Thursday, September 20, 2012

நபி பெருமானாரின் நகல்கள் நாங்கள்

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய படம் இன்று ஏழு பில்லியன் மக்களின் ஆவலைத் தூண்டுகிறது.

எந்த ஒரு கெட்ட செயலில் இருந்தும் ஓர் நல்லதைச் செய்துவிடமுடியும் என்பார்கள் ஞானிகள்.
 
நாசமாய்ப் போனவர்கள், ஆனால் அவர்கள் ஓர் அரிய வாய்ப்பினை முஸ்லிம்களுக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள்.

முகம்மது நபி அவர்களைத் தகாத முறையில் கற்பனை செய்து காட்டி கிட்டத்தட்ட ஒரு மஞ்சள் படம் எடுத்து சமூக தளங்கள் வழியே வெளியிட்டார்கள்.

முஸ்லிம்கள்  அந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்துவிட்டார்கள்!
 
இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உலகத்தின் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்திருந்தார்கள் உலக அரசியல் பொல்லாத கில்லாடிகள்.
 
நபி பெருமானாரின் அளவற்ற சகிப்புத் தன்மையை முன் நிறுத்தி, இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த அவப்பெயரை அப்படியே துடைத்து எறிந்திருக்கலாம்.
 
நாங்களெல்லாம் நபி பெருமானாரின் நகல்கள் என்று நிரூபித்திருக்கலாம்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஒன்றுகூடி பேசி இருந்தால், சிறந்த அறிஞர்களைக்  கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், அந்த அறிஞர்களின் குரல்களுக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுமைகளை விட்டொழித்து உடன்பட்டிருந்தால், நாம் இதைச் சாதித்திருக்க முடியும்.

இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை! இணையலாம்.

இப்போதும் காலம் முடிந்து போய்விடவில்லை. ஒற்றைக் குரலாய் உயரலாம்.

இப்போதும் காலம் கடந்து போய்விடவில்லை, நான் உசத்தி நீ உசத்தி என்பதை விட்டு அற்புதமான நபிகளின் ஈமான் வழியில் அப்படியே அவப்பெயரை சுத்தமாய் மாற்றி எடுக்கலாம்.

உலக இஸ்லாமிய சமூகங்களின் பொருப்பாளர்கள் முன் வரவேண்டும்.

உலக இஸ்லாமியர்கள் சீரிய சிந்தனையால் ஒன்றுபட வேண்டும்.

இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதையே விரும்புவதாக உலகத்துக்கே அழுத்தமாக அறிவிக்க வேண்டும்

ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் முன்னேற்ற வாழ்வில் இணைவதற்கு ஒன்றுபடாவிட்டாலும், நபி பெருமானாரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக போராடுவதற்காகவாவது ஸுன்னா, ஷியா மட்டுமின்றி அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.

எந்த ஒரு கெட்டதிலும் ஓர் நல்லது நிகழும்தான், உண்மை!

இதையே பயன்படுத்திக் கொண்டு ஒற்றுமையை உறுதிசெய்ய முன் வருவார்களா இஸ்லாமியச் சமூகப் பொருப்பாளர்கள்? இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உயர்த்திப் பிடிப்பார்களா?

ஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப் பட்டிருக்க வேண்டிய படம் இன்று ஏழு பில்லியன் மக்களின் ஆவலைத் தூண்டுகிறது.


அரபி மொழியில் இட்டதும் ஆர்ப்பட்டமென்றால், ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அமைதியை நாடும் இஸ்லாத்தின் அடிப்படைகளை நடைமுறைப் படுத்த அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் கற்றுத்தர வேண்டும்.

இதில் முக்கியமான விசயம் யாதெனில், உலக முஸ்லிம்களைக் கொதிப்படையச் செய்யவேண்டும் என்பதே படம் எடுத்தவர்களின் நோக்கம்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதையை உண்மையாக்கிக் காட்ட வேண்டும் என்பதே இவர்களைப் போன்றவர்களின் பேராசை.

உலக முஸ்லிம்களில் சிறந்த சிந்தனாவாதிகளும் இருப்பர். சாதாரணமானவர்களும் இருப்பர்.

மனவீரம் கொண்ட அழுத்தமானவர்கள் இருப்பர் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு அடிதடியில் இறங்குபவர்களும் இருப்பர்.

உலக வாழ்க்கை நடைமுறையில் இந்தப் படம் போல எத்தனையோ செயல்கள் நடக்கும்.

அவற்றுக்கெல்லாம் அறிவின் வழி தீர்வு வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கலவரம் செய்யும் நிலை கூடாது

அப்படியானால், உலக அளவில் முஸ்லிம்களுக்கென்று ஓர் சிந்தனை வட்ட அமைப்பு வேண்டும்.

அந்த அமைப்பு அதிகாரம் காட்டுவதற்கானதாய் இருக்கக் கூடாது.

அரசியல் செய்வதற்கானதாய் இருக்கக் கூடாது.

ஆலோசனைக் குழுவாக இருக்க வேண்டும்.

உலகின் பல திசைகளிலும் உள்ள சிறந்த அறிஞர்கள் பலரையும் கூட்டி  அறிவுசார்ந்த அமைப்பு உருவாக வேண்டும்.

அவர்கள் 365 நாட்களும், இஸ்லாத்தின் நன்மை கருதி இன்றைய வாழ்வின் சிக்கல்களுக்கு முன்னேற்ற வழியில் தீர்வுகள் சொல்லவேண்டும்.

ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து சிறந்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதில் ஒருமித்த கருத்து வேண்டும். அதற்காக அனைவரும் இணக்கமான வழியில் பாடுபடவேண்டும்

இப்போது இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்பவர்கள், மூலைக்கு ஒருவராய் இருந்துகொண்டு ஒருவர் சரி என்பதும் இன்னொருவர் தவறு என்பதுமாய்த்தான் இன்றைய வாழ்க்கைச் சிக்கலுக்குக் கருத்துக்கள் தருகிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள்.

ஒரு அறிஞர் தவணையில் வீடு வாங்குவது ஹராம் என்கிறார். இன்னொரு அறிஞர் இல்லை அது ஹலால் என்கிறார்.

இந்த நிலையில் மக்கள் என்ன செய்வார்கள்?

அடப் போங்கடா என்று வாழ்க்கை அழைத்துச் செல்லும் அவர்கள் வழியில் செல்வார்கள் சிலர்.

அப்படியே முடங்கிப் போய் உட்கார்ந்துவிடுவார்கள் சிலர்.

நஷ்டம் யாருக்கு?

நாம் ஒன்றைச் சொல்லும்போது இந்த சமுதாயம் வளருமா அல்லது  தேயுமா என்றுகூட சிந்திக்காமல் இஸ்லாமிற்கு மாற்றமாக தங்களின் குறை அறிவுடன் அறிவுரை சொல்பவர்களை என்ன செய்வது?

முதலில் அவர்களுக்குத்தானே அறிவுரை தேவை?

ஆகவே இப்படியாய் உலகின் பல மூலைகளிலும் நிறைய தேவைகள் இருப்பதால், சிறந்த அறிஞர்களின் கூட்டுத் தீர்வு அமைப்பு என்பதுபோல சிறந்த அறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒன்று சேர்த்து ஒரு குழு உருவாக்க வேண்டும்.

அவர்களின் பரிந்துரைகளிள் இந்த உணர்ச்சிவசப்படும் சகோதரர்கள் வழி நடத்தப்பட்டால், இஸ்லாமியர்களுக்குப் பொய்யாய் முத்திரை குத்தி வைத்திருக்கிறார்களே “தீவிரவாதிகள்” என்று அது முதலில் ஒழியும்.

முகம்மது நபிகள் யார் என்பதை கோடி பல கோடி வீடியோக்களால் அதே உங்கள்திரை (YouTube) யில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்குவது முக்கியமான போராட்ட முறைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்கிறவர்களுக்கு முஸ்லிம்கள் அமைதியே உருவானவர்கள் என்பதைக் காட்டும் வகையில் நம் அறிவிப்புகளும், கண்டனங்களும் இருக்க வேண்டும்.

முகம்மது நபிகள் பற்றிய உண்மைக் கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என்று முகம்மது நபிகளை அறியாதவர்களுக்கு அறியத் தரும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு

போராட்டம் என்றால் என்ன என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும்.
உங்கள்திரை YouTube முழுவதையும் நபி பெருமானாரின் சிறப்புகளைப் பேசி நிறப்புவதை விட வலிமையான ஒரு போராட்டம் இருக்க முடியுமா?
உங்கள்திரை மட்டுமா இருக்கிறது, முகநூல் உண்டு, டிவிட்டர் உண்டு, இன்னும் பல வழிகள் உண்டு.
நபிபெருமானாரின் மீது உங்களுக்குள்ள அன்பை அங்கே காட்டுங்கள்.
கொடிபிடித்துக் கோசம் போடுவது அந்தக் காலம். இன்று இணையம்தான் எல்லாம்.
இணையம் மூலமாகத்தான் எகிப்தில் அரசியல் மாற்றம் வந்தது.
அந்த அற்புத ஊடகத்தை விட்டுவிட்டு எங்கே போய் எதைச் சாதிக்கப் போகிறோம்? 
கோசம் போடுவதால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.
இணையத்தில் நபிபெருமானாரின், இஸ்லாத்தின் சிறப்புகளை பரப்பும் வீடுயோக்கள் ஆடியோக்கள் என்ற ஆயுதங்களை எடுங்கள்.
அன்று கத்தி பேசியது போதும், பிறகு கத்திப் பேசியதும் போதும். இனி புத்தி பேசட்டுமே!

இந்த உலக முஸ்லிம்கள் அனைவரும் அடிப்படைவாதத்தைக் கைவிட்டு உலகக் கல்வியிலும் ஆன்மிகக் கல்வியிலும் உயர்ந்துவிட்டால் ஒவ்வொருவரும் சிறந்த மார்க்க அறிஞராகிவிடுவர். பிறகு அறிவுரைக்கென்று எவரின் தேவையும் இருக்காது. இதையே இறைவன் விரும்புகிறான். குர்-ஆன் ஒன்றே போதுமென்கிறான்.

உலகின் பல மூலைகளிலும் அமைதியான முறையில் எதிர்ப்புகள் காட்டப்படும்போது சில இடங்களில் மட்டும் வன்முறை எழுந்ததைச் சற்று உற்றுக் கவனித்தால் அங்கே என்ன குறை என்பது தெளிவாகும். அந்தக் குறையைக் களைந்தால்தானே இஸ்லாத்தின் உண்மை முகம் உலகுக்குத் தெரியும்?

கடல் என்றால் அதில் எந்தப் படகும் ஓடும் உங்கள் படகை அழகாக ஓட்டுங்கள்.

உங்கள்திரை (YouTube) போன்ற சமூகக் கருவிகளை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துதலே அறிவுடைமை.

சமூக வலைத்தளங்கள் எல்லோருக்கும் பொதுவாகவே சட்டங்களை இயற்றி அதுபோலவே பயணப்படுகின்றன.

அவர்கள் ஏதும் பாரபட்சம் காட்டுவதில்லை.

அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.

எந்த நாடு அந்த வீடியோவைத் தடுக்கக் கோரியதோ அந்த நாடுகளுக்கு அந்த வீடியோ சமூக தளங்களால் தடைசெய்யப்பட்டுள்ளது.

அந்த படத்தைத் தடை செய்யக் கூறி மக்கள் நிச்சயம் குரல் எழுப்ப வேண்டும்.
ஆனால் சமூக இணைய தளங்களே வேண்டாம் என்று கூறுவது அறிவு வழி சிந்தனையல்ல.

இஸ்லாம் மார்க்க்த்தால் ஆதாயம் தேடாத, இஸ்லாம் மார்க்கத்தை அரசியல் ஆக்காத நல்லவர்கள்தாம் உண்மையான இஸ்லாமியர்கள்.

உண்மையான இஸ்லாமியர்களிருந்துதான் உண்மையான இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக முடியும்.

அப்படியான உண்மையான இஸ்லாமிய அறிஞர்கள்தாம் இஸ்லாமியர்களின் நல் வாழ்க்கைக்கு வழிசொல்பவர்களாய் இருப்பார்கள்.

நாம் அறிவற்ற உணர்ச்சிமிகு வழிகளைக் கைவிட்டு நபிகள் அன்பு அமைதி சாந்தம் சமாதானம் பொறுமை ஆகியவைகளைப் போற்றிய பெருமானாரின் நகல்களாய் ஆவோமாக, ஆமீன். 

No comments:

Post a Comment