சுன்னா என்ற அரபிச் சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள்.
ஆரம்ப காலத்தில் முகம்மது நபியின் வாழ்க்கைமுறை குர்-ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள்.
தங்களின் சொந்தக் கருத்துக்களை முகம்மது நபி அவர்கள் கூறியவை என்றார்கள் அதாவது சுன்னா என்று கூறினார்கள்.
ஆதாரப் பூர்வமான அனைத்து ஹதீதுகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாகும். இருப்பினும் ஆதாரம் உள்ள ஹதீதுகளுக்கு மத்தியில் அவைகளின் தரத்திலும் வலிமையிலும் சில படித்தரங்களை ஹதீத்கலை வல்லுனர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
அன்றைய காலத்தில் நபி அவர்களைப் பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்களுக்கு சொன்னவர்கள் யார் யார் என்று அத்தனை பேர்களையும் சொல்லி முடித்தால்தான் அதை உண்மையான ஹதீத் என ஏற்பார்கள்.
இப்படி அறிவிக்கும் இந்த செய்திகளையும் வடிகட்டினார்கள். சில ஹதீதுகளை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை ஏற்பார்கள்.
இவர்களில் யாராது ஒருவர்
-பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா?
-ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்கூடியவர்களா?
-தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்கூடியவர்களா?
-மறதியினால் மாற்றிச் சொல்லக் கூடியவர்களா?
இப்படி பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.
ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா என்பதைக் கண்டுபிடிப்பது என்பது உண்மையில் இயலுமான காரியமாக இல்லை.
காலமெல்லாம் பொய் சொல்லாமல் ஏதோ ஒரு சமயத்தில் பொய் சொல்பவர்கள் உண்டு. சந்தர்ப்ப சூழலால் பொய் சொல்பவர்கள் உண்டு.
கட்டாயத்தால் பொய் சொல்பவர்கள் உண்டு.
நன்மையை விளைவிக்கும் என்று அவரே ஓர் முடிவினை எடுத்துப் பொய் சொல்பவரும் உண்டு.
எனவே இறைவனைத் தவிர வேறு எவராலும் ஒருவர் பொய் சொல்லக் கூடியவரா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது இயலுமான காரியமாக இல்லை.
ஆகவே To the best of our knowledge (நாங்கள் அறிந்தவரை) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதன் அடிப்படையில் இருக்கும் தகவல்களைக் கொண்டு அவர்கள் அறிந்தவரை நியாயமான முறையில் முடிவெடுத்தார்கள்.
ஒரு செய்தியைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்ல வேண்டும் என்றால் அந்தச் செய்தியின் வார்த்தைகளும் எழுத்துக்களும் மாற்றாமல் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மையான ஹதீதுகள் செவிவழிச் செய்தியாகவே வந்திருக்கின்றன.
அதுவும் 200 ஆண்டுகளுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அதுவும் படிப்பறிவே இல்லாத பெரும்பான்மையினரிடமிருந்து. இதில் மனிதப் பிழை நிகழ ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.
அறிவிப்பாளர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்றாலும், அவர்கள் நல்லவர்களே என்றாலும் பொய்யே சொல்லாதவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என்றாலும் ஒரு செய்தியை பத்துப் பன்னிரண்டு தலைமுறைகளுக்குக் கடத்தும் போது அதில் ஒரு வார்த்தை மாறினாலும் பொருள் மாறும் நிலை இருந்தது.
ஆகவே இதையும் அவர்கள் அறிந்தவரை நியாயமான முறைவில் முடிவெடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment