இஸ்லாமிய அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் முன்னேற்ற வழிகளைச் சொல்லித் தருபவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு சில இஸ்லாமிய அறிஞர்கள் முன்னேற்றப் பாதையையே கருத்தில் கொள்ளாமல் தங்களின் அரைகுறை ஞானத்தைக் கொண்டு நல்லவற்றைத் தடுத்து இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
தங்களின் அரைகுறை அறிவோட்டத்தால் இவர்கள் இறைவனுக்கும் நபி பெருமானாருக்கும் தவறான பிம்பங்களை உலகத்தார் மத்தியில் கற்பிக்கிறார்கள்.
அது உலக இஸ்லாமிய சமூகத்திற்கு பெரும் தீங்காக அமைகிறது.
இஸ்லாமிய குடும்பங்களை முன்னேறவிடாமல் சில இஸ்லாமிய அறிஞர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவும் அறிவின் குறைபாடு காரணமாகவும் தவறான புரிதல்களின் காரணமாகவும் தடுக்கிறார்கள்.
அனைத்தும் அறிந்தவன் இறைவன் ஒருவனே என்பதை மறந்துவிடுகிறார்கள்.
குர்-ஆன் கூறும் அடிப்படைகளைக் கொண்டு பார்க்க வேண்டியவற்றைத் தவறாக, அதே சம்பவம் அப்படியே இருக்கிறதா இதே பெயரில் இப்படியே இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.
அப்படி அனைத்திற்கும் இருக்கப் போவதில்லை. இதை அனைவரும் அறிவோம்.
அப்படி அனைத்திற்கும் வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் சம்பவத்துக்குச் சம்பவம் இருக்காது என்பதால், இவர்கள் அதையே காரணமாகக் கூறி அவற்றைத் தடுப்பதால், இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கே பொருத்தமானது என்று இவர்களே தவறான வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
ஒரு கேள்விக்கு விளக்கம் கூறும்போது, சொல்லுக்குச் சொல் வார்த்தைக்கு வார்த்தை சம்பவத்துக்குச் சம்பவம் என்பதைத் தேடித்தருவதற்கு தேடு இயந்திரங்கள் இணையத்தில் பெருகிக்கிடக்கின்ற இந்தக் காலத்தில்.
வாசித்ததை வாசித்த மாதிரியே எடுத்து பதிலாகக் கூறுவது கிளிப்பிள்ளைகள் செய்கின்ற வேலை. அதைச் செய்ய அறிஞர்கள் தேவையே இல்லை.
அறிஞர்கள் என்றால், இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப சிக்கலான இன்றைய பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி இஸ்லாமியர்களின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல தீர்வுகளைத் தருபவர்கள்தாம்.
கணினி என்ற ஒன்றே இல்லாத காலத்தில் கணினியின் பயன்பாடு பற்றியும் இணையத்தின் செயல்பாடு பற்றியும் எழும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது?
குர்-ஆனின் அடிப்படையை ஆழமாக உள்வாங்கி உணர்ந்து பதில்கூற விழையாமல் அது எப்படி முடியும்?
செல்போன் வேண்டுமா வேண்டாமா அதன் பயன்பாடுகளின் சிக்கல்கள் என்பதைப் பற்றியெல்லாம் கூறுவதென்றால் எப்படி?
விமானம் ராக்கெட் போன்ற புதிய ஊர்திகளின் பயணத்தைப் பற்றி எல்லாம் கூறுவதென்றால் எப்படி?
இரவே இல்லாத ஊர்களில் நோன்பு நோற்பதைப் பற்றிக் கூறுவதென்றால் எப்படி?
இவை போன்ற லட்சம் பல லட்சம் கேள்விகள் இருக்கின்றன வளரும் உலகில் இன்னமும் பெருகிய வண்ணமே இருக்கும்
இவற்றுக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது எதைக்கொண்டு தீர்வு காண்பது?
குர்-ஆனின் அடிப்படையை உள்வாங்கிக்கொண்டால் போதும் தீர்வு தானே வந்துவிடும்.
அதை விட்டுவிட்டு 1400 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் பொருத்தம் தேடுவது என்பது யானையைக் குருடர்கள் தடவித் தடவிப் பார்த்து முறம் என்றும் தூண் என்றும் சுவர் என்றும் கூறுவதைப் போல் ஆகாதா?
சற்றே இஸ்லாமிய அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். விழிகளை விரித்து இறைவனைக் காணவேண்டும். இறைத் தூதரைக் காணவேண்டும். குர்-ஆனின் அடிப்படையைக் காணவேண்டும். இறைத்தூதர் வாழ்க்கையின் நோக்கங்களைக் காணவேண்டும். இஸ்லாம் என்றால் என்னவென்ற அடிப்படைத் தத்துவங்களைக் காணவேண்டும்.
இஸ்லாமை அறிந்துகொள்வதிலும் பகிர்ந்துகொள்வதிலும் முனைப்பாய் இருக்கின்ற இஸ்லாமிய அறிஞர்கள் தெளிந்த அறிவு கொண்ட பார்க்கும் பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
இணைவைத்தல் கூடவே கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த ஏகத்துவக் கொள்கையில் தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்.
உலக வாழ்க்கைப் பயணத்தில் ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும் தீர்வு காண்பதும் தவறானதல்ல வரவேற்கப்பட வேண்டியது.
ஆயினும், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும் இஸ்லாத்தின் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத அக்கறையும் கவனமும் எப்போதும் எல்லோருக்கும் இருத்தல் கடமையாக வேண்டும்
இறைவன் நமக்கு அறிவினைக் கொடுத்துள்ளான். இறைவனின் படைப்புகளிலேயே உயர்ந்த படைப்பு மனிதன்தான் என்று அவன் கூறுகிறான். அவனது நம்பிக்கை மனிதன் மீது எத்தனை உயர்வானதாக இருக்கிறது என்று பெருமை கொள்ளுதல் வேண்டும். அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாம் அறிவுடையவர்களாக அவன் தந்த அறிவைனைப் பயன்படுத்துதல் வேண்டும்.
இறைவன் குர்-ஆனை எளிமையாகக் கொடுத்திருக்கிறான். நல்லவை கெட்டவைகளை குர்-ஆனின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு அணுகவேண்டிய வழிகளைக் கொடுத்திருக்கிறான்.
எந்த வகையிலும் ஒரு முஸ்லிம் கல்வி, செல்வம், மனவீரம், நிம்மதி, அருள் போன்ற உயர்வானவற்றைப் பெறுவதை மத அறிஞர்கள் தடுத்து இஸ்லாமிய சமூகத்தைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது.
இதுவே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களின் முன்னும் வைக்கப்படும் முக்கியமான வேண்டுகோள்.
இவ்வேளையில் சிறந்த சிந்தனையைக் கொண்டு சிறந்த தீர்வுகளை அமைதியான வழியில் எடுத்து இஸ்லாமிய சமூகத்தின் முன் வைக்கும் சில அருமையான இஸ்லாமிய அறிஞர்களுக்கு இறைவனின் அன்பும் அமைதியும் நிறைவான அருளாகட்டும். உலக மக்களின் நன்றிகள் படிகளாகட்டும்.
No comments:
Post a Comment