Sunday, October 7, 2012

ஆயிசா முகம்மது நபி என்று அழைக்கலாமா?


ஆயிசா முகம்மது நபி என்று ஓர் கட்டுரையில் ஆயிசா (ரலி) அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன். இது முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எளிமையாக இருக்க  வேண்டும் என்பதே நோக்கம். 

ஆயிசா முகம்மது என்றோ, ஆயிசா முகம்மது நபி என்றோ எழுதுவது நம்முடைய மரபல்ல.  மனைவி பெயருடன் கணவர் பெயரை இணைத்து எழுதுவது இஸ்லாமிய மரபல்ல.

மக்களை
அவர்களின் தந்தையர் பெயர் கொண்டே
அழையுங்கள் (குர்-ஆன் 35: 5)

என்ற இறைவசனத்தின் அடிப்படையில் ஒருவரை அவரது தந்தையல்லாதவரின் பெயருடன் (கணவராக இருப்பினும்) இணைத்து அழைப்பது தடுக்கப்பட்ட ஒன்று. நாம் இன்று அவ்வாறு பயன்படுத்துவது இஸ்லாமியர் அல்லாதோர், மற்றும் மேற்கத்தியரின் முறையாகும். எனவே, தந்தையாரின் பெயருடன் எழுதுவதே முறையாகும் என்று இனிய இஸ்லாமிய சகோதரர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்த என் ஆய்வினை இங்கே இடுகிறேன்.



குர்-ஆன் 33:4:

எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.


இந்த இறைவசனத்தில் தம் மக்கள் அல்லாத சுவீகாரப் பிள்ளைகளாக ஆக்கிக்கொண்டவர்களைப் பற்றியே இறைவன் கூறுகிறான். நமக்குப் பிறந்த பிள்ளைகளைப் பற்றி அல்ல.

இதைத் தொடர்ந்த அடுத்த வசனத்தைக் காண்போம்.


குர்-ஆன் 33:5:

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


நாம் யாரை பெற்றெடுக்காமல் எடுத்து வளர்க்கிறோமோ அவர்களுக்கு நம் பெயரை இணைத்து அழைக்கைக் கூடாது, அவர்களுடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டே அழைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நம் பிள்ளைகள் ஆகமாட்டார்கள்.

ஆகவே கணவனின் பெயரை மனைவியின் பெயருக்குப் பின் இட்டு அழைப்பதை இந்த வசனத்தின் மூலம் குர்-ஆன் தடுக்கவில்லை.

மேலும் அரபியர்களின் பழக்க வழக்கங்களை இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்கள் என்று எண்ணிக்கொள்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இஸ்லாம் அரபியர்களுக்குச் சொந்தமானதல்ல. அரபி மொழி மட்டுமே உயர்ந்ததும் அல்ல. அரபியர்கள் மட்டுமே உயர்ந்தவர்களும் அல்ல.

நாம் இஸ்லாத்திற்கு முரண் இல்லாத உலக பழக்க வழக்ககளை தாராளமாக மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment