அதிரை சித்திக்: கவிதைக்கு பொய் அழகு என சில கவிஞர்கள்
இன்றும் சொல்ல கேட்கிறோம். இஸ்லாமியக் கவிதைகளில் பொய் கூடவே கூடாது
கவிதைக்குப் பொய்யழகு என்பதில் யாதொரு தவறும் இல்லை. நாம்
புரிந்துகொள்வதில்தான் தவறிருக்கிறது.
பொய் என்று சொல்வது இங்கே கற்பனை வளம்
ஏற்றுவதைத்தான், அழகு ஊட்டுவதைத்தான், இசை கூட்டுவதைத்தான்.
உதாரணம்: ஒரு பெண் குழந்தை என்பது உண்மை.
அந்த உண்மைக்கு, பட்டுடுத்தி, பவுடர் இட்டு, கண்ணுக்கு மையிட்டு, சடை பிண்ணி,
பூமுடித்து என்ற அத்தனைப் பொய்களையும் செய்து பார்ப்பது தவறல்ல, அழ்கு பெண்ணுக்கு
அழகு.
அதுபோலத்தான் கவிதைக்கும் அழகு தேவை. ஒரு கவிதை பொய்யை நடுவில்
வைத்து உண்மையைச் சுற்றிக் கட்டி ஏமாற்றுகிறதா அல்லது உண்மையை நடுவில் வைத்து
கற்பனை, சொல்லழகு, இசை போன்று பொய்களைச் சுற்றிக்கட்டி நயமாக்குகிறதா என்பதே
முக்கியம்.
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப்
பொய்யழகு
என்ற கவிஞர் வைரமுத்துவின் கவிதையைச் சரியாகப்
புரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்கு மை என்ற பொய் எப்படி அழகோ அப்படித்தான்,
கவிதைக்குக் கற்பனை என்ற பொய் அழகு.
ஆகவே, கவிதைக்குப் பொய் அழகே தவிர கவிதை என்பது
மெய்யால் செய்யப்பட்டால் மாத்திரமே அது கவிதை. கவியெனும் மெய்யில் இழைக்கப்படும்
அழகு கற்பனைப் பொய்களே கவிதையைக் காலத்தால் அழியாததாய் ஆக்குகின்றன. உரைநடைக்கும்
கவிதைக்குமான வித்தியாசம் அதுதானே?
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!
பாரதியின்
இந்தப் பொய் அழகாகத்தானே இருக்கிறது ஓர் அற்புதமான உண்மையை அது அழுத்தமாகச்
சொல்வதனால்?
தீதும் நன்றும் காண்போர் ஞானத்திலல்லவா? சரி, இஸ்லாமியக் கவிதை
ஒன்றுக்குள் நுழைவோம். கீழே உள்ள அனைத்துக் கவிதைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றுதான்.
எந்தக் கவிதையும் எவருக்கும் தவறாகப் படாவிட்டால் அவர் கவிதைகளை ரசிக்கிறார் என்று
பொருள், இல்லாவிட்டால் அவருக்கு இயல்பிலேயே கவிதை என்றால் வேம்பு.
அப்படி நிறையபேரை
நான் கண்டிருக்கிறேன். கவிதை என்ற சொல் கேட்டாலே காததூரம் ஓடுவார்கள். இது
ரசனையின்பாற்பட்டது. தவிர கவிதைகள் சரியாகத்தான் இருக்கின்றன. ரசிப்பவர்களையும்
இழைப்பவர்களையும் அன்போடு விட்டுவிடுவதே அவர்களுக்கும் கவிஞர்களுக்கும்
இலக்கியத்திற்கும் இந்த உலகுக்கும் நலம்.
*
1
உன்
பள்ளிவாசல் தோப்புகளில்
சிலர்
தென்னையைப் போல்
தலை உயர்த்திக் காட்டித்
தங்களைத்
தென்படுத்திக் கொள்வதிலேயே
குறியாக
இருக்கிறார்கள்
நானோ
ஒரு
வாழைக் கன்று போல
என்னை
மட்டுப்படுத்தி
மறைத்துக் கொண்டே
உன்னிலே
கட்டுண்டு கிடப்பதிலே
களிப்புண்டுக் கிடக்கின்றேன்
* 2
உன்
பள்ளிவாசலில் சிலர்
தங்களைக்
காட்டிக்கொள்வதிலேயே
குறியாய்
இருக்கும்போது
நான் என்னை
மறைத்துக்கொண்டு
உன்னிடம்
இணைந்திருப்பதையே
நேசிக்கிறேன்
*
3
பள்ளிவாசலில்
உன்னைத்
தாழ்த்து
இறைவனோடு
இணைவதையே
போற்று
*
4
உன்னை மற
இறைவனை
நினை
*
என் நண்பரும் கவிஞருமான
அபுல்கலாம் ஓர் கேள்வி கேட்டிருந்தார். “ஓர் ஆலிம் புலவர் அவர்கள் அல்-குர்-ஆன்
மொழியாக்கம் தமிழில் பாவினத்தில் (வெண்பாவில்) அமைத்துள்ளார்கள்! அல்-குர்-ஆன்
முழுவதும் உண்மை; அதன் மொழிபெயர்ப்பும் உண்மை; வெண்பாவெனும் கவிதையில் யாத்திடும்
பொழுது , “கவிதை கூடாது “ என்பவர்கள் அம்மொழிபெயர்ப்பைப் பாவினத்தில் உள்ளதை
மறுப்பார்களா? அவருக்கு மறுமொழியாக நான் இப்படி எழுதினேன்:
ஒரு கவிஞர்
குர்-ஆன் முழுவதையும் வெண்பாவிலேயே அமைத்துள்ளார் என்பதை நாம் எப்படிக்காணவேண்டும்?
கவிதைகளை மறுப்பவர்களின் இறை பக்தியைவிட எத்தனை எத்தனை கோடி மடங்கு உயர்வானது
குர்-ஆனை அப்படியே வெண்பாவாக வடித்த கவிஞரின் மகா பக்தி? எத்தனை ஆழமாக குர்-ஆனை
வாசித்திருப்பார் அந்தக் கவிஞர் அதை வெண்பாக்களாய் வடிக்க?
விமரிசகர்களை சில வேளைகளில் தள்ளிவைக்கத்தான் வேண்டும். உண்மைபக்தி கொண்ட ஆக்கங்களை நெகிழ்வோடு அரவணைப்போம். இயலும் என்பதனைக்
காட்டும் ஒவ்வோர் இஸ்லாமியனும் உண்மையான இஸ்லாமியன் அல்லவா?
இவ்வேளையில்
என் ஆறாவது கவிதை நூலான ’அறிதலில்லா அறிதல்’ புத்தகத்துக்கு நான் எழுதிய
முன்னுரையின் ஒரு பகுதி கீழே:
* * * *
*
என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு
கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின்
வழியில் செல்லப்போகிறீர்கள்?’
இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான்
நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை
இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று
தோன்றுகிறது.
நான் கண்டவரை பெரும்பாலான மத
நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.
ஏன்?
உயர்வானவற்றை
உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.
உயிரின் மொழி
மொழியின்
உயிர்
கவிதை
இப்படி நான் என் முதல்
கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள
முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின்
அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத
வருகிறேன்.
மொழியின் உயர்வான நடையில்
தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க
முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை
மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?
* * * * *
கவிதைகளைப் பற்றிய தவறான கருத்துக்
கொண்டோரை நாம் தான் உரிய ஆதரங்களைத் தந்து மாற்ற வேண்டும். அறிஞர் அதிரை அகமது
அவர்களின் ஆய்வுக் கட்டுரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்தரும் ஆதாரங்கள் என்
நெற்றிப்பொட்டைத் துடிக்கச் செய்கின்றன. நான் நன்றி கூறுகிறேன்.
http://adirainirubar.blogspot.ca/2012/01/blog-post.html
எல்லோரும்
கவிதை எழுதலாம் ஆனால் எல்லாமும் கவிதை ஆகிவிடாது. கவிதைக்கான முதல் இலக்கணமே அது
உண்மையை அடிப்படையாக் கொண்டதாய் இருக்கவேண்டும். குர்-ஆன் உண்மையை அடிப்படையாகக்
கொண்டது. அதுதான் கவிதையின் முக்கியமான இலக்கணமும்கூட.
குர்-ஆன் உயர்வானது என்பதால்
அது மொழியின் உயர்வான நடையான கவிதை நடையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குர்-ஆன்
கவிதைநடை தவறென்னு எவரேனும் சொல்லமுடியுமா?
எழுதப்பட்ட சில கவிதை நடையைக் கொண்ட சில
பதர்கள்தாம் தவறு என்று சொல்லமுடியும். அன்று விரோதம் கொண்ட குறைசிகள் தவறான
கவிதைகளை எழுதினார்கள். அதற்கான வசைகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.
கவிதை
நடையில் உருவாகியிருக்கும் குர்-ஆன் தவறென்று சொல்வோர் எவராவது இருக்க முடியுமா?
சொல்லப்போனால் இந்த உலகுக்கே முதன் முதலில் எது கவிதை எது கவிதை இல்லை என்று
சொன்னது இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான்.
உண்மையின் அடிப்படையில் உருவான
சொல்நயம்
கொண்டதே கவிதை. பொய்யின் அடிப்படையில் உருவான சொல்நயம் கொண்டது
கவிதையே அல்ல. அடடா எத்தனை அற்புதமான விளக்கத்தை யுகபுருசர் நபிகள் நாயகம் இந்த
உலகுக்கே தெளிவாக வழங்கியுள்ளார்கள். இதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான்.
தவறானதை எழுதியிருப்பின் அவை கவிதைகளே அல்ல. அதை நாம் ஏற்கத்தான்வேண்டும்.
ஆதாமின் மக்கள் தவறு செய்பவர்களே என்ற நாயகத்தின் கூற்றை ஏற்போர் நாமென்பதால் நாம்
பெருந் தவறொன்றும் இழைத்துவிடப் போவதில்லை என்றே நம்புவோமாக.
குர்-ஆன்
அழகான கவிதை நடையில் இருப்பதால்தான் ஏழு வயது சிறுவனால்கூட உச்சரிப்பை நேசித்து
அப்படியே மனனம் செய்து
மாற்றுக்குறையாமல் ஒப்பித்து ஓத முடிகிறது. குர்-ஆனின்
சொற்களில் நயம் இல்லாவிட்டால் அழகிய இசை இல்லாவிட்டால் இது சாத்தியப்படுமா?
விமரிசகர்கள் சற்றே இதைச் சிந்தித்தால் உண்மையை உணர்ந்துகொள்வார்கள்.
பாங்கின் இனிய இசையைக் கேட்டும் இஸ்லாம் அல்லாத பலரும்கூட அப்படியே
நின்றுவிடுவதில்லையா?
*
கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை என்ற ஆய்வுக்
கட்டுரை அதிரை நிருபர் என்ற இணைய தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆறாம்
அத்தியாயத்தில் அர அல என்று அழகாகத் தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர் ஒரு
கேள்வி கேட்டார்.
”தமிழே என் பேச்சு; கவிதையே என் மூச்சு” என்று ஒரு முஸ்லிம்
சகோதரர் கூறி வருகிறார். அவரின் கூற்று நம் இஸ்லாமிய பார்வையில் சரியானதா? இந்தக்
கேள்விக்கு, ஆய்வுக் கட்டுரை ஆசிரியரின் நெருங்கிய நண்பரின் மகன் முனைவர் அகமது
ஆரிப் அழகான மறுமொழியொன்றை அளித்திருந்தார் இப்படி:
”தமிழே என் பேச்சு” இந்த
வார்த்தை அதைக் கூறிய சகோதரர் அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை
உறுதியுடன் எடுத்துக் கூறுவதே அன்றி வேறில்லை. ஒவ்வொருவருக்கும் தமது தாய்மொழியில்,
அல்லது தான் விரும்பும் வேறுமொழிகளில் ஆர்வம் இருக்கும். ஆங்கிலத்தில அதிக ஈடுபாடு
கொண்டவர்கள் அதிலேயே பேசுவதையும், எழுதுவதையும் விரும்புவார்கள். இஃதெல்லாம்
ஒன்றும் தவறான விஷயங்களல்ல.
”கவிதையே என் மூச்சு” இதுவும் அவருக்கு அவரது
துறையில் இருக்கும் ஈடுபாட்டைக் கூறும் வார்த்தைதான். நம் அனைவருக்கும் நாம் உள்ளே
சுவாசிக்கும் மூச்சு ஆக்ஸிஜன் என்றும் வெளியே விடும் மூச்சு கார்பன்டை ஆக்ஸைடு
என்றும் தெரியும்.
ஆனால், மூச்சு என்பது மனிதன் இறக்கும் வரை நடைபெறும் ஒரு
செயலாகும். ஒவ்வொரு மனிதருக்கும் தனது மூச்சு, உயிரின் மேல் மிகவும் ஆசை இருக்கும்.
இந்த மூச்சு மனிதனின் உடலில் உயிரின் தொடர்பால் உண்டாவதாகும். ரூஹ் எனும் வார்த்தை
குர்ஆனில் பல பொருட்களில் கூறப்படுகின்றது. அதில் உயிர் என்று ஒரு பொருள் உண்டு.
அல்லாஹ் மனிதனில் ரூஹை ஊதும் பொழுது அந்த மனிதனுக்கென்று அவன் நிர்ணயித்த
இயல்புகளையும் அதனுடன் சேர்த்தே வழங்குகின்றான். எனவே தான், ஒவ்வொரு மனிதரும்
மாறுபாட்ட இயல்புகளையும், விருப்பு-வெறுப்புகளையும் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு
தாயும், தன் குழந்தையை “யேன்ஞ் செல்லம், யேன்வ்வுயிரு”, (என் செல்லம், என் உயிர்)
என்று கொஞ்சுவாள். இன்னும், ஒருவர் இன்னொருவர் மேல் அதிகம் பிரியம் வைத்திருந்தால்,
“நான் அவம்மேலே மேல் உயிரையே வச்சிருக்கேன்” என்றெல்லாம் கூறுகிறோம்.
ஒரு
குழந்தையின் முகத்தைப் பார்த்து, இந்தக் குழந்தைக்குப் பால் வடியும் முகம் என்று
கூறினால், அது அக்குழந்தையின் முகம் அவ்வளவு தெளிவாக, அழகாக இருக்கின்றது என்பேத
தவிர, அக்குழந்தையின் முகத்தில் நிஜமாக பால் வடிகின்றது என்பதில்லை.
அதுபோலவே,
ஒருவரைப் பார்த்து, இவன் சரியான பச்சோந்தி என்று கூறினால், அவர் நிஜத்தில்
பச்சோந்தி அல்ல, பச்சோந்தி போன்று தன்னை இடத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்பவர் என்று
பொருள். அது போன்றே, கவிதை என் மூச்சு என்று சகோதரரது வார்த்தை, இயல்பாக மூச்சு
விடுவதைப் போன்று அவருக்கு கவிதை இயல்பாக வருகிறது, அல்லது அவருக்குக் கவிதையில்
ஈடுபாடு உள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே, இவையெல்லாம், வார்த்தைகளே அன்றி
வேறில்லை. இவ்வாறு சொல்வதில் குற்றமுமில்லை.
No comments:
Post a Comment