இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும். இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.
இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புகிறான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்கிறான்.
இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் சிலர்.
தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்து விடுகிறார்கள்.
அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.
ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 14 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.
பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.
அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.
இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.
நிச்சயமாக இஸ்லாம் கல்வி கற்பதைத் தடுக்கவில்லை. நல்ல ஒழுக்கத்தையும் கட்டுப்பாடையுமே அது வலியுறுத்துகிறது.
சவுதி அரேபியாவில் இந்தியப் பெண்கள் அவர்கள் சொல்லும் கறுப்பு மேலங்கையைப் போட்டுக்கொண்டு மிக நன்றாகப் படிக்கிறார்கள். அப்படியானால் பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? நிச்சயமாக ஆடையில் இல்லை.
படிப்பது வேலைக்குச் செல்வதற்காக மட்டுமே என்று நினைப்பதும் தவறான எண்ணம்தான். கல்வி என்பது சூரியனைப் போன்றது. அது வந்துவிட்டால் குடும்பம் பிரகாசம் ஆகிவிடும். ஒரு பெண் கல்வியில் மேலோங்கிவிட்டால் போதும், தந்தை மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்பது முதலில் மறைந்து இருவரும் முடிவெடுக்கும் நிலை உருவாகும்.
பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் என்பது அவளுக்கும் தெளிவாகத் தெரியும். அவளின் மகளை அவள் எப்படி உருவாக்க வேண்டும் என்றும் தெரியும். ஆகவே பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று.
அவள் வேலைக்குச் செல்வதும் வேண்டாம் என்று நினைப்பதும் கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.
இஸ்லாம் பெண்களை வேலைக்குப்போகாதே என்றும் சொல்லவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றுதான். ஆனால் அந்த முடிவை எடுக்க வேண்டியவர்கள் கணவனும் மனைவியும்தான். வேறு எவரின் தலையீடும் இருத்தல் கூடாது.
மலேசியா போன்ற நாடுகளில் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. கல்வி, நிர்வாகம் போன்ற பல துறைகளில் முஸ்லிம் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். கல்வித்துறையில் அவர்களின் ஆட்சி பெருகி வருகிறது. மலேசியா ஓர் முஸ்லிம் நாடு. அங்கே முஸ்லிம் பெண்கள் கற்று உயர் பதவிகள் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.
இப்போதெல்லாம் அரபு நாடுகளிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாகக் கல்வியில் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறார்கள். பெண்கள் விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடான சவுதி அரேபியாவின்கூட ஆயிரக்கணக்கான பெண்கள் பெரிய நிறுவனங்கள் பலவற்றிலும் வேலை வாய்ப்புகள் பெற்று பணிக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் சொல்கின்றன.
முஸ்லிம் பெண்களை முன்னேற்ற முதலில் முஸ்லிம் ஆண்கள் முன்னேறவேண்டும். அவர்களே இன்னும் படிப்பில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயம்.
பெண்ணுக்கான முன்னேற்றப் படிகளை இன்னொரு பெண் அமைத்துத் தருவதை விட அந்த வீட்டு ஆண்கள் அமைத்துத் தந்தால் அதன் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.
முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு முஸ்லிம் ஆண்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் மனம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் முனைப்பாய் இருக்க வேண்டும். சகோதரி, மனைவி, மகள், பேத்தி என்று எல்ல்லோரையும் கற்றவர்களாக ஆக்குவது முஸ்லிம் ஆண்களிடம்தான் பெரிதும் இருக்கிறது.
முஸ்லிம் குடும்பங்களில் அதிக அளவில் திருமணத்தின்போது பெண்ணுக்கு வீடும் நகையும் பணமும் சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் நிலைதான் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது.
பெண்ணுக்கு அவளின் கல்வியே முதல் சீதனமாக அமைய வேண்டும். நன்கு படித்த பெண்ணையே திருமணம் செய்ய ஒரு படித்த மணமகன் விரும்புவான். இன்று முஸ்லிம் ஆண்கள் அதிகளவில் படித்து முன்னேறி வருகிறார்கள் என்பதால் பெண் கல்விக்கு இந்த சீதனமும் ஒரு தடையாக ஆகாது.
ஆகவே ஒரு முஸ்லிம் பெண் படிப்பதற்கு எதுவுமே தடையில்லை.
முஸ்லிம்பெண் வேலைக்குப் போகக்கூடாது என்று விரும்பிய காலம் இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. முஸ்லிம்கள் பிற்போக்குவாதிகள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றார்கள். முஸ்லிம் பெண் ஓர் அடிமை அல்ல என்ற தெளிவு இருக்கிறது.
வேற்று ஆணோடு ஒர் முஸ்லிம் பெண் பேசக்கூடாது என்ற நிலை மாறிவருகிறது. ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையே வளர்ந்து வருகிறது.
படிப்பறிவில்லாத முஸ்லிம் பெண்கள் தன்னைப்போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று பெண்கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்.
மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளில் பெண் கல்வியின் அவசியத்தைத் தவறாமல் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
இப்போது முஸ்லிம் பெண்களின் கல்வி குறைவானதாக இருந்தாலும், அது முன்புபோல மிகக் குறைவானதாக இல்லை. எல்லாவற்றுக்கும் துவக்கம் என்று ஒன்று வேண்டுமல்லவா. துவங்கிவிட்டால் பின் வேகம் அதிகரிக்கும். இது வேகம் அதிகரிக்கும் காலகட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. அதைப்போல முஸ்லிம் பெண்களின் கல்வியும் இனி மறையப்போவதும் இல்லை ஓயப்போவதும் இல்லை.
இன்னும் ஒரு பத்தாண்டுகளில் உலகில் முஸ்லிம் பெண்கள் தாண்டும் தூரம் மிக உயரமாகவே இருக்கும் என்று நம்புவோமாக.
No comments:
Post a Comment