படுத்துவோம் எதையும் முறையாக அதுவே இஸ்லாம்.

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன். அனைவரும் அறிவு தேடும் அறிவினைப் பெறவேண்டும். தெளிந்த திறந்த நல்லறிவு பெறவேண்டும்.

எந்த ஓர் இசைகருவியின் இசையும் இல்லாமல் ஓர் இஸ்லாமியன் சந்தோசகமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்பதில் தெளிவாக உள்ளோம். கோடிக்கணக்கான என்னைப்போன்றவர்கள் இருக்கிறார்கள். இதுவே இஸ்லாமிய வரலாறு, குர்ஆன் ஹதீசை கற்றறிந்த ஒட்டுமொத்த மார்க்க அறிஞர்களின் கருத்து என்றார் ஒருவர்.

எல்லா இசைக்கருவிகளின் இசையையும் கேட்டுக்கொண்டு ஓர் இஸ்லாமியன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியாதா? ஏன் என்று திருப்பிக் கேட்டேன் நான்.

இசைக்கருவிகளின் இசை இல்லாமல் **உங்களால்** சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும் என்று சொல்லுங்கள். அதை மறுக்க நான் மட்டுமல்ல எவரும் முன்வரமாட்டார்கள். ஆனால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிக்காதீர்கள். அது தவறான செயல். அதை ஏற்க எல்லோரும் விரும்பமாட்டார்கள் என்று தெளிவாகச் சொன்னேன்.

இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம். அறிவியல் பூர்வமான வாழ்க்கைக்கு வழிதரும் அன்பு மார்க்கம். ஆனால் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒரு சர்வாதிகாரத்தனமாக சட்டங்கள் என்பதுபோலக் காட்டுகிறார்கள். இதனால் இளையவர்களைச் சிதறடித்து ஓடச் செய்கிறார்கள். மார்க்கத்தை ஒரு சுமையாகக் கருதச் செய்கிறார்கள். மார்க்கத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் மார்க்கத்திற்கு தீங்கு செய்கிறார்கள்.

இஸ்லாமியன் என்பவன் அறிவு தேடும் அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். இது இஸ்லாமியனின் அடிப்படைத் தகுதி. அந்தத் தகுதியை வளர்த்துக்கொள்ளாதவர்கள் அவர்களும் தவறிழைத்து மற்றவர்களையும் தவறிழைக்கச் செய்து மார்க்கத்தின் மேன்மையை உலக அரங்கில் சிதைக்கிறார்கள்.

மனதை மயக்குவது இசைக் கருவிகளின் இசை. அதனால் இசைக்கருவிகள் கூடாது என்றார் இன்னொரு நண்பர்.

ஒருவனின் மனதை மிக மிக அதிகமாக மயக்குவது எது என்று கூறமுடியுமா? அதாவது கவிதையைவிட, இசையைவிட அதிகமாக மயக்குவது எது? அப்படி எது மயக்குகிறதோ அதை அப்படியே இஸ்லாமில் தடை செய்துவிடலாமா?

நாக்கு - உணவில் மயக்கம் உண்டு. ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

செவி - சொற்பொழிவுகளில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

கண் - காட்சிகளில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

மூக்கு - வாசனையில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

தோல் - தொடு உணர்வில் மயக்கம் உண்டு ஆனால் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை

ஐம்புலன்களும் மயங்கும் தன்மை வாய்ந்தவை
மயங்காதவை புலன்களே அல்ல
புலன்கள் முழுவதுமாய் அடங்குவது அடக்கமாகும் நாளில்தான்

இந்த ஐம்புலன்களும் ஒருசேர மயங்கும் ஒற்றை விசயம் ஒன்றுண்டு
அதை வள்ளுவன் இப்படிச் சொல்லுவான்

குறள் 1101:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழிகளால் கண்டு
செவிகளால் கேட்டு
நாவால் சுவைத்து
மூக்கினால் முகர்ந்து
மேனியால் தீண்டி
என ஐம்பொறிகளாலும்
அனுபவிக்கும் இன்பம்
பெண்ணிடம் மட்டுமே உள்ளது

இந்த ஒண்ணேமுக்கால் அடி குறளை வைரமுத்து தன் திரையிசைப்பாடல் ஒன்றில் இரண்டே சொற்களில் சொனார்: ”ஐம்புலன்களின் அழகியே”

குரல் வழி இசையும், கருவி வழி இசையும் குர்-ஆனில் தடுக்கப்படவே இல்லை. குர்-ஆனில் தடுக்கப்படாததை மனிதர்கள் தடுப்பது கூடவே கூடாது.

இசை பற்றிய ஹதீஸ்களில்தான் சில குழப்பங்கள் இருக்கின்றன. அவை ஆழமாகவும் அவற்றின் உறுதித்தன்மையை அறியும் முகமாகவும் அணுகப்படல் வேண்டும். அப்போதுதான் உண்மை தெளிவாகும்.

இசைக்கருவிகளை நபிகள் நாயகம் தடுக்கவில்லை என்பதற்கான ஹதீசுகளைப் பார்ப்போம்.

949. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும்விட்டு விடுங்கள்" என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஈதுல் பித்ர்... அல்லது ஈதுல் அள்ஹா... (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது 'புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), 'ஷைத்தானின் (இசைக்) கருவி" என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்" என்று கூறினார்கள்.

இசையைப் பற்றி இஸ்லாமியர் வேறுபட்ட நிலைகளில் நின்று என்னவெல்லாம் சொல்லுகிறார்கள் என்று காண்போம்.

1. முரட்டுப் பழமைவாதிகளோ ”இசையா சேச்ச்ச்சே.... சுத்தமா ஆவாது.... ஆவாது.... அதுதான் இஸ்லாம்” என்று ஒரே போடாய் இசையின் தலையில் பெருஞ்சுத்தியலை படீரென்று போட்டுவிடுகிறார்கள். இசை இல்லேல்ன்னா செத்தா போயிடுவியன்னு கேள்வி வேறு :)

2. மனுசனோட குரலைக் கொண்டு எதுனாச்சும் பாடுவியலா பாடிக்கோங்க, அதை மட்டும்தான் ஏத்துப்போம். அதுவும் குர்-ஆன் பாங்கு அப்படின்னு இறைவனோட வசனங்களாத்தான் இருக்கணும். அதான் இஸ்லாம். அதைவிட்டுட்டு எதுனாச்சும் இசைக்கருவிகளைக் கையில் எடுத்தியலோ அல்லது பாட்டுகீட்டு பாடுனியலோ ரெண்டு கையையும் ஒடிச்சுப்புடுவோம் நாக்கை இழுத்துவெச்சு அறுத்துப்புடுவோம்.

3. குரலைக் கொண்டு எதுவேணும்னாலும் பாடிக்கோங்க. சதோசமா இருங்க. ஆனால் வாத்தியக் கருவிகளைமட்டும் தொட்டுப்புடாதீங்க. அதுதான் இஸ்லாம் என்போரும் இருக்கிறார்கள். 3. நல்லா பாடுங்க, கூடவே அந்தக் கால அரபு நாட்டுல இருந்த ஒண்ணுரெண்டு இசைக்கருவிகளை வேண்டும்னா பயன்படுத்திக்கொள்ளுங்க. ஆனால் காவாலித்தனமான பாட்டெல்லாம் பாடிக்கிட்டுத் திரியாதிய.

4. இசை இஸ்லாமில் தடுக்கப்படவில்லை. தடுக்கப்படாததை தடுக்கப்பட்டது என்று சொல்வது இறைவனையே மதிக்காததன்மை. அது நமக்கு வேண்டாம். அதுதான் இஸ்லாம்.

5. இசைகூடாதுன்னா அப்படியே விட்டுடுங்களேன் என்று உபதேசம் செஞ்சிட்டு, சினிமா, நாடகம், பாட்டுன்னு அப்படியே ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள் சிலர். அவர்கள் கண்ட இஸ்லாம் அதுதான்.

6. இசையானால் என்ன, கவிதையானால் என்ன அல்லது வேறு கலைகளானால் என்ன, உன்னை முழுவதும் இழந்துவிடாத கட்டுப்பாட்டோடு மகிழ்ச்சியாய் வாழ். உண்ணு, பருகு, ஆனால் வரம்பு மீறினால் இறைவன் உன்னை மன்னிக்கமாட்டான். அவ்வளவுதான் இஸ்லாம். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு!

இன்னும்கூட சில வகைகளைக் கூறலாம். ஆனால் இதுவே போதும். இந்த வகைகள் ஒவ்வொன்றிலும் இங்குள்ளோரும் கூட ஒரு சிலராவது இருப்பர். ஆனால் உலகமொத்தம் என்று எடுத்துக்கொண்டால், நிச்சயம் அத்தனையிலும் ஏராளமானோர் உண்டு. ஏன் இந்த குழம்பிய நிலை? இவற்றிலிருந்து தெளிவுபெற நாம் என்ன செய்யவேண்டும்? யோசித்தீர்களா?

இதுதான் குர்-ஆன்
இதுதான் ஹதீஸ்
இதுதான் இஸ்லாம்

இவற்றில் மனிதர்களுக்கு இடையே நிலவும் கருத்துவேறுபாடுகளின் இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டே வரவேண்டும். அதற்கு திறந்த மனமும் தெளிந்த அறிவும் வளர்க்கப்படவேண்டும்.

வளர்த்தால் என்ன? ஏன் வளர்க்ககூடாது என்று ஓர் அலுச்சாட்டியம் சிலருக்கு? சிலரின் முரட்டுத்தனமான அணுகுமுறைகளாலும், அறிவைத் தேடாத இயல்புகளாலும், இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களாக இருக்கவிடாமல், ஒப்புக்குச் சப்பாணிகளாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் காலங்காலமாக.

இந்த நூற்றாண்டிலாவது நாம் சிந்திப்போமே ஒருங்கிணைந்து. மதம் வளர்ப்போமே மனிதம் போற்றி. மார்க்கம் என்றால் வாழ்க்கை என்று காட்டுவோமே!

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்!
அவனே ஈமான் உடையவன்.

இறைவன் யார்?

இறைவனைப் பற்றி அவன் குணம் யாது என்பது பற்றி குர்-ஆனில் சொல்லப்பட்டதை அக்கறையோடு கவனித்தால் இஸ்லாம் பற்றிய தெளிவு  தெளிவாகவே பிறக்கும்.

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்

குர்-ஆனின் தொடக்கமே இந்த வரிகள்தாம்!

இறைவன் யார்?

அன்புடையவனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அன்பிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அன்பிருக்கிறது
ஆனால் இறைவனிமிருக்கும் அன்பு எப்படியானது?
நிகரற்றது - அப்படியான நிகரற்ற அன்பினை
மனிதனால் பெறவே முடியாது

அருளுடையோனே இறைவன்.
இறைவனிடம் மட்டுமா அருளிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அருளிருக்கிறது
ஆனால் இறைவனிடமிருக்கும் அருள் எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவிலா அருளை
மனிதனால் பெறவே முடியாது

அறிவுடையோனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அறிவிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அறிவிருக்கிறது
ஆனால் இறைவனிடம் இருக்கும் அறிவு எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவில்லாப் பேரறிவை
மனிதனால் பெறவே முடியாது

நீங்கள் அறியாததையும் அறிந்தவன் இறைவன்
அளவற்ற நிகரற்ற அறிவுடையோன் இறைவன்

அதனால்தான் அவன் மனிதர்களிடம் சொல்கிறான்
என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும்
உங்களை நான் படைக்கவில்லை என்று

இறைவனை அறிவதென்பதென்ன சும்மாவா?
அதற்கு எத்தனை அறிவு வேண்டும்?

என்னை அறிவதற்காகவே உங்களைப் படைத்தேன்
என்று இறைவன் கூறும்போது எத்தனை அறிவை
அவன் மனிதனுக்குத் தந்திருப்பான்

மனிதன் அதைப் பயன்படுத்த வேண்டாமா?

அறிவைத் தேடும் அறிவுடையவன்தானே இஸ்லாமியன்!

குடும்பக்கட்டுப்பாடும் இஸ்லாமும்

உலகில் இன்று 7 பில்லியன் (700 கோடி) மக்கள் வாழ்கிறார்கள். 1804ல் 1 பில்லியனாகத்தான் மக்கள் இருந்தார்கள், பின் வான நட்சத்திரங்களின் எண்ணிக்கையைத் தோற்கடிக்கிறேன் பார் என்று வளரத் தொடங்கிவிட்டார்கள்

1804ல் 1 பில்லியன்
1930ல் 2 பில்லியன்
1960ல் 3 பில்லியன்
1975ல் 4 பில்லியன்
1987ல் 5 பில்லியன்
1999ல் 6 பில்லியன்
2011ல் 7 பில்லியனாக வளர்ந்துவிட்டார்கள்

இந்த விகிதத்தில் பயணப்பட்டால் இந்தியா வல்லரசு ஆகும்போதும் 8 பில்லியன் மக்கள் உலகில் இருப்பார்கள்.

மனிதன் தன் உணவுக்காக வேட்டையாடுவதையும் தானே வளர்ந்த காட்டுத் தாவரங்களையும் நம்பியிருந்தபோது உலக மக்கள் தொகை மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 15 மில்லியன் (1.5 கோடி) என்று கணக்கிடலாம்.
விவசாயம்தான் முதன் முதலில் உயிர்களைக் காக்க வந்த ரட்சகன். இதனால் மக்கள்தொகை சர்ரென்று உயர்ந்தது.

இயற்கை நாசங்களும், கொடூரமான வியாதிகளும், போர்களும் மக்களைக் கொன்று குவிக்க மக்கள் தொகை கணிசமாகக் குறைவதும் பின் வளர்வதுமாய் இருந்து வந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு, மக்கள் தொகையில் ஒரு பெரும் சாதனையே புரிந்திருக்கிறது. 1900ஆம் வருடம் சுமார் 1.6 பில்லியனாய் இருந்த மக்கள் தொகை கிடுகிடுவென வளர்ந்து நூறே ஆண்டுகளில் அதாவது 2000ல் 6 பில்லியன் ஆனது.

காரணம் மரணங்கள் குறைந்துபோயின. மக்களை மரணத்திலிருந்து காத்த பெருமை, சுகாதார முன்னேற்றத்திற்கும், அறிவியல் மருத்துவ வளர்ச்சிக்கும், பசுமைப் புரட்சிக்கும், குறைந்துபோன கொடூரப் போர்களுக்கும் போய்ச்சேரும்.
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது - கண்ணதாசன்
மரணைத்தை வென்றுகொண்டிருக்கிறோம். ஆகவே பிறப்பையும் வெல்ல வேண்டுமே? அப்போதுதானே ஓரளவுக்குச் சமநிலை நிலவும்.
உண்ணுங்கள் பருகுங்கள். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்க மாட்டான். என்பது நபிமொழி.

8 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் இந்த உலகில் என்று வைத்துக்கொள்வோம். என்றால் அதில் பெண்கள் கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆவார்கள். அதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருப்பவர்கள் சுமார் 2 பில்லியன் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அத்தனை பேரும் பந்தயத்தில் தங்கப் பதக்கத்துக்காக ஓடுபவர்களின் உத்வேகத்தோடு பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் என்னாகும்? அதுவும் இப்போதெல்லாம் அதிகமாக இரட்டையர்கள், மூவர்கள், நால்வர்கள் என்று பெற்றெடுக்கிறார்கள்.

ஒரு வருடத்திற்கு 2 பில்லியன் அதாவது 25 விழுக்காடு என்று மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லுமா? ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படி ஒரு கணக்கு இட்டேன். ஆனாலும் பிரச்சினை என்னவென்று புரிகிறதல்லவா?
அதோடு வதவதவென்று பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு தாய் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பிள்ளைகளை பெற்றோர்களால் கவனிக்கவும் முடிவதில்லை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடிவதில்லை. பள்ளிக்கு அனுப்பிவைக்கவும் முடிவதில்லை. அவர்கள் வளரும்போது வீட்டில் இடமும் இல்லை. வீடு கட்ட ஊரில் நிலமும் இல்லை. வயல் வெளிகளை அழித்து வீடுகள் கட்டி முடித்தாகிவிட்டது. இனி எதை அழிக்க? இந்த இயற்கை நாசம் நம்மை எங்கே கொண்டுபோய் விடும்?

இப்போதே வாகனம் நிறுத்த இடம் இல்லை என்பதுபோக மனிதன் நிற்கவே இடமில்லை என்ற நிலை வளர்கிறது. வீட்டில் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. வாழ வசதியான வேலை இல்லை. இப்படி இல்லை இல்லை என்ற பட்டியல்தான் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் பிறப்பு மட்டும் அடுக்குமல்லியைப்போல் இருக்கிறது என்று வந்தால் எப்படி?

அடுக்குமாடிகள் கட்டிக்கட்டி அடுக்கி அடுக்கி மக்களைப் படுக்க வைத்தும் வீடு கட்ட காடுகளை அழிக்கிறார்கள், தோட்டங்களை அழிக்கிறார்கள், வயல்வெளிகளை அழிக்கிறார்கள். இயற்கை இதனால் தடுமாறி நிற்கிறது. வானிலை அறிக்கையெல்லாம் இப்போது கேலிக்குறியதாக ஆகிவருகிறது. உலக உருண்டைக்குள் என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. இதில் 2012ல் கதை முடிஞ்சுது என்று மாயன் காலண்டர்வேறு பயமுறுத்துகிறது. இயற்கை வளங்களையெல்லாம் அழித்து முடித்துவிட்டால் மனிதன் வாழ்வதற்கு எங்கே செல்வான்?

ஆகவே குடும்பக்கட்டுப்பாடு என்பது காலத்தின் கட்டாயம் கருதி மிகவும் அவசியமானது. அதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

இஸ்லாமில் குடும்பக்கட்டுப்பாடு கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். கூடும் ஆனால் சில சட்டதிட்டங்களோடு என்று சிலர் கூறுகிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை அரசாங்கம் ஒரு சட்டமாக ஆக்கி மக்கள் மேல் திணிக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்றைய
பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

ஒரு குழந்தையே அதிகம் என்று அலறும் பெண்கள்தான் இன்று ஏராளம். முன்பு போல ஆணாதிக்கம் மிகுந்த சூழ்நிலை இன்று இல்லை. ஆகவே பெண்கள் கற்றறிந்தவர்களாகி கருத்தடை சாதனங்களின் பக்கம்தான் சாய்கிறார்கள். பெண்கள் நிம்மதியாக தங்களுக்கு இயலும் பொறுப்புகளோடு வாழ்வதில் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கிறார்கள். கணவன், அளவோடு குழந்தைகள் என்று கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையையே விரும்புகிறார்கள். என் நட்பு வட்டத்தில் நான் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்குமேல் கண்டதில்லை. பலர் ஒரே குழந்தையோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் இந்த வாழ்க்கை முறை மாற்றமும் விருப்பமும்தான் ஓரளவுக்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே, விரும்புவோர் விரும்பும் வகையில் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை மேற்கொள்ளத்தானே வேண்டும்? உடலுக்குக் கேடு விளைவிக்கும் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையை நம் தேவைக்கேற்ப சரியாகப் பெற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் நலம்.

இதையெல்லாம் இன்று அறிவு ஜீவிகளாய் அடிமைத் தளை அறுபட்டவர்களாய் வளர்ந்துவிட்ட இன்றைய பெண்கள் மிகச் சரியாகவே செய்கிறார்கள். வேறு என்ன இதில் சொல்வதற்கு இருக்கிறது?
உண்ணுங்கள் பருகுங்கள். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான் என்பதுதானே நபிமொழி?

மக்கள் தொகை நெருக்கடியான நிலையை எட்டிக்கொண்டிருக்கும்போது, அதன் வளர்ச்சி விகிதம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்கும்போது, வரம்பு மீறுதல் என்பது எது என்று யோசித்தால் இறைவன் எதற்காக நம்மை மன்னிப்பான் எதற்காக மன்னிக்கமாட்டான் என்பது தெளிவாகிவிடுமல்லவா?

அதோடு, அறிவைத் தேடும் அறுவுடையோனே இஸ்லாமியன் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறதல்லவா?

இறைவன் ஆணா பெண்ணா?

இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன்.

அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

இறைவனை அவன் என்று அவனே கூறுவது, மரியாதை நிமித்தமாகக் கூறப்படும் கால வழக்குச் சொற்கள் காரணமாகவேயன்றி வேறில்லை.

சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்லன், பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.

அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?

இறைவனுக்கு உருவம் உண்டா?

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர்.

குர்-ஆன் தனித்துவமான உயர் இலக்கிய நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருக்கிறது. அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால், உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64

இதன்படி அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். அதனால் இறைவன் உருவம் உடையவன் என்கிறார்கள்.

ஆனால் மேலே உள்ள வசனத்தை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

குர்-ஆன் வசனங்கள் உயர் இலக்கிய நடையிலேயே இருக்கின்றன. அவற்றுக்கு சொல்லுக்குச் சொல் விளக்கம் கூறுவது பல சமயம் பிழையாகிவிடும்.


சில வசனங்கள் மிக எளிமையானவை அவற்றை எளிதில் நேரடியாகப் பொருள் கொள்ள இயலும். ஆனால் வேறு சில வசனங்கள் அப்படியானவை அல்ல. அப்படியான வசனங்களின் கருத்துக்களை முழுமையாய் உள்வாங்கிக்கொண்டு பின் பொருள் கூறவேண்டி இருக்கும். அப்போதுதான் அவை சரியாக அமையும்.

அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று யூதர்களைப் பார்த்து இந்த வசனம் இறங்கி இருக்கிறது. இந்த வசனம் இறங்கியபோது, யூதர்களின் கைகள் கயிற்றால் பிணைத்து கட்டப்பட்டு இருந்தனவா? இல்லையே? பிறகு ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது?

ஒருவனின் கைகள் கயிற்றால் கட்டப்படாதிருக்கும்போது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் நிற்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதற்கு என்ன பொருள்? தன்னால் இயன்றதை தன்னால் செய்யமுடியாத இக்கட்டில் நான் நிற்று தவிக்கிறேன் என்று பொருளல்லவா?

யூதர்களின் கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று கூறினால், யூதர்களால்தான் எதையும் செய்யமுடியாது என்று இறைவன் கூறுவதல்லவா? குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாய்ப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது ஆபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும்.

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று யூதர்கள் சொன்னால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வால் எதையும் செய்யமுடியாது என்று ஏளனம் செய்து அதை நம்பவும் வைத்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கமல்லவா? அதற்காகவே தொடுக்கப்பட்ட ஏளனச் சொற்கள் அல்லவா அவை?

இங்கே கைகள் என்று கூறுவது, யூதர்களுக்கும் வெறும் கைகள் அல்ல, இறைவனுக்கும் வெறும் கைகள் அல்ல என்பது தெளிவாகிறதா?

இங்கே கைகள் என்பது சக்தி. ஆகவே அந்தக் குர்-ஆன் வசனத்திற்கான விளக்கம் இதோ:

அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியாது அதற்கான சக்தி அவனிடம் இல்லை என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்களுக்குத்தான் எதையும் செய்யக்கூடிய சக்தி இல்லை. இப்படி யூதர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வோ எதையும் செய்யக்கூடிய வல்லமையை அளவின்றி பெற்று இருக்கிறான்.

இதைச் சொன்னது யார்?

இந்த
முழு மொத்தப் பிரபஞ்சமும்
அதையும் தாண்டியதுமான
யாவும் எல்லாமும்
முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன

உன் பிறப்பு
உன் இறப்பு
உன் அறிவு
உன் அழகு
உன் வாழ்க்கை
இன்னும் உன் எல்லாமும்
என்றோ தீர்மானிக்கப்பட்டுவிட்டன

இந்த உலகம்
இயங்கி இருக்கப்போகின்ற நீளம்
இன்னும் இப் பரந்த வெளியில்
வரப் போகின்ற யாவும் எல்லாமும்
அவை உருவாக்கப்படுவதற்கும்
முன்னதாகவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டன

Sunday, July 1, 2012

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா?

தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பாடிசைப்பார்கள். அதற்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் இஸ்லாமிய மார்கத்திற்கு உகந்ததா? ”தரித்த நறும் திலகமுமே” என்றெல்லாம் வருகிறது. திலகம் என்றெல்லாம் சொல்வது சரியா? இறைவனுக்கு இணைவைப்பதாக ஆகாதா?


தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அதை இறைவனுக்கு இணைவைப்பதாக நினைக்கிறார்கள் சிலர்.  அது தவறான கருத்தாகும்.

தாய் சிறந்தவள், தாய்மொழி இனிமையானது, தாய்நாடு நேசம் மிகுந்தது என்று எத்தனையோ விசயங்கள் மனிதனோடு இரண்டறக் கலந்து கிடப்பவை.

ஓர் ஆன்மிகவாதிக்குத் தன் இறைவனோ உள்ளத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கிறான்.

தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றின் மீதான அவன் பற்றும் பாசமும் நேசமும் தன் இறைவனை அவன் எங்கே வைத்திருக்கிறானோ அந்த இடத்திலிருந்து இறக்கிவிட்டுவிட வழியே இல்லை.

அப்படி இறக்கிவிட்டுவிடுமானால், அவனுடையது உண்மையான பக்தியே இல்லை.

நெகிழ்வதும், மகிழ்வதும், புகழ்வதும், வாழ்த்துவதும், பாராட்டுவதும், அன்பு செய்வதும், கருணை கொள்வதும், கூடாது என்றால் மனித வாழ்க்கையே கூடாது என்று பொருளாகிவிடும்.

மனித வாழ்க்கையை அனுபவிக்காவிட்டால் பிறகு மனித வாழ்க்கையே தேவையில்லை. இறைவனோ மனித வாழ்வை அனுபவிக்கச் சொல்கிறான்.

தமிழ்த்தாய் வாழ்த்து:

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !


பொருள்:

அலை கடலே ஆடையான
இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு
பாரத நாடே முகமாம்
தென்திசை அதன் நெற்றியாம்
அதில் திலகமென திகழ்வது திராவிடத் திருநாடாம்
அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண
எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
பெருமை மிக்க பெண்ணான தமிழே
என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய
இந்த அழகைக் கண்டு வியந்து,
செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்

இந்த அழகான பாடலில் இறைவனுக்கு இணைவைப்பது என்று ஏதேனும் உள்ளதா?

மதம் என்று வரும்போது சிலரின் உணர்வுப் பூர்வமான உள்ளம் கொக்கின் தலையில் வெண்ணை வைக்கும் அளவுக்கு அறிவின் ஒளியைக் குறைத்துக் கொண்டுவிடுவது இறைவனே விரும்பாத ஒன்று.

இறைவன் தன்மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கிறான். மூட நம்பிக்கை கொள்ளச் சொல்லவே இல்லை.

இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு சிறப்பினைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திலகம்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதன் பொருள் என்ன? உயர்வானது சிறப்பானது என்பதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா?

இறைவனுக்கு இணைவைப்பது என்றால் இன்னொருவனைக் காட்டி இவனும்  இறைவன் என்று கூறி தொழுவது.

”பாரதத்தின் நெற்றியான தென் திசையின் திலகமாக இருப்பது திராவிடத் திருநாடு” எத்தனை அழகாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாராட்டாமல், வேண்டாததை ஏன் நினைக்கின்றன சில மனங்கள்.

ஏனெனில் இவர்களின் மனம் எப்போதும் ஏதோ ஓர் அச்சத்திலேயே இருக்கிறது.

அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வைச் சுவைத்தால் எவரும் மகிழ்வார்  இறைவனும் மகிழ்வான்.

தீமைகளிடமிருந்து விலகிவிடுதலில் மட்டுமே அச்சம் கொள்ளுதல் வேண்டும். இறைவன் தடுக்காத வற்றைத் தடுத்துக்கொள்ளும் அச்சத்தை இறைவன் விரும்பவில்லை. கண்டிக்கிறான்.


 ”மார்க்கத்தைவிட - மொழி முக்கியமாகப் போகிவிட்டதா? கவிதை, இணைவைப்பதைத் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு, வெளியே தெரியாமல் ஆக்கும் தன்மை கொண்ட விஷம்.


மார்க்கம் என்ற சொல்லும் அல்லாஹ் என்ற சொல்லும் குர்-ஆன் வசனங்களும் மொழிதான்.

மொழியில்லையேல் நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருக்க முடியாது.

மொழியின் வழியாகத்தான் இறைவன் குர்ஆனை அருளினான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

காட்டுமிராண்டிகளை மீட்டு மனிதர்களாக்கிய பெருமை மொழிக்கு உண்டு.

மொழியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மொழியில்லையென்றால் இன்று நீங்கள் காணும் பண்பட்ட உலகமே இல்லை.

அன்பு பாசம் கருணை ஈகை மனிதம் பண்பு மொழி இலக்கியம் கவிதை கலை என்று மனித நாகரிகத்தின் செயலும் வளர்ச்சியும் ஏராளம் ஏராளம்.

மார்க்கம் என்பது இவற்றை மறுத்தால் அது எப்படி மார்க்கம் ஆகும். வழி தராத ஒன்று வழியாகுமா? பாதை தராத ஒன்று பாதையாகுமா? மார்க்கம் தராத ஒன்று மார்க்கம் ஆகுமா?

ஆகவே இறைவன் அருளிய அழகிய மார்க்கத்தைத் தவறாக எண்ணிக்கொண்டு இறைவனுக்கே நாம் கலங்கத்தை உண்டுபண்ணுதல் கூடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இணைவைப்பது என்பது கவிதையால் மட்டுமே ஆகக்கூடியதில்லை, வெறுமனே ஒரு அத்துமீறல் செயலாலும் ஆகக்கூடும். ஒரு சொல்லாலும் ஆகக்கூடும். ஒரு சிறுகதையாலும் ஆகக்கூடும். ஒரு கட்டுரையாலும் ஆகக்கூடும். ஒரு நாடகத்தாலும் ஆகக்கூடும். ஒரு சினிமாவாலும் ஆகக்கூடும். ஒரு விமரிசனத்தாலும் ஆகக்கூடும்.

உங்கள் நிலைபாட்டில் நின்று, உறுதியாக இணைவைத்தலை வேண்டாம் என்று கூறுங்கள். அது ஏற்புடையது.

ஆனால் கவிதையை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது மார்க்கத்தை ஆழமாக அறிந்துகொள்ளாமல் அவசரமாக முடிவெடுக்கும்  நிலைப்பாட்டைத் தவிர வேறெதையும் சொல்ல வழியில்லை.

மார்க்கத்தைப் பலரும் தடுப்புச் சுவராகவே நினைக்கிறார்கள். மார்க்கம் என்பது திறந்த பெரும் பாதை என்பதை உணர்வதற்கு அவர்களுக்கு அனுபவமும் போதுமானதாய் இருப்பதில்லை அறிதலும் போதுமானதாய் இருப்பதில்லை.

மதமும் நம்பிக்கையும் நமக்கும் இறைவனுக்குமான நேரடித் தொடர்பு. அதன் இடையே குறுக்கிட எவருக்கும் ஞானமில்லை என்று நினைப்பதே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியானதாக ஆகும்.

இஸ்லாமியக் கவிதைகளுக்கும் பொய்தான் அழகு! இல்லை என்று யார் சொன்னது?

அதிரை சித்திக்: கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞர்கள் இன்றும் சொல்ல கேட்கிறோம். இஸ்லாமியக் கவிதைகளில் பொய் கூடவே கூடாது

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம் புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது.

 பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம் ஏற்றுவதைத்தான், அழகு ஊட்டுவதைத்தான், இசை கூட்டுவதைத்தான்.

உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை. அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி, பூமுடித்து என்ற அத்தனைப் பொய்களையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு அழகு.

அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை. ஒரு கவிதை பொய்யை நடுவில் வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே முக்கியம்.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு

என்ற கவிஞர் வைரமுத்துவின் கவிதையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான், கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு.

ஆகவே, கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும் அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும் கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?

உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!

பாரதியின் இந்தப் பொய் அழகாகத்தானே இருக்கிறது ஓர் அற்புதமான உண்மையை அது அழுத்தமாகச் சொல்வதனால்?

தீதும் நன்றும் காண்போர் ஞானத்திலல்லவா? சரி, இஸ்லாமியக் கவிதை ஒன்றுக்குள் நுழைவோம். கீழே உள்ள அனைத்துக் கவிதைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றுதான்.

எந்தக் கவிதையும் எவருக்கும் தவறாகப் படாவிட்டால் அவர் கவிதைகளை ரசிக்கிறார் என்று பொருள், இல்லாவிட்டால் அவருக்கு இயல்பிலேயே கவிதை என்றால் வேம்பு.

அப்படி நிறையபேரை நான் கண்டிருக்கிறேன். கவிதை என்ற சொல் கேட்டாலே காததூரம் ஓடுவார்கள். இது ரசனையின்பாற்பட்டது. தவிர கவிதைகள் சரியாகத்தான் இருக்கின்றன. ரசிப்பவர்களையும் இழைப்பவர்களையும் அன்போடு விட்டுவிடுவதே அவர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கியத்திற்கும் இந்த உலகுக்கும் நலம்.

* 1
உன்
பள்ளிவாசல் தோப்புகளில்
சிலர்
தென்னையைப் போல்
தலை உயர்த்திக் காட்டித்
தங்களைத்
தென்படுத்திக் கொள்வதிலேயே
குறியாக இருக்கிறார்கள்
நானோ
ஒரு
வாழைக் கன்று போல
என்னை
மட்டுப்படுத்தி
மறைத்துக் கொண்டே
உன்னிலே
கட்டுண்டு கிடப்பதிலே
களிப்புண்டுக் கிடக்கின்றேன்


* 2
உன் பள்ளிவாசலில் சிலர்
தங்களைக் காட்டிக்கொள்வதிலேயே
குறியாய் இருக்கும்போது
நான் என்னை மறைத்துக்கொண்டு
உன்னிடம் இணைந்திருப்பதையே
நேசிக்கிறேன்


* 3
பள்ளிவாசலில்
உன்னைத் தாழ்த்து
இறைவனோடு
இணைவதையே போற்று


* 4
உன்னை மற
இறைவனை நினை

*
என் நண்பரும் கவிஞருமான அபுல்கலாம் ஓர் கேள்வி கேட்டிருந்தார். “ஓர் ஆலிம் புலவர் அவர்கள் அல்-குர்-ஆன் மொழியாக்கம் தமிழில் பாவினத்தில் (வெண்பாவில்) அமைத்துள்ளார்கள்! அல்-குர்-ஆன் முழுவதும் உண்மை; அதன் மொழிபெயர்ப்பும் உண்மை; வெண்பாவெனும் கவிதையில் யாத்திடும் பொழுது , “கவிதை கூடாது “ என்பவர்கள் அம்மொழிபெயர்ப்பைப் பாவினத்தில் உள்ளதை மறுப்பார்களா? அவருக்கு மறுமொழியாக நான் இப்படி எழுதினேன்:

ஒரு கவிஞர் குர்-ஆன் முழுவதையும் வெண்பாவிலேயே அமைத்துள்ளார் என்பதை நாம் எப்படிக்காணவேண்டும்? கவிதைகளை மறுப்பவர்களின் இறை பக்தியைவிட எத்தனை எத்தனை கோடி மடங்கு உயர்வானது குர்-ஆனை அப்படியே வெண்பாவாக வடித்த கவிஞரின் மகா பக்தி? எத்தனை ஆழமாக குர்-ஆனை வாசித்திருப்பார் அந்தக் கவிஞர் அதை வெண்பாக்களாய் வடிக்க?

விமரிசகர்களை சில வேளைகளில் தள்ளிவைக்கத்தான் வேண்டும். உண்மைபக்தி கொண்ட ஆக்கங்களை நெகிழ்வோடு அரவணைப்போம். இயலும் என்பதனைக் காட்டும் ஒவ்வோர் இஸ்லாமியனும் உண்மையான இஸ்லாமியன் அல்லவா?

இவ்வேளையில் என் ஆறாவது கவிதை நூலான ’அறிதலில்லா அறிதல்’ புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி கீழே:

* * * * *
என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?

உயர்வானவற்றை உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.

உயிரின் மொழி
மொழியின் உயிர்
கவிதை


இப்படி நான் என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின் அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத வருகிறேன்.

மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?
* * * * *

கவிதைகளைப் பற்றிய தவறான கருத்துக் கொண்டோரை நாம் தான் உரிய ஆதரங்களைத் தந்து மாற்ற வேண்டும். அறிஞர் அதிரை அகமது அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்தரும் ஆதாரங்கள் என் நெற்றிப்பொட்டைத் துடிக்கச் செய்கின்றன. நான் நன்றி கூறுகிறேன்.

http://adirainirubar.blogspot.ca/2012/01/blog-post.html

எல்லோரும் கவிதை எழுதலாம் ஆனால் எல்லாமும் கவிதை ஆகிவிடாது. கவிதைக்கான முதல் இலக்கணமே அது உண்மையை அடிப்படையாக் கொண்டதாய் இருக்கவேண்டும். குர்-ஆன் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. அதுதான் கவிதையின் முக்கியமான இலக்கணமும்கூட.

குர்-ஆன் உயர்வானது என்பதால் அது மொழியின் உயர்வான நடையான கவிதை நடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குர்-ஆன் கவிதைநடை தவறென்னு எவரேனும் சொல்லமுடியுமா?

எழுதப்பட்ட சில கவிதை நடையைக் கொண்ட சில பதர்கள்தாம் தவறு என்று சொல்லமுடியும். அன்று விரோதம் கொண்ட குறைசிகள் தவறான கவிதைகளை எழுதினார்கள். அதற்கான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.

கவிதை நடையில் உருவாகியிருக்கும் குர்-ஆன் தவறென்று சொல்வோர் எவராவது இருக்க முடியுமா? சொல்லப்போனால் இந்த உலகுக்கே முதன் முதலில் எது கவிதை எது கவிதை இல்லை என்று சொன்னது இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான்.

உண்மையின் அடிப்படையில் உருவான சொல்நயம்
கொண்டதே கவிதை. பொய்யின் அடிப்படையில் உருவான சொல்நயம் கொண்டது கவிதையே அல்ல. அடடா எத்தனை அற்புதமான விளக்கத்தை யுகபுருசர் நபிகள் நாயகம் இந்த உலகுக்கே தெளிவாக வழங்கியுள்ளார்கள். இதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான்.

தவறானதை எழுதியிருப்பின் அவை கவிதைகளே அல்ல. அதை நாம் ஏற்கத்தான்வேண்டும். ஆதாமின் மக்கள் தவறு செய்பவர்களே என்ற நாயகத்தின் கூற்றை ஏற்போர் நாமென்பதால் நாம் பெருந் தவறொன்றும் இழைத்துவிடப் போவதில்லை என்றே நம்புவோமாக.

குர்-ஆன் அழகான கவிதை நடையில் இருப்பதால்தான் ஏழு வயது சிறுவனால்கூட உச்சரிப்பை நேசித்து அப்படியே மனனம் செய்து
மாற்றுக்குறையாமல் ஒப்பித்து ஓத முடிகிறது. குர்-ஆனின் சொற்களில் நயம் இல்லாவிட்டால் அழகிய இசை இல்லாவிட்டால் இது சாத்தியப்படுமா?

விமரிசகர்கள் சற்றே இதைச் சிந்தித்தால் உண்மையை உணர்ந்துகொள்வார்கள். பாங்கின் இனிய இசையைக் கேட்டும் இஸ்லாம் அல்லாத பலரும்கூட அப்படியே நின்றுவிடுவதில்லையா?

*
கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை என்ற ஆய்வுக் கட்டுரை அதிரை நிருபர் என்ற இணைய தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆறாம் அத்தியாயத்தில் அர அல என்று அழகாகத் தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.

”தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு” என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறி வருகிறார். அவரின் கூற்று நம் இஸ்லாமிய பார்வையில் சரியானதா? இந்தக் கேள்விக்கு, ஆய்வுக் கட்டுரை ஆசிரியரின் நெருங்கிய நண்பரின் மகன் முனைவர் அகமது ஆரிப் அழகான மறுமொழியொன்றை அளித்திருந்தார் இப்படி:

”தமிழே என் பேச்சு” இந்த வார்த்தை அதைக் கூறிய சகோதரர் அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை உறுதியுடன் எடுத்துக் கூறுவதே அன்றி வேறில்லை. ஒவ்வொருவருக்கும் தமது தாய்மொழியில், அல்லது தான் விரும்பும் வேறுமொழிகளில் ஆர்வம் இருக்கும். ஆங்கிலத்தில அதிக ஈடுபாடு கொண்டவர்கள் அதிலேயே பேசுவதையும், எழுதுவதையும் விரும்புவார்கள். இஃதெல்லாம் ஒன்றும் தவறான விஷயங்களல்ல.

”கவிதையே என் மூச்சு” இதுவும் அவருக்கு அவரது துறையில் இருக்கும் ஈடுபாட்டைக் கூறும் வார்த்தைதான். நம் அனைவருக்கும் நாம் உள்ளே சுவாசிக்கும் மூச்சு ஆக்ஸிஜன் என்றும் வெளியே விடும் மூச்சு கார்பன்டை ஆக்ஸைடு என்றும் தெரியும்.

ஆனால், மூச்சு என்பது மனிதன் இறக்கும் வரை நடைபெறும் ஒரு செயலாகும். ஒவ்வொரு மனிதருக்கும் தனது மூச்சு, உயிரின் மேல் மிகவும் ஆசை இருக்கும். இந்த மூச்சு மனிதனின் உடலில் உயிரின் தொடர்பால் உண்டாவதாகும். ரூஹ் எனும் வார்த்தை குர்ஆனில் பல பொருட்களில் கூறப்படுகின்றது. அதில் உயிர் என்று ஒரு பொருள் உண்டு.

அல்லாஹ் மனிதனில் ரூஹை ஊதும் பொழுது அந்த மனிதனுக்கென்று அவன் நிர்ணயித்த இயல்புகளையும் அதனுடன் சேர்த்தே வழங்குகின்றான். எனவே தான், ஒவ்வொரு மனிதரும் மாறுபாட்ட இயல்புகளையும், விருப்பு-வெறுப்புகளையும் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு தாயும், தன் குழந்தையை “யேன்ஞ் செல்லம், யேன்வ்வுயிரு”, (என் செல்லம், என் உயிர்) என்று கொஞ்சுவாள். இன்னும், ஒருவர் இன்னொருவர் மேல் அதிகம் பிரியம் வைத்திருந்தால், “நான் அவம்மேலே மேல் உயிரையே வச்சிருக்கேன்” என்றெல்லாம் கூறுகிறோம்.

ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்து, இந்தக் குழந்தைக்குப் பால் வடியும் முகம் என்று கூறினால், அது அக்குழந்தையின் முகம் அவ்வளவு தெளிவாக, அழகாக இருக்கின்றது என்பேத தவிர, அக்குழந்தையின் முகத்தில் நிஜமாக பால் வடிகின்றது என்பதில்லை.

அதுபோலவே, ஒருவரைப் பார்த்து, இவன் சரியான பச்சோந்தி என்று கூறினால், அவர் நிஜத்தில் பச்சோந்தி அல்ல, பச்சோந்தி போன்று தன்னை இடத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்பவர் என்று பொருள். அது போன்றே, கவிதை என் மூச்சு என்று சகோதரரது வார்த்தை, இயல்பாக மூச்சு விடுவதைப் போன்று அவருக்கு கவிதை இயல்பாக வருகிறது, அல்லது அவருக்குக் கவிதையில் ஈடுபாடு உள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே, இவையெல்லாம், வார்த்தைகளே அன்றி வேறில்லை. இவ்வாறு சொல்வதில் குற்றமுமில்லை.