டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.
இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.
இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.
இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.
உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)
அன்புதான் இஸ்லாம்.
கருணைதான் இறைவன்.
பல இடங்களில் அவன் அழுத்தமாகக் கூறுவது யாதெனில் அவன் மனிதர்களை சிரமங்களுக்கு உட்படுத்துவதே இல்லை என்பதைத்தான்.
நன்மை தீமை அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறானே தவிர மனிதர்களை அவன் சிரமங்களுக்கு உள்ளாக்குவதே இல்லை.
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (குர்-ஆன் 2:185) என்று இறைவன் தெளிவாகவே தன் வசனத்தில் கூறுகின்றான்.
மெக்காவில் நோன்பு நோற்கும் காலம் என்பது 11 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரங்கள்தாம். நோன்பு என்பது மக்கா மதினா நகர வாசிகளைக் கொண்டுதான் வரையறுக்கப்பட்டது. அதைத்தான் உலக மக்கள் யாவரும் பின்பற்றுகிறோம்.
அப்படி பின் பற்றும்போது வரும் ஏற்ற இறக்கங்களை இறைவனின் வழியில் நாம் சரிசெய்துகொள்வதும் நமக்குக் கடமையாகும்.
ஒரு நாளில் அதிகப்படியாக 14 மணி நேரம் நோன்பு நோற்பது என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிரமம் தராததாக அமையும்.
கடுமையான வெயில் காலங்களில் குழந்தைகள் தாகம் காரணமாக சுருண்டு விழுந்துவிடும் நிலையை இறைவன் ஒருக்காலும் தரமாட்டான். ஏனெனில் அவன் கருணையுடையவன், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்.
நோன்பின் நோக்கம் அறியாமல் நோன்பு வைப்பதால் நன்மையைவிட தீமையே விளையும்.
நோன்பின் நோக்கங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என்று மூன்றினைக் கொள்ளலாம்.
1. பசியை உணர்ந்து உலக ஏழ்மையைப் போக்குதல்,
2. தனித்திருந்து ஓதியும் தொழுதும் இறைவனை அறிந்து நல் வழியில் செல்லுதல்,
3. உணவுக் கட்டுப்பாடுகளுடன் பசியில் இருந்து உடலை ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் ஆக்குதல்.
நோன்பு நாட்களில் நோன்பு திறந்தபின்னும் நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம், ஒரு பேரீச்சம் பழத்தையும் ஒரு குவளை தயிரையும் கொண்டு நோன்பு திறந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.
நோன்பு திறக்க நம் ஊரில் வாங்கிக் குவிக்கும் உணவுவகைகள் ஏராளம். மற்ற மாதங்களில் உண்பதைவிட ரமதான் மாதத்தில்தான் நாம் அதிகம் உண்கிறோம்.
நோன்பின் நோக்கத்திற்கு இது மாறாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பகல் முழுவதும் உறங்கியும் இரவெல்லாம் விழித்திருந்தும் சிலர் நோன்பை சமாளிக்கிறார்கள். பகலில் சிறிது நேரம் உறங்குவது தவறில்லைதான். ஆனால் இப்படி இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக்கொண்டு பசியை உணராதிருப்பது சரியா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நோன்பின் நோக்கம் நிறைவேறாமல் கடமையே என்று நோன்பு நோற்பது கூடுமா என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.
அறிவினைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்.
அன்புதான் இஸ்லாம் கருணைதான் இறைவன்.
No comments:
Post a Comment