Sunday, October 21, 2012

பெண்களை ஏன் நபிகளாக இறைவன் நியமிக்கவில்லை?

இஸ்லாத்தில் பெண்களின் கல்வி, வேலை, முன்னேற்றம் என்று பேசத் தலைப்பட்டால், சிலருக்கு அது ஏற்றுக்கொள்ளும் விடயமாக இல்லை. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து யாதெனில், பெண்களில் இறைவன் நபிமார்களை அனுப்பவில்லை. ஆகவே பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று இறைவனே சொல்லிவிட்டான் என்கிறார்கள்.

பெண் நபிமார்கள் இறைவனால் அனுப்பப்படவில்லை என்பதற்கு அவர்கள் முன்வைத்த இறைவசனம்:

16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் செய்தி கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).

وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۚ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

இந்த இறைவசனத்தில் சிவப்பு மையினால் சுட்டிக்காட்டப்பட்ட சொல்லை ஆண் என்பதற்காக இறைவன் பயன்படுத்தினான் என்கிறார்கள்.

*

அதே அரபுச் சொல்லை இறைவன் ஆண் பெண் சேர்ந்த மக்களுக்காகப் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான்

7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"

وَنَادَىٰ أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُم بِسِيمَاهُمْ قَالُوا مَا أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
38:62. இன்னும், அவர்கள்: "நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
وَقَالُوا مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًا كُنَّا نَعُدُّهُم مِّنَ الْأَشْرَارِ


இந்த இறை வசனத்தில் அதே சிவப்பு மை அரபிச் சொல் மனிதர்களென்று ஆண்களையும் பெண்களையும் சேர்த்தே சொல்லுகிறது
  
22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ


இந்த இறைவசனத்திலும் சிவப்பு மை அரபுச் சொல் ஆண் பெண் வேறுபாடின்றி மனிதர்களையே குறிக்கின்றது. இது போல நிறைய வசனங்கள் குர்-ஆனில் உண்டு.


45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.

45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

இந்த இறைவசனங்களில் ”கேட்கிறான்” “அவன்” “செய்கிறான்” என்று கூறுவது ஆண்களுக்கா பெண்களுக்கா அல்லது இருவருக்குமா என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை

இறைவனை ”அவன்” என்றே அவன் குறிப்பிடுகிறான். இறைவன் ஆணா பெண்ணா?

அரபு மொழியில் மட்டுமல்ல உலக மொழி அனைத்திலும் அவன், அவனை என்று குறிப்பிடுவதெல்லாம் இரு பாலரையும்தான்.

”மனிதன் மிருகம் ஆகலாம்”
“அழிவுப் பாதையில் மனிதன்”

இப்படி எல்லாம் அன்றாடம் ஆயிரம் சொற்றொடர் காண்கிறோம். இதில் மனிதன் என்றால் ஆணா பெண்ணா அல்லது இருபாலருமா?
*
 
இறைவன் நபி மூஸா (அலை) அவர்களின் தாயாரிடம் செய்தியை அறிவித்தான் என்று 20:38, 28:7 இறைமறை வசனங்களிலும், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபி ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களுக்கு இறைச் செய்தியை அறிவித்ததை 3:47, 19:17 ஆகிய இறைமறை வசனங்களில் கூறப்பட்டுள்ளன. இவை அந்தப் பெண்களுக்கான சிறப்பாக அறிவிக்கபட்டுள்ளதே தவிர, பெண்களில் நபித்துவம் வழங்கப்பட்டவர் என்று குர்ஆன், சுன்னாவில் உறுதிப்படுத்தவில்லை!
 
என்றார்கள்
*
 
இறைவன் மனிதர்களிடம் நேரடியாய்ப் பேசுவதில்லை. அவன் இறைத்தூதர்களின் வழியாகத்தான் பேசுகிறான்.
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
*
 
நபிமார்களில் பெண்கள் இருக்கின்றனரா என்பதை நம் விருப்பத்திற்கு முடிவு செய்யாமல், இறைவனே அறிவான் என்பதே சரியானதாக இருக்கும்.

நபிமார்களில் பெண்கள் வந்திருக்கலாம். வந்தார்களா என்பதை இறைவனே அறிவான். வரவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல நமக்கு ஆதாரங்கள் இல்லை.

நான் பெண்களை நபிமார்களாக அறிவிக்கமாட்டேன் என்று இறைவன் எந்த வசனத்திலும் குறிப்பிடவில்லை.

 

No comments:

Post a Comment