Tuesday, September 18, 2012

நம்பிக்கையே காமதேனு - பாரதியார்

பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது.

நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது.

சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை.

குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்

No comments:

Post a Comment