Thursday, September 13, 2012

குர்ஆன் ஏன் அரபு மொழியில் இறக்கப்பட்டது



குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டதற்கான
காரணங்கள் இரண்டு

ஒன்று:
குர்ஆன் எவரின் வழியாக இறக்கப்படுகிறதோ
அவருக்கு அது புரியவேண்டும்

இரண்டு:
குர்ஆன் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்






இதில் இரண்டாவது காரணம் தவறு என்று சிலர்
வாதிடுகின்றனர்.

குர்-ஆன் உலக மக்கள் அனைவருக்குமாய்
இறக்கப்பட்டது. அரபு மக்களுக்கு மட்டும்
இறக்கப்பட்டதல்ல என்பதே அவர்களின்
வாதம்.

அவர்கள் கூறுவதும் சரி. கட்டுரை கூறுவதும் சரி.
அது எப்படி என்று காண்போம்.

கட்டுரையில் இந்த இரண்டாவது காரணத்தை
எழுதுவதற்குக் காரணமாக இருந்தது
குர்-ஆனின் வசனங்கள்தாம்.

குர்-ஆன் 14:4
ஒவ்வொரு தூதரையும்
அவருடைய சமூகத்தாருக்கு
அவர் விளக்கிக் கூறுவதற்காக
அவர்களுடைய மொழியிலேயே
(போதிக்கும் படி)
நாம் அனுப்பிவைத்தோம்;

இந்தக் குர்-ஆன் வசனம் நேரடியாகவே சொல்வது
என்ன?

”தூதருடைய சமூகத்தாருக்கு விளக்கிக் கூறுவதற்காக....”

எது தூதருடைய சமூகம்?

மெக்கா மெதினாவில் வாழ்ந்த அரபி மொழி மட்டுமே
அறிந்தவர்கள்

ஒரு தூதரை இறைவன் தேர்வு செய்யும்போது,
அந்த தூதுவர் சார்ந்த சமூகத்தையும் அவனே
தேர்வு செய்கிறான்.

தெளிவாகச் சொல்வதென்றால், இறைவன் முதலில்
தேர்வு செய்வது சமூகத்தைத்தான். பிறகுதான்
அதற்கான தூதுவரை அந்த சமூகத்திலிருந்தே
இறைவன் தேர்வு செய்கிறான்.

எப்படி எனில்....

எந்தச் சமூகம் சீரழிவில் இருக்கிறதோ எந்தச்
சமூகத்திற்கு இறைவனின் வேதங்கள் உடனடித்
தேவையில் இருக்கிறதோ எந்த சமூகத்திற்கு
இறைவனின் உபதேசங்கள் மிகவும் அவசியத்தில்
இருக்கிறதோ அந்தச் சமூகத்திற்குத்தான்
இறைத்தூதரை இறைவன் நியமிக்கிறான்.

அப்படியான ஒரு சமூகத்தின் நிலையைக் கண்டு
அதைச் சீர் திருத்த இறைவனால் அருளப்பட்ட வேதம்
உலகம் முழுவதும் ஏற்று நடப்பதற்கானதுதான்

இறைவனின் முன் உலக மக்கள் அனைவரும் சமம்
என்பதால், குர்-ஆன் உலக சமூகத்தார் அனைவருக்கும்
ஏற்ற ஒன்று என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

”குர்ஆன் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்” என்று கட்டுரை
குறிப்பிடுவது உலக மக்களுக்கு இது
அருளப்படவில்லை என்று சொல்வதற்காக அல்ல.

மாறாக, மிகவும் பின் தங்கிய, மூடநம்பிக்கைகள்
அடர்ந்த ஒரு சமூகத்திற்காக, அதன் அன்றைய கால
கட்டத்திற்காக இறைவன் தன் தூதரை அவர் பேசிய
மொழியில் அவரின் சமூகத்தின் மொழியில் அனுப்பி
வைத்ததைக் கூறுவதற்காகத்தான்.

முகம்மது நபிக்குத் தெரிந்தது அரபி மொழி மட்டும்தான்.
குர்-ஆனின் வசனங்கள் முகம்மது நபியை அழைத்து
நபியே நீர் கூறும் என்று பல வசனங்களில் சொல்கிறது.

ஏனேனில் முகம்மது நபியின் சமூகத்தினர் அரபி
மொழியை அறிந்தவர்கள். அவர்களுக்குத்தான்
முகம்மது நபியால் நேரடியாக குர்-ஆனுக்கான
விளக்கம் கொடுக்க முடியும்.

வேற்று மொழிக்காரர்களுக்கு அவரால் தானே விளக்கம்
கொடுக்க இயலாது. அரபி மொழி தெரிந்த வேறொருவரின்
துணை கொண்டுதான் கொடுக்க முடியும். அப்படியாய்
முகம்மது நபிக்கு இறைவனால் எந்த வசனமும்
இறக்கப்படவில்லை.

குர்-ஆனின் வசனங்கள் நேரடியாக மக்கா மதினா
மக்களுக்குக் கூறும் என்பதாகத்தான் இருக்கிறது.

மக்கா மதினா மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
இறைவன் குர்-ஆனை அரபியில் இறக்கினான் என்பதற்கு
ஆதாரமாக மேலும் சில குர்-ஆன் வசனங்கள் உண்டு.

43:2. விளக்கமான
இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக
இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக
நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்

இந்த குர்-ஆன் வரிகளில் ஏன் குர்-ஆன் அரபி மொழியில்
அருளப்பட்டிருக்கிறது என்பதை இறைவன் மிகத் தெளிவாகவே
கூறுகிறான் அல்லவா?

குர்-ஆனில் அன்றைய மக்கா மதினா வாசிகளை நோக்கி
இறைவன் கூறும் வசனங்கள் அதிகம்.

உதாரணத்திற்கு ஒன்று:

43:31. மேலும்
அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த குர்ஆன்
இவ்விரண்டு ஊர்களிலுள்ள
பெரிய மனிதர் மீது
இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”

இவ்விரண்டு ஊர்கள் என்றால் எந்த ஊர்கள்
என்று நான் விளக்கம் தர வேண்டியதில்லை என்று
நம்புகின்றேன்.

இதுபோல நிறைய வசனங்கள் குர்-ஆனில் உண்டு.

நான் சொல்லவரும் செய்தியை வேறுவிதமாக
ஓர் உதாரணத்துடன் சொல்வதானால் இப்படிச்
சொல்லலாம்.

ஓர் வகுப்பறை சீர்குலைந்து கிடக்கிறது. எந்த
மாணவனும் சரியாகப் படிப்பதில்லை. நல்ல
ஒழுக்கமும் கிடையாது என்று அந்த வகுப்பில்
நிகழும் கேடுகளின் பட்டியல் மிகவும் நீளம்.

உலகக் கல்வித் தலைமைச் செயலகம்
ஒரு சிறப்பு ஆசிரியரை நியமித்து அந்த வகுப்பை
தன் பரிந்துரைகளின்படி கவனிக்கச் சொல்கிறது

அந்த வகுப்புக்கு ஆசிரியர் வருகிறார். அவர் அந்த
மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். எதைச்
செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று
கல்வித் தலைமைச் செயலகம் மூலம் தகவல்கள்
பெற்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

இதெல்லாம் தமிழிலேயே நடக்கிறது. ஏனெனில்
அது அந்தக் காலத் தமிழ்ப்பள்ளிக்கூடம்.

அங்கே ஆசிரியருக்கும் தமிழ் மட்டும்தான் தெரியும்
மாணவர்களுக்கும் தமிழ் மட்டும்தான் தெரியும்.

ஆனால் அங்கே அந்த ஆசிரியரின் மூலம்
கல்வித் தலைமைச் செயலகம் அந்த வகுப்பு
மாணவர்களுக்குச் சொன்னவை யாவும்
உலகம் முழுவதும் உள்ள கல்விக் கூடங்கள்
அனைத்திற்குமான சட்டதிட்டங்கள்.

இனி கல்வித் தலைமைச் செயலகம் எது
ஆசிரியர் யார் மாணவர்கள் யார் என்று நான்
சொல்லத் தேவையில்லை என்று நம்புகின்றேன்.

ஆயினும், குர்ஆன் அரபியர்களுக்காக மட்டுமே
இறக்கப்பட்டது என்று இக்கட்டுரை கூறுவதாக
நினைப்பவர்களுக்காக ஒரு சிறு மாறுதலை
கீழே உள்ளதுபோல் செய்யலாம்

குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டதற்கான
காரணங்கள் இரண்டு

ஒன்று:
குர்ஆன் எவரின் வழியாக இறக்கப்படுகிறதோ
அவருக்கு அது புரியவேண்டும்

இரண்டு:
குர்ஆன் இறங்கும் காலகட்டத்தில் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்


No comments:

Post a Comment