முகம்மது நபி உயிரோடிருந்த காலத்தில் குர்-ஆன் ஒரு நூலாக தொகுக்கப்பட்டிருக்கவில்லை
மனப்பாடமாகவும் தனித்தனியே ஏடுகளாகவும்தான் நபித்தோழர்களிடம் இருந்தது.
முகம்மது நபியின் காலத்திலேயே முசைலமா என்பவன் தானும் ஓர் இறைத்தூதர் என்று கூறிக்கொண்டிருந்தான்.
குர்-ஆனைப் போலவே வசனங்களையும் எழுதத் தொடங்கி இருந்தான்.
அதோடு அவன் மந்திரங்களும் செய்யக் கூடியவன்.
முட்டையை பாட்டிலுக்குள் இடுவான்.
அறுத்த சிறகுகளை மீண்டும் ஒட்டவைத்துப் பறவைகளைப் பறக்கச் செய்வான்.
இதனால் அவனை நம்பி அவனுக்கென ஒரு பெரும் கூட்டம் உருவாகி இருந்தது.
முதல் கலீபாவான (Khalifat Rasul Allah - Deputy of the Prophet - துணை இறைத்தூதர்) அபூபக்கர் முசைலமாவையும் அவன் கூட்டத்தாரையும் அழித்து முடித்தார்.
ஆனால் அந்தப் போரில் குர்-ஆனை மனப்பாடம் செய்துவைத்திருந்த எழுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் உயிரிழந்தார்கள்.
இதனால் நபித்தோழர் உமர், கலீபா அபூபக்கரை குர்-ஆனை எழுத்துவடிவ நூலாகக் கொண்டுவர வற்புறுத்தினார்.
முகம்மது நபி செய்யாத ஓர் காரியத்தை நான் எப்படிச் செய்வேன் என்று கலீபா அபூபக்கர் தயங்கினார் பின்னர் அவசியம் கருதி சம்மதித்தார்.
சயீத்-பின்-சாபித் என்ற இளைஞரின் தலைமையில் குர்ஆன் தொகுக்கும்பணி நடைபெற்றது.
தொகுக்கப்பட்ட ஏடுகள் கலீபா அபூபக்கரின் மரணத்திற்குப்பின் கலீபா உமரிடம் வந்தன.
கலீபா உமரின் மரணத்திற்குப்பின் அவர் மகளும் முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சாவிடம் வந்தன.
முழுமைபெற்ற ஒரு தொகுப்பு ஹப்சாவிடம் இருந்தபோதும் அரைகுறையாக மனப்பாடம் செய்யப்பட்ட குர்ஆனின் பகுதிகள் உலகெங்கும் பரவத் தொடங்கின.
இது பெரும் குழப்பத்தை விளைவித்தது.
இதையறிந்த மூன்றாம் கலீபா உதுமான் குர்-ஆனை மாற்றங்கள் இல்லாத ஒரு முழு நூலாக வடிவமைத்தார்.
கலீபா உதுமான்தான் இப்போது இருக்கும் குர்-ஆனின் அத்தியாயங்களை வசிசைப்படுத்தியவர்.
முகம்மது நபி இந்த முறையில் அத்தியாயங்களை வரிசைப்படுத்தி இருக்கவில்லை
ஆகவேதான் குர்-ஆனை எந்த அத்தியாயத்திலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கலாம்.
இறைவனின் வசனங்கள் எப்படி அருளப்பட்டதோ அதே கால வரிசையில் எவரிடமும் இல்லை.
முகம்மது நபியின் மருமகன் அலி ஒருவர் மட்டுமே அதே வரிசையில் எழுதி வைத்திருந்தார்.
மக்காவில் அருளப்பட்டவற்றை முதலிலும் மதினாவில் அருளப்பட்டவற்றை பிறகுமாக அவர் எழுதி வைத்திருந்தார்.
இன்றைய குர்-ஆனின் தொன்னூற்றி ஆறாவது அத்தியாயம்தான் முதல் அத்தியாயமாக அவரது ஏட்டில் இருந்தது.
இப்படியாய் நபித்தோழர்கள் பலரும் அத்தியாயங்களின் வரிசையைப் பலவாறு அமைத்திருந்தனர்.
இதனால் கலீபா உதுமான் தன்னிடம் உள்ள பிரதியைத் தவிர மற்ற பிரதிகளைத் தீயில் இட்டு அழிக்கக் கேட்டுக்கொண்டார்.
அழிக்காமல் அப்படியே வைத்திருந்த அலியும் பிறகு தன் பிரதியை அழித்துவிட்டார்.
இப்படியாய் முகம்மது நபி இறந்த பதினாறு ஆண்டுகளுக்குள் குர்ஆன் என்ற நூல் முழு வடிவம் பெற்றுவிட்டது.
No comments:
Post a Comment