Saturday, July 14, 2012

குடும்பக்கட்டுப்பாடும் இஸ்லாமும்

உலகில் இன்று 7 பில்லியன் (700 கோடி) மக்கள் வாழ்கிறார்கள். 1804ல் 1 பில்லியனாகத்தான் மக்கள் இருந்தார்கள், பின் வான நட்சத்திரங்களின் எண்ணிக்கையைத் தோற்கடிக்கிறேன் பார் என்று வளரத் தொடங்கிவிட்டார்கள்

1804ல் 1 பில்லியன்
1930ல் 2 பில்லியன்
1960ல் 3 பில்லியன்
1975ல் 4 பில்லியன்
1987ல் 5 பில்லியன்
1999ல் 6 பில்லியன்
2011ல் 7 பில்லியனாக வளர்ந்துவிட்டார்கள்

இந்த விகிதத்தில் பயணப்பட்டால் இந்தியா வல்லரசு ஆகும்போதும் 8 பில்லியன் மக்கள் உலகில் இருப்பார்கள்.

மனிதன் தன் உணவுக்காக வேட்டையாடுவதையும் தானே வளர்ந்த காட்டுத் தாவரங்களையும் நம்பியிருந்தபோது உலக மக்கள் தொகை மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 15 மில்லியன் (1.5 கோடி) என்று கணக்கிடலாம்.
விவசாயம்தான் முதன் முதலில் உயிர்களைக் காக்க வந்த ரட்சகன். இதனால் மக்கள்தொகை சர்ரென்று உயர்ந்தது.

இயற்கை நாசங்களும், கொடூரமான வியாதிகளும், போர்களும் மக்களைக் கொன்று குவிக்க மக்கள் தொகை கணிசமாகக் குறைவதும் பின் வளர்வதுமாய் இருந்து வந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு, மக்கள் தொகையில் ஒரு பெரும் சாதனையே புரிந்திருக்கிறது. 1900ஆம் வருடம் சுமார் 1.6 பில்லியனாய் இருந்த மக்கள் தொகை கிடுகிடுவென வளர்ந்து நூறே ஆண்டுகளில் அதாவது 2000ல் 6 பில்லியன் ஆனது.

காரணம் மரணங்கள் குறைந்துபோயின. மக்களை மரணத்திலிருந்து காத்த பெருமை, சுகாதார முன்னேற்றத்திற்கும், அறிவியல் மருத்துவ வளர்ச்சிக்கும், பசுமைப் புரட்சிக்கும், குறைந்துபோன கொடூரப் போர்களுக்கும் போய்ச்சேரும்.
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது - கண்ணதாசன்
மரணைத்தை வென்றுகொண்டிருக்கிறோம். ஆகவே பிறப்பையும் வெல்ல வேண்டுமே? அப்போதுதானே ஓரளவுக்குச் சமநிலை நிலவும்.
உண்ணுங்கள் பருகுங்கள். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்க மாட்டான். என்பது நபிமொழி.

8 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் இந்த உலகில் என்று வைத்துக்கொள்வோம். என்றால் அதில் பெண்கள் கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆவார்கள். அதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருப்பவர்கள் சுமார் 2 பில்லியன் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அத்தனை பேரும் பந்தயத்தில் தங்கப் பதக்கத்துக்காக ஓடுபவர்களின் உத்வேகத்தோடு பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் என்னாகும்? அதுவும் இப்போதெல்லாம் அதிகமாக இரட்டையர்கள், மூவர்கள், நால்வர்கள் என்று பெற்றெடுக்கிறார்கள்.

ஒரு வருடத்திற்கு 2 பில்லியன் அதாவது 25 விழுக்காடு என்று மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லுமா? ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படி ஒரு கணக்கு இட்டேன். ஆனாலும் பிரச்சினை என்னவென்று புரிகிறதல்லவா?
அதோடு வதவதவென்று பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு தாய் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பிள்ளைகளை பெற்றோர்களால் கவனிக்கவும் முடிவதில்லை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடிவதில்லை. பள்ளிக்கு அனுப்பிவைக்கவும் முடிவதில்லை. அவர்கள் வளரும்போது வீட்டில் இடமும் இல்லை. வீடு கட்ட ஊரில் நிலமும் இல்லை. வயல் வெளிகளை அழித்து வீடுகள் கட்டி முடித்தாகிவிட்டது. இனி எதை அழிக்க? இந்த இயற்கை நாசம் நம்மை எங்கே கொண்டுபோய் விடும்?

இப்போதே வாகனம் நிறுத்த இடம் இல்லை என்பதுபோக மனிதன் நிற்கவே இடமில்லை என்ற நிலை வளர்கிறது. வீட்டில் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. வாழ வசதியான வேலை இல்லை. இப்படி இல்லை இல்லை என்ற பட்டியல்தான் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் பிறப்பு மட்டும் அடுக்குமல்லியைப்போல் இருக்கிறது என்று வந்தால் எப்படி?

அடுக்குமாடிகள் கட்டிக்கட்டி அடுக்கி அடுக்கி மக்களைப் படுக்க வைத்தும் வீடு கட்ட காடுகளை அழிக்கிறார்கள், தோட்டங்களை அழிக்கிறார்கள், வயல்வெளிகளை அழிக்கிறார்கள். இயற்கை இதனால் தடுமாறி நிற்கிறது. வானிலை அறிக்கையெல்லாம் இப்போது கேலிக்குறியதாக ஆகிவருகிறது. உலக உருண்டைக்குள் என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. இதில் 2012ல் கதை முடிஞ்சுது என்று மாயன் காலண்டர்வேறு பயமுறுத்துகிறது. இயற்கை வளங்களையெல்லாம் அழித்து முடித்துவிட்டால் மனிதன் வாழ்வதற்கு எங்கே செல்வான்?

ஆகவே குடும்பக்கட்டுப்பாடு என்பது காலத்தின் கட்டாயம் கருதி மிகவும் அவசியமானது. அதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

இஸ்லாமில் குடும்பக்கட்டுப்பாடு கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். கூடும் ஆனால் சில சட்டதிட்டங்களோடு என்று சிலர் கூறுகிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை அரசாங்கம் ஒரு சட்டமாக ஆக்கி மக்கள் மேல் திணிக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்றைய
பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

ஒரு குழந்தையே அதிகம் என்று அலறும் பெண்கள்தான் இன்று ஏராளம். முன்பு போல ஆணாதிக்கம் மிகுந்த சூழ்நிலை இன்று இல்லை. ஆகவே பெண்கள் கற்றறிந்தவர்களாகி கருத்தடை சாதனங்களின் பக்கம்தான் சாய்கிறார்கள். பெண்கள் நிம்மதியாக தங்களுக்கு இயலும் பொறுப்புகளோடு வாழ்வதில் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கிறார்கள். கணவன், அளவோடு குழந்தைகள் என்று கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையையே விரும்புகிறார்கள். என் நட்பு வட்டத்தில் நான் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்குமேல் கண்டதில்லை. பலர் ஒரே குழந்தையோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் இந்த வாழ்க்கை முறை மாற்றமும் விருப்பமும்தான் ஓரளவுக்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே, விரும்புவோர் விரும்பும் வகையில் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை மேற்கொள்ளத்தானே வேண்டும்? உடலுக்குக் கேடு விளைவிக்கும் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையை நம் தேவைக்கேற்ப சரியாகப் பெற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் நலம்.

இதையெல்லாம் இன்று அறிவு ஜீவிகளாய் அடிமைத் தளை அறுபட்டவர்களாய் வளர்ந்துவிட்ட இன்றைய பெண்கள் மிகச் சரியாகவே செய்கிறார்கள். வேறு என்ன இதில் சொல்வதற்கு இருக்கிறது?
உண்ணுங்கள் பருகுங்கள். வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான் என்பதுதானே நபிமொழி?

மக்கள் தொகை நெருக்கடியான நிலையை எட்டிக்கொண்டிருக்கும்போது, அதன் வளர்ச்சி விகிதம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்கும்போது, வரம்பு மீறுதல் என்பது எது என்று யோசித்தால் இறைவன் எதற்காக நம்மை மன்னிப்பான் எதற்காக மன்னிக்கமாட்டான் என்பது தெளிவாகிவிடுமல்லவா?

அதோடு, அறிவைத் தேடும் அறுவுடையோனே இஸ்லாமியன் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறதல்லவா?

No comments:

Post a Comment