காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன
தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள்.
ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.
இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது.
தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோதரர் பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது.
புல்புல் என்று முகம்மது நபி அவர்களால் பிலால் அழைக்கப்பட்டார்.
எங்கள் மீதொரு
பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து
விடைபெற்று வருகிறது
என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.
எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்று.
அதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சவுதியிலும் கேட்கலாம்.
இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குர்-ஆன் ஓதுதல் இசை
தொழுகைக்கான அழைப்பு இசை
தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.
No comments:
Post a Comment